மலிவு விலையில் BSNL 5G ஸ்மார்ட்போன்னா? அதுவும் 200MP கேமரா.. 7000mAh பேட்டரி உடனா? தீயாய் பரவும் செய்தி..
என்னது? அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) விரைவில் இந்தியாவில் பிஎஸ்என்எல் 5ஜி ஸ்மார்ட்போன் (BSNL 5G Smartphone) சாதனத்தை 200MP கேமராவுடன் அறிமுகம் செய்யவிருப்பதாக செய்திகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் மிகமிக மலிவு விலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் வரைவில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை வெளியிடும் என்று தகவல்கள் இணையத்தில் வலம்வருகின்றன. இது உண்மை தானா? இந்த போனின் விலை என்ன? இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்ன தகவல்கள் இப்போது வரை நமக்கு தெரியும் என்பது இங்கே.
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), ஏர்டெல் (Airtel), மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் அவற்றின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்தன, இதனால், தனியார் டெலிகாம் பயனர்கள் கடுப்பானார்கள். கடுமையான விலை அதிகரிப்பை எதிர்க்கும் விதமாக பல தனியார் பயனர்கள் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு மாறத்துவங்கியுள்ளனர். காரணம், பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டுமே தற்போது மிகவும் மலிவு விலையில் டெலிகாம் சேவையை வழங்கி வருகிறது.

பிஎஸ்என்எல் 5ஜி ஸ்மார்ட்போன் (BSNL 5G Smartphone):
இதன் காரணமாக இந்தியா முழுக்க இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் பற்றி தான் பேச்சாக இருக்கிறது. இதற்கு மத்தியில், மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக சமீபத்தில் வெளியான ஒரு தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 200 மெகா பிக்சல் கேமரா கொண்ட ஒரு புதிய மலிவு விலை ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவிருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த தகவல் சமூக வலைத்தளம் மற்றும் செய்தி ஊடகங்களில் மிகவும் வேகமாக பரவியது. இருப்பினும் இது சாத்தியமா? என்ற சந்தேகம் சிலருக்கு எழுந்தது. காரணம், பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது தான் அதன் பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) நெட்வொர்க் சேவையை இந்தியா முழுக்க விரிவுபடுத்த முயன்று வருகிறது. இதற்கு பிறகு, பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 5ஜி (BSNL 5G) நெட்வொர்க் சேவையை இந்தியாவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, இந்த வேலைகளை சரியான நேரத்திற்குள் முடிக்கவேண்டிய கட்டாயத்திற்குள் பிஎஸ்என்எல் சிக்கியுள்ளது. இதற்கிடையில் எப்படி பிஎஸ்என்எல் நிறுவனம் பிஎஸ்என்எல் 5ஜி என்ற ஒரு ஸ்மார்ட்போனை வெளியிட முடியும். அதுவும் 200 மெகாபிக்ஸல் கொண்ட கேமராவுடன், இந்த போன் 7000mAh பேட்டரியை கொண்டிருக்கும். இது கொஞ்சம் சாத்தியமற்றதாகவே தோன்றுகிறது. இணையத்தில் வெளியான பிஎஸ்என்எல் 5ஜி ஸ்மார்ட்போன் தகவல் குறித்த உண்மை தன்மையை ஆராய்ந்த போது தான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
பிஎஸ்என்எல் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த தகவல் உண்மை தானா?
இந்தியா முழுக்க பரவி வந்த பிஎஸ்என்எல் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த தகவல் உண்மை தானா? என்று பிஎஸ்என்எல் இடமே நேரடியாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அதிகாரிகள், அப்படி ஒரு ஸ்மார்ட்போன் திட்டத்தை பிஎஸ்என்எல் இதுவரை திட்டமிடவில்லை என்று அதிகாரிகள் தெளிவாக கூறியுள்ளனர். ஆனால், ஐடியா சூப்பராக இருக்கிறது என்பதனால், எதிர்காலத்தில் மக்களின் தேவைக்கேற்ப பிஎஸ்என்எல் என்றாவது ஒரு நாள் புதிய மொபைல் சாதனத்தை வெளியிடலாம் என்று நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் இணையம் முழுக்க வெளியாகியுள்ள புதிய பிஎஸ்என்எல் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த தகவல் முற்றிலும் வதந்தியே என்று பிஎஸ்என்எல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலியாக செய்திகளை பரப்புவோர் மற்றும் போலியான சாதனங்களை விற்பனை செய்பவர்கள் இந்த செய்தியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, மக்களிடமிருந்து பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுரைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








