தேதி குறிச்சாச்சு.. 4 மாநிலங்களில் பிஎஸ்என்எல் 4ஜி வந்தாச்சு.. நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் தொடக்கம்!
பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்காக இதுக்கு மேல பொறுக்க முடியாதென்ற மனநிலைக்கே அதன் வாடிக்கையாளர்கள் சென்றுவிட்ட நேரத்தில் 40-45 எம்பிபிஎஸ் வேகத்தில் 4ஜி சேவைகள் தொடங்கப்பட்டுவிட்டன. 4 மாநிலங்களில் தொடங்கப்பட்டன. நாடு முழுவதும் அறிமுகமாகும் தேதியும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரம் இதோ.
பல ஆண்டுகளாக காத்திருக்கும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது விடிவு காலம் பிறந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், முன்பு தேதியை மட்டுமே குறிப்பிட்டு 4ஜி சேவைகள் வந்துவிடும் என்று சொன்ன பிஎஸ்என்எல் நிறுவனம், இப்போது 6,000 டவர்கள் மூலம் 8 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவைகளை வழங்கியே விட்டது.

மொத்தமாக 4 மாநிலங்களில் வழங்கப்பட்டு பைலட் பேஸ் (Pilot Phase) நடந்து முடிந்துவிட்டன. 40-45 எம்பிபிஎஸ் வேகத்தில் 4ஜி சேவைகள் கிடைத்துள்ளன. இப்போது, வழக்கமான சேவைகளே தொடங்கி இருக்கின்றன. இந்த 4 மாநிலங்களை தொடர்ந்து நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் (BSNL 4G Services) தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எந்தெந்த மாநிலங்களில் கிடைக்கிறது? பிஎஸ்என்எல் நிறுவனமானது, 1.12 லட்சம் 4ஜி மற்றும் 5ஜி டவர்களை நிறுவுவதற்கான பணிகளை முழு வீச்சில் செய்து வருகிறது. இதில் 9,000 டவர்கள் நிறுவப்பட்டு அதில் சேவைகளும் தொடங்கப்பட்டுவிட்டன. இவற்றில் 6,000-க்கும் மேற்பட்ட டவர்கள் மூலம் 8 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், மேற்கு உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இப்போது சேவைகள் வழங்கப்படுகின்றன. ஏற்கனவே, ஏப்ரல் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக, மீண்டும் தள்ளிப்போனது.

இதனிடையே பிஎஸ்என்எல் நிறுவனம், டிசிஎஸ் (TCS) நிறுவனத்துடன் ரூ.19,000 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்து, 4ஜி மற்றும் 5ஜி சேவைகளுக்கான தொழில்நுட்ப ஒப்பந்தத்தை செய்து முடித்தது. டிசிஎஸ் மட்டுமல்லாமல், மத்திய அரசின் டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம், சி-டாட் (Centre for Development of Telematics C-DOT) உடன் இணைந்து இந்த சேவைகளை வழங்க இருக்கிறது.
சொல்லப்போனால், சி-டாட் (C-DOT) மற்றும் டிசிஎஸ் கூட்டமைப்பானது, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் மூலம் பஞ்சாபில் 4ஜி சேவைகளை வெற்றிகரமாக வழங்கிவிட்டது. இந்த தொழில்நுட்பத்தின் சோதனை முயற்சி கடந்த ஆண்டு ஜூலை மாதமே தொடங்கியது. இதை வெற்றிகரமாக செய்து முடிக்க 12 மாதங்கள் தேவைப்படும்.
ஆனால், சி-டாட் இதை 10 மாதங்களுக்குள் செய்து முடித்து, வரும் ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் ஆத்மாநிர்பார் 4ஜி தொழில்நுட்பம் மூலம் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் தொடங்கப்படுவதை உறுதி செய்திருக்கிறது. ஆகவே, டவர்கள் நிறுவும் பணிகள் முடிந்த பகுதிகளில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் தொடக்கப்பட வாய்ப்புள்ளது.
ஏற்கனவே, தமிழ்நாட்டில் டவர் நிறுவும் பணிகள் முடியும் தருவாயில் இருப்பதாக பிஎஸ்என்எல், தமிழ்நாடு தலைமைப் பொதுமேலாளர் தமிழ்மணி சில மாதங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தார். ஆகவே, ஆகஸ்ட் மாதத்தில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் தொடங்கினால், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
ஆகவே, பிஎஸ்என்எல் 2ஜி, 3ஜி சிம் கார்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அவற்றை 4ஜி சிம் கார்டுகளாக மாற்றும் பணியில் ஈடுபடுவது நல்லது. ஏனென்றால், 4ஜி சேவைகள் தொடங்கப்பட்ட பிறகு அவற்றை மாற்றுவதில் சிரமம் ஏற்படலாம். ஜூன் மாதத்துக்கு பிறகு ரீசார்ஜ் கட்டணங்கள் உயரும் என்று கூறப்படுவது இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








