பிஎஸ்என்எல் 5ஜி சேவை ரெடி! தனியாருடன் அதிரடி ஒப்பந்தம்! ஆனால், இவங்களுக்கு மட்டும்தான்!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் 5ஜி சேவைகளை வழங்குவதற்கு, எல்&டி டெக்னாலஜி சர்வீசஸ் (L&T Technology Services) நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் யாருக்கெல்லாம், 5ஜி சேவை கிடைக்கும்? இதனால் நன்மைகள் உள்ளதா? உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
இந்தியாவின் மிகப்பெரும் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ (JIO), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகியவை 4ஜி சேவையை வழங்கிவிட்டு, 5ஜி சேவைக்கு மக்களை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதில் ஜியோ, ஏர்டெல் பெரும்பாலான நகரங்களில் 5ஜி சேவையை வழங்கவே தொடங்கிவிட்டன. ஆனால், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் 4ஜி சேவைக்கான பணியை மட்டுமே தொடங்கியிருக்கிறது.

அதுவும்கூட இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் விரக்தி அடைந்து, மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு மாற தொடங்கிவிட்டனர். இப்படி தொடர்ந்து லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை பிஎஸ்என்எல் நிறுவனம் இழந்துவந்தது, இப்படிப்பட்ட சூழலில், ஜூன் 7ஆம் தேதி பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை வழங்க ரூ.89,047 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.
அதற்கான 4ஜி, 5ஜி அலைக்கற்றைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதோடு, நாடு முழுவதும் உள்ள 2ஜி மற்றும் 3ஜி டவர்களை 4ஜி டவர்களாக மேம்படுத்தும் பணியும், புதிய 5ஜி டவர்களை அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டன. முக்கிய நகரங்களில் 4ஜி சிம் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்படி ஒருபுறம் மக்களுக்கு 4ஜி சேவை வழங்கப்பட உள்ள நிலையில், மறுபக்கம் தனியார் நிறுவனங்களுக்கு 5ஜி சேவை வழங்க பிஎஸ்என்எல் ஒப்பந்தம் போட்டுள்ளது.
ஆம், நாட்டில் உள்ள மிகப்பெரும் தனியார் நிறுவனங்களுக்கு 5ஜி சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில், பிஎஸ்என்எல் நிறுவனமும் எல்&டி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் மூலம், தனியார் நிறுவனங்களுக்கு 5ஜி சேவைக்கான அலைக்கற்றைகளையும் (Spectrum), நெட்வொர்க் உள்கட்டமைப்பு (Network Infrastructure) வசதிகளையும் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும்.
அதற்கான டிவைஸ்கள் (Devices), சாப்ட்வேர்கள் (Software), சர்வர்ஸ் (servers) உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை எல்&டி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனம் வழங்கும். இதுவொரு டிரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தமாகும். இதனால், டெலிகாமை போல மக்களுக்கு 5ஜி சேவை கிடைக்காது என்றாலும், தனியாருக்கு சொந்தமான ஹெல்த்கேர் (Healthcare), ஃபைனான்சியல் சர்வீசஸ் (Financial Services), ஸ்மார்ட் யுடிலிட்டிஸ் (Smart Utilities) உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் மறைமுகமாக நன்மைகள் வந்து சேரும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள், 4ஜி சேவையே தங்களுக்கு கிடைக்காத நேரத்தில், அந்த நிறுவனம் தனியாருக்கு 5ஜி சேவைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுப்பத்தை கண்டு சற்று அதிருப்தி அடைந்துள்ளதை மறுக்க முடியாது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications