BSNL பரிதாபங்கள்.. ரூ.28000 கோடி கேட்டது ஒரு குத்தமா.. ஒரே குத்தா குத்திவிட்ட 27000 கஸ்டமர்கள்!
உண்மையாவே இது பிஎஸ்என்எல் (BSNL) கம்பெனி தானா என்று கேட்கும் அளவிற்கு.. இலவச சிம் கார்டு உடன் ரூ.1 க்கு 4ஜி பிளான், நாடு முழுவதும் வாய்ஸ் ஓவர் வைஃபை என்கிற வோவைஃபை (VoWiFi) சேவை, பட்ஜெட் 2026 இல் ரூ.28,473 கோடிக்கான முன்மொழிவு, அடிக்கடி பல திட்டங்களின் மீது ஆபர், எக்ஸ் தளத்தில் பயங்கர ஆக்டிவ் என.. கடந்த பல மாதங்களாக பிஎஸ்என்எல்-ன் நடவடிக்கை "ஆஹா ஓஹோ" என்று வாய்பிளக்க வைத்தது.
ஆனாலும் "என்ன புண்ணியம்?" என்கிற படியாக.. 27000 பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் ஒன்றுகூடி ஒரு பெரிய சம்பவத்தை செய்துள்ளனர். டிராய் (TRAI) என்கிற இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி கடந்த டிசம்பர் 2025 இல் இந்தியாவில் புதிய வயர்லைன் பயனர்களை சேர்த்த தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் ஜியோ மற்றும் ஏர்டெல் மட்டுமே ஆகும்.

அதாவது பிஎஸ்என்எல் ஆனது புதிய வயர்லைன் பயனர்களை சேர்க்கவில்லை கூடவே பல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை இழந்தும் உள்ளது. டிராய் அறிக்கையின்படி பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் மற்றும் MTNL (மகாநகர் டெலிபோன் நிகம் லிமிடெட்) ஆகிய இரண்டும் முறையே 27,578 மற்றும் 31,425 பயனர்களை, டிசம்பர் 2025 இல் இழந்துள்ளன. இந்தியாவில் - மூன்றாவது பெரிய தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர் ஆக திகழும் வோடபோன் ஐடியா (Vi) ஒரே நேரத்தில் 27,578 பயனர்களை இழந்துள்ளது
இதன் அடிப்படையில் வயர்லைன் சந்தாதாரர்கள் துறையில், ஜியோ 31.14% சந்தை பங்கை கொண்டிருந்தது, அதே நேரத்தில் பாரதி ஏர்டெல் 23.13% சந்தை பங்கை கொண்டிருந்தது. ஜியோ நிறுவனம் ஆனது வயர்லைன் பிரிவில் அதிக பயனர்களை சேர்ப்பது மட்டுமல்லாமல், மிகப்பெரிய FWA (நிலையான வயர்லெஸ் அணுகல்) சேவை வழங்குநராகவும் உள்ளது. FWA சேவைகளை பொறுத்தவரை, இந்த தொலைத்தொடர்பு நிறுவனம் 10 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது.
வயர்லெஸ் பிரிவிலும் ஜியோ கலக்குகிறது. மேற்க்குறிப்பிட்ட மாதத்தில் சுமார் 2.9 மில்லியன் பயனர்களை ஜியோ சேர்த்தது. ஆச்சரியப்படும் விதமாக, ஏர்டெல் அதே காலகட்டத்தில் 5.4 மில்லியன் பயனர்களை சேர்த்தது. பொதுவாக ஜியோ தான் அதிக பயனர்களை சேர்க்கும். வோடபோன் ஐடியா, வழக்கம் போல், வாடிக்கையாளர்களை இழந்து கொண்டே இருக்கிறது. வோடபோன் ஐடியா சுமார் 0.9 மில்லியன் பயனர்களை இழந்தது. பிஎஸ்என்எல் சுமார் 2 லட்சம் வாடிக்கையாளர்களை அல்லது 0.2 மில்லியன் பயனர்களை இழந்தது.
ஒட்டுமொத்த பிராட்பேண்ட் சந்தையை பொறுத்தவரை, ஜியோ 50% க்கும் அதிகமான பங்கை கொண்டிருந்தது. ஏர்டெல் 30% க்கும் அதிகமான பங்கை கொண்டிருந்தது. இதன் பொருள், முன்னணி ஆபரேட்டர்கள் இருவரும் சந்தையில் 80% க்கும் அதிகமான பங்கை கொண்டிருந்தனர், ஜியோ பெரும்பான்மையை கொண்டுள்ளது.
வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் மற்றும் MTNL உள்ளிட்ட பிற அரசு நடத்தும் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மிக குறைந்த பங்கை கொண்டுள்ளனர். ஜியோ மற்றும் ஏர்டெல் ஒவ்வொரு காலாண்டிலும் அதிக வணிகத்தை ஈட்டி வருவதால், இந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இந்த சிறிய பங்கு தொடர்ந்து குறைந்து வருகிறது.
பிஎஸ்என்எல்-ன் வோவைஃபை சேவை: வாய்ஸ் ஓவர் வைஃபை என்கிற வோவைஃபை தொழில்நுட்பம் ஆனது டெலிகாம் சந்தாதாரர்கள் வைஃபை மூலம் வாய்ஸ் கால்கள் மற்றும் வாய்ஸ் மெசேஜ்களை மேற்கொள்ளவும், பெறவும் அனுமதிக்கிறது. இது சவாலான சூழல்களில் (அதாவது நெட்வொர்க் சரியாக கிடைக்காத அல்லது இல்லாத பகுதிகளில் அல்லது நேரங்களில்) மேம்பட்ட இணைப்பை வழங்குகிறது.
வைஃபை காலிங் என்றும் அழைக்கப்படும் வோவைஃபை சேவையானது, இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது. வோவைஃபை சேவையின் இந்த நாடு தழுவிய வெளியீடு ஆனது பிஎஸ்என்எல்-ன் நெட்வொர்க் நவீனமயமாக்கல் திட்டத்தில் ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது.


Click it and Unblock the Notifications








