BSNL SIM கார்டு யூசர்களுக்கு சூப்பர் அப்டேட்.. இனி போன் கால் வரும் போது?
இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிம் கார்டுகளை பயன்படுத்தும் கஸ்டமர்களுக்கு ஒரு சிஎன்ஏபி (BSNL CNAP) என்கிற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. சிஎன்ஏபி என்றால் என்ன? இதனால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன்? இதோ விவரங்கள்:
சிஎன்ஏபி என்றால் என்ன? சிஎன்ஏபி (CNAP) என்பது காலர் நேம் பிரசன்டேஷன் (Caller Name Presentation) என்பதன் சுருக்கம் ஆகும். பெயர் குறிப்பிடுவது போலவே இது - உங்களுடைய பிஎஸ்என்எல் நம்பருக்கு யார் போன் செய்கிறார்களோ, அவர்களுடைய பெயரை காட்சிப்படுத்தும் ஒரு அம்சம் ஆகும். இந்த வசதிக்கு கூடுதல் சந்தா கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை; முற்றிலும் இலவசமாக கிடக்கம் சேவையாக இருக்கும்.

சிஎன்ஏபி என்பது டிராய் (TRAI) என்கிற இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (Telecom Regulatory Authority of India) ஒரு முன்முயற்சியாகும், இது பயனர்கள் ஒரு அழைப்பை பெறும்போது அழைப்பவரின் பெயரை காண அனுமதிக்கிறது. இந்த அம்சம், அழைப்புகளுக்கு பதிலளிப்பதற்கு முன்பு பயனர்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது.
ஜியோ, ஏர்டெல், வி வரிசையில் பிஎஸ்என்எல்: இந்தியாவில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் சந்தாதாரர்களுக்காக இந்த அம்சத்தை செயல்படுத்தியுள்ளன. இப்போது அந்த பட்டியலில் இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமும் இணைகிறது; கூடிய விரைவில் இந்த அம்சத்தை நாடு தழுவிய அளவில் அறிமுகப்படுத்த உள்ளது.
எப்போது அறிமுகமாகும்? பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே இந்த அம்சத்தை செயல்படுத்திவிட்டதாக கூறப்படுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இடிடெலிகாம்-ன் (ETTelecom) சமீபத்திய அறிக்கையின் படி, பிஎஸ்என்எல் தற்போது தனது சிஎன்ஏபி சேவையை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்து சோதனை செய்து வருகிறது.
இது குறித்து நன்கு அறிந்த ஒரு தொழில்துறை நிர்வாகி "இந்த அம்சம் ஏற்கனவே பிஎஸ்என்எல்-க்காக செயல்படுத்தப்பட்டுள்ளது, இப்போது மண்டல வாரியாக ஒருங்கிணைப்பு நடைபெற்று வருகிறது" என்று கூறி உள்ளார். ஒருங்கிணைப்புக்கு பிறகு, 3 முதல் 4 மாதங்களுக்குள் பிஎஸ்என்எல் நிறுவனமானது நாடு முழுவதும் சிஎன்ஏபி சேவையை அறிமுகப்படுத்தும் என்றும் அந்த நிர்வாகி கூறியுள்ளார்
இந்த அம்சம் அறிமுகமான நேரத்தில் (கடந்த 2025 ஆம் ஆண்டு பாதியில்) டாட் (DoT) என்கிற தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications) ஆனது 4ஜி மற்றும் 5ஜி ஆகிய இரண்டு நெட்வொர்க்குகளிலும் இந்த அம்சத்தின் சோதனை ஓட்டங்களை நடத்தியது. ஸ்பேம் கால்களை கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்ட இந்த அம்சம், ஃபீச்சர் போன்களில் கிடைக்காது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த சேவைக்கு இண்டர்நெட் அணுகலோ அல்லது ட்ரூகாலர் (Truecaller) போன்ற எந்த ஆப்புமே தேவையில்லை. அழைப்பவரின் பெயரைக் காண்பிக்க, இந்த அம்சம் கேஒய்சி (KYC) மூலம் சரிபார்க்கப்பட்ட சந்தாதாரர் விவரங்களை பயன்படுத்துகிறது. இப்போதைக்கு அழைப்பவரும், பெறுபவரும் ஒரே நெட்வொர்க்கில் இருக்கும்போது சிஎன்ஏபி சேவை நன்றாக செயல்படுகிறது. இருப்பினும், இந்த அம்சத்தின் க்ராஸ்-நெட்வொர்க் இணக்கத்தன்மை தொடர்பான சிக்கல்களை ஆபரேட்டர்கள் இன்னும் சரிசெய்து வருவதாக கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகளில் பிஎஸ்என்எல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகிய இரண்டும் - இனிமேல் தங்கள் நெட்வொர்க்குகளை உருவாக்கும் விதத்தை மாற்றக்கூடிய ஒரு கூட்டாண்மையை ரகசியமாக ஆராய்ந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மின்ட் (Mint) பத்திரிகையின் அறிக்கையின்படி, இவ்விரு நிறுவனங்களும் டவர்களை மட்டுமல்லாமல், ஃபைபர் மற்றும் "ஒருவேளை" ஸ்பெக்ட்ரத்தையும் கூடப் பகிர்ந்துகொள்வது குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








