வானத்தை போல BSNL.. நெட்வொர்க் சிக்கலுக்கு விடிவு.. சாட்டிலைட் கனெக்டிவிட்டிக்கு நன்றி!
இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) என்கிற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) ஆனது, க்ளோபல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமான வியாசாட் இந்தியா (Viasat India) உடன் கூட்டு சேர்ந்து உள்ளது.
இவ்விரு நிறுவனங்களும், இந்தியாவில் சாட்காம் (Satcom) துறையை மேம்படுத்துவதற்காக, அதாவது செயற்கைக்கோள் தகவல் தொடர்பு (Satellite communications) துறையை மேம்படுத்துவதற்காக இணைந்து செயல்பட உள்ளன. அறியாதோர்களுக்கு சாட்காம் துறை ஆனது நாட்டின் கிராமப்புறங்களில், தொலைதூர பகுதிகளில் கனெக்டிவிட்டியை விரிவுபடுத்துவதற்கு மிக முக்கியமான துறையாகும்.

இந்த கூட்டணியின் கீழ் - பிஎஸ்என்எல் நிறுவனமும் வியாசாட் இந்தியாவும், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் துறையில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறை தயார்நிலையை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும். சமீபத்தில் முடிவடைந்த இந்தியா மொபைல் காங்கிரஸ் 2025 இல் இந்நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டாண்மை தொடங்கப்பட்டது.
இதனுடன், இந்திய சந்தைக்கு வியாசாட்டின் வேலாரிஸ் அன்க்ரூட் ஏர் சொல்யூஷனை (Viasat's Velaris uncrewed air solutions) வணிகமயமாக்குவதிலும் கூட இவ்விரு நிறுவனங்களும் ஒன்றாக செயல்பட உள்ளன. அன்க்ரூட் பிளைட்ஸ் சொல்யூஷன்ஸ் மூலம், எந்தவொரு மனித தலையீடும் தேவையில்லாமல் பயணிகளுக்கான கனெக்ட்டிவிட்டியை உறுதி செய்ய முடியும். இந்தியாவில் இன்னும் உள்நாட்டு விமானங்களில் மொபைல் நெட்வொர்க் கிடைக்கவில்லை; உண்மையில் இது மாற வேண்டும்.
பிஎஸ்என்எல் மற்றும் வியாசாட் ஆகிய இரண்டும் - அன்க்ரூட் ஏர் வெஹிகிள்ஸ் (யுஏவி-க்கள்), இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி) மற்றும் பிற தொடர்புடைய மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்கான ஒரு சிறப்பு மையத்தை (Center of Excellence - CoE) நிறுவ உள்ளதாகவும் கூறியுள்ளன.
இதற்காக, ஜபல்பூரில் அமைந்துள்ள பிஎஸ்என்எல்-இன் கீழ் உள்ள சிறப்பு பயிற்சி நிறுவனமான பாரத ரத்னா பீம் ராவ் அம்பேத்கர் தொலைத்தொடர்பு பயிற்சி நிறுவனத்துடன் (Bharat Ratna Bhim Rao Ambedkar Institute of Telecom Training - BRBRAITT) வியாசாட் கூட்டு சேரும்.
மேற்கண்ட எல்லா ஒத்துழைப்புகளும் - இந்தியாவில் வலுவான லோ ஆல்ட்டிட்யூட் எகானமியை (low-altitude economy) உருவாக்குவதற்கான தொடர்ச்சியான முன்னேற்றத்தை ஆதரிக்கின்றன. இது ட்ரோன்கள் மற்றும் மேம்பட்ட வான் இயக்கம் (advanced air mobility) உட்பட 3000 மீட்டருக்கும் குறைவான வான்வழி செயல்பாடுகளை உள்ளடக்கிய ஒரு வளர்ந்து வரும் துறையாகும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராபர்ட் ஜே ரவி கூறுகையில், "இது புதுமைகளை வளர்ப்பதற்கும் உள்நாட்டு திறன்களை உருவாக்குவதற்கும் எங்கள் குறிக்கோளுடன் ஒத்துப்போகும் ஒரு மூலோபாய ஒத்துழைப்பு ஆகும். BRBRAITT இல் உள்ள சிறப்பு மையம் முக்கியமான திறன்களை கொண்ட புதிய தலைமுறை நிபுணர்களை சித்தப்படுத்தும்" என்று கூறியுள்ளார்.
மேலும் "வியாசாட் நிறுவனத்தின் வெலாரிஸ்-ஐ வணிகமயமாக்குவதற்கான எங்கள் பணி - எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் புதுமையான சேவைகளை வழங்கும், நாடு முழுவதும் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும்" என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து வியாசாட் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆன கௌதம் சர்மாவும் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் "இந்திய தொலைதொடர்புகளில் நம்பகமான தலைவரான பிஎஸ்என்எல் உடன் எங்கள் பணியை விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஒத்துழைப்புகள் இந்தியாவின் 'டிஜிட்டல் இந்தியா' தொலைநோக்கு பார்வைக்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும், மேலும் நாட்டின் குறைந்த உயரப் பொருளாதாரத்தின் மகத்தான திறனை திறக்க உதவும்" என்று கூறியுள்ளார்
மேலும் "இந்தியா முழுவதும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கான ஒரு வலுவான கட்டமைப்பை நிறுவ பிஎஸ்என்எல் நிறுவனத்தின் BRBRAITT உடன் ஒத்துழைப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்" என்றும் கௌதம் சர்மா கூறி உள்ளார்.


Click it and Unblock the Notifications








