Jio vs Airtel vs BSNL: பட்ஜெட் விலையில் எது சிறந்த பிராட்பேண்ட் சலுகையை வழங்குகிறது..!
பிஎஸ்என்எல் நிறுவனம் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கு போட்டியாக தொடர்ந்து அருமையான பிராட்பேண்ட் சலுகையை வழங்கி வருகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களில் அதிகளவு வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

அண்மையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.449 என்ற மலிவு விலை பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டம் 30 எம்.பி.பி.எஸ் என்கிற வேகத்தை வழங்குகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த திட்டம் ஜியோவின் ஃபைபர் ரூ.399 திட்டத்துடன் நேரடியாக போட்டியிடுகிறது.

ஆரம்பத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் தேர்வுசெய்யப்பட்ட நகரங்களில் மட்டுமே ரூ.449 ஃபைபர் பேசிக் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சமீபத்தில் தான் இது அனைத்து பாரத் ஃபைபர் நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த புதிய மாற்றத்துடன், பிஎஸ்என்எல் இப்போது ஜியோ ஃபைபர் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் ஆகிய இரண்டிற்கும் எதிராக செல்கிறது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.449 ஃபைபர் பேசிக் திட்டம், ஜியோ ஃபைபரின் ரூ.399 திட்டம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபரின் ரூ.499 திட்டம் போன்றவற்றின் சிறப்பு நன்மைகள் மற்றும் இந்த திட்டங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நன்மைகளையே வழங்குகின்றதா என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.449 ஃபைபர் பேஸிக்பிராட்பேண்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.449 ஃபைபர் பேஸிக்பிராட்பேண்ட் திட்டம் ஆனது 3300 ஜிபி அல்லது 3.3 டிபி வரையிலான டேட்டாவை 30 எம்.பி.பி.எஸ் என்கிற வேகத்தின் கீழ் வழங்குகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த திட்டம் வரம்பற்ற டேட்டா திட்டமாக சந்தைப்படுத்துகிறது. ஏனெனில் இதன் FUP வரம்பு அதிக அளவில் உள்ளது. FUP வரம்பிற்குப் பிறகு, இணைய வேகம் 2 Mbps ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிஎஸ்என்எல்-லின் இந்த திட்டத்தில் ஒடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் இந்த திட்டத்தை தேர்வுசெய்யும் அனைத்து பயனர்களுக்கும் லேண்ட்லைன் சேவை வழியாக வரம்பற்ற குரல் அழைப்பை வழங்குகிறது.

ஜியோ ஃபைபர் ரூ.399 பிராட்பேண்ட் திட்டம்
மற்ற நிறுவனங்களை விட ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் பிராட்பேண்ட் திட்டத்தை வழங்குகிறது. ஜியோ நிறுவனம் ரூ.399 பிராட்பேண்ட் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு தான் அறிமுகம் செய்தது. அதன் பின்னரே மற்ற நிறுவனங்கள் தொழில்துறையில் போட்டி தன்மை மிக்க பிராட்பேண்ட் திட்டங்களை கொண்டு வந்தன.
ஜியோவின் ரூ.399 பிராட்பேண்ட் திட்டம் ஆனது 30 எம்.பி.பி.எஸ் என்கிற பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகம் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புடன் வருகிறது. பிஎஸ்என்எல்-ஐ போன்று இந்த ஜியோ ஃபைபர் திட்டமும் எந்த கூடுதல் ஒடிடி பயன்பாடுகளுக்கான சந்தாவையும் வழங்கவில்லை. பின்பு பிஎஸ்என்எல் போலவே ஜியோ ஃபைபரும் வரம்பற்ற டேட்டா திட்டமாக விற்பனை செய்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால் இது மாதத்திற்கு 3.3டிபி அல்லது 3300ஜிபி என்கிற FUP வரம்பை கொண்டு உள்ளது.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் ரூ.499 திட்டம்
மேலே குறிப்பிட்ட பிஎஸ்என்எல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் திட்டங்களுடன் போட்டியிடுவது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபரின் ரூ.499 திட்டமாகும். இது 40 எம்.பி.பி.எஸ் என்கிற வேகத்தின் கீழ் 3.3TB (3300GB) என்கிற FUP வரம்பின் கீழ் டேட்டா நன்மைகள் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. பின்பு இதை தேர்வுசெய்யும் பயனர்கள் வூட் பேஸிக், ஈரோஸ் நவ், ஹங்காமா ப்ளே, ஷெமரூ மீ மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்பிற்கான இலவச அணுகலைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications