BSNL 4G சேவை வெளியீடு.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்.. 5ஜி சோதனை துவக்கம்..
ஏர்டெல் (airtel), ஜியோ (jio) மற்றும் வோடபோன் ஐடியா (vi) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் கடந்த மாதம் கட்டண உயர்வை அறிவித்தன. இதனால் மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களை விற்கும் பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனத்தில் பல்வேறு மக்கள் இணைந்து வருகின்றன. குறிப்பாக கடந்த மாதம் மட்டும் ஆந்திரப் பிரதேசத்தில் 2.17 லட்சம் புதிய பயனர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் 4ஜி மற்றும் 5ஜி சேவையின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா (Jyotiraditya Scindia). அதாவது வரும் அக்டோபர் இறுதிக்குள் 80,000 டவர்களும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மீதமுள்ள 21,000 டவர்களுகம் நிறுவப்படும் என்று தெரிவித்தார். அதாவது மார்ச் 2025-க்குள் ஒரு லட்சம் டவர்களில் 4ஜி நெட்வொர்க் கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முழுமையாக 4ஜி சேவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த டவர்கள் அமைக்கும் பணி முடிந்ததும், 4ஜி தளங்களை 5ஜி நெட்வொர்க்காக மாற்றுவது பிஎஸ்என்எல்-ன் வேலையாக இருக்கும். அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி-ஐ செயல்படுத்தப் பயன்படுத்தப்படும் அனைத்து உபகரணங்களும் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.
அதேபோல் தற்போது 5ஜி திட்டம் சோதனை கட்டத்தில் உள்ள நிலையில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பிஎஸ்என்எல 5ஜி-ஐ பயன்படுத்தி வீடியோகால் சேவையை முதல் முறையாகப் பரிசோதித்துப் பார்த்தார். டெல்லியில் உள்ள c-dot கேம்பஸில் இந்த நிகழ்வு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த வீடியோ காலில் பெண் ஒருவருடன் 5ஜி சேவையின் செயல்திறன் குறித்துப் பேசினார். இதன் மூலம் பிஎஸ்என்எல் 5ஜி தொழில்நுட்பத்தின் செயல் திறன் உறுதியாகியுள்ளது என்று ஜோதிராதித்ய சிந்தியாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட அமைச்சரின் வீடியோ கால் காணொளியும் தற்போது இணைய தளம் முழுவதும் அதிக வைரலாகி உள்ளது.
மேலும் இந்த வருடத்திற்கான பட்ஜெட்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கும் வகையில் சுமார் ரூ.82,000 கோடி ஒதுக்கப்பட்டது. தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களின் கட்டணங்களை அதிகரித்து வரும் நிலையில் தற்போது அனைவரது பார்வையும் பிஎஸ்என்எல் பக்கம் திரும்பியுள்ளது.

தமிழ்நாட்டில் சில வாரங்களுக்கு முன்பு தான் திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 19 கிராமங்களுக்கு 4ஜி சேவையை வழங்கியது பிஎஸ்என்எல் நிறுவனம். கூடிய விரைவில் சென்னை மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 4ஜி சேவை அறிமுகம் செய்யப்படும். கடந்த மாதம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 80,000-க்கு அதிகமான மக்கள் பிஎஸ்என்எல் இணைப்புகளைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலை 30ஆம் தேதி நிலவரப்படி திருச்சியில் 16500 பேர் புதிதாக பிஎஸ்என்எல் இணைப்பினை பெற்றுள்ளனர். மதுரை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் புதிதாக 17000 பேர் பிஎஸ்என்எல் இணைப்பினை பெற்றுள்ளனர். பின்பு கோயம்புத்தூரில் சுமார் 12,000 பேர், சென்னையில் 40,000 பேர் என கடந்த 20 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 80,000-க்கும் அதிகமான மக்கள் பிஎஸ்என்எல் இணைப்பினை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








