குட் நியூஸ்.. பழைய விலைக்கு Airtel, Vodafone திட்டங்கள்.. Jio-க்கு வேற வழியே இல்ல.. குறைச்சே ஆகணும்? இல்லனா?
ஏர்டெல் நிறுவனம் தொடங்கி வைக்க, அதை ஜியோவும், வோடாபோன் ஐடியாவும் அப்படியே பின்பற்ற.. இந்தியாவின் 3 தனியார் டெலிகாம் நிறுவனங்களுமே கடந்த ஜூலை 2024 இல் தத்தம் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை கடுமையாக உயர்த்தின. தற்போது இந்த நிலைமை அப்படியே தலைகீழாய் மாறும் அல்லது இன்னும் மோசமானதாக மாறும் என்பது போல் தெரிகிறது!
இந்தியாவில் ரீசார்ஜ் கட்டண கட்டமைப்பை (Tariff Structure) மாற்ற வேண்டும் என்று வோடாபோன் ஐடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆன கோபால் விட்டலும் கூட இதே கருத்தை தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் (Airtel) மற்றும் வோடாபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய இரண்டு டெலிகாம் நிறுவனங்களுமே புதிய கட்டண கட்டமைப்பை ஆதரிப்பதால், ஜியோ (Jio) மட்டுமே இதை ஒப்புக்கொள்ள வேண்டி உள்ளது. ஜியோவும் இதை ஒப்புக்கொண்ட பின்னர், டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இந்த விஷயத்தில் தலையிடாவிட்டால், நிச்சயமாக டெலிகாம் துறைக்கு புதிய கட்டமைப்பு உருவாகும்.
ஏர்டெல் மற்றும் விஐ ஆமோதிக்கும் இந்த புதிய கட்டமைப்பு ரீசார்ஜ் விலைகளை குறைக்குமா அல்லது இன்னும் அதிகமாக்குமா அல்லது சில திட்டங்களின் விலைகளை குறைத்து சில திட்டங்களின் விலைகளை இன்னும் அதிகமாக்குமா என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை. ஏனென்றால் இந்த புதிய கட்டமைப்பு "அதிக டேட்டாவிற்கு அதிக பணம்" என்கிற கோட்பாட்டை முன்வைக்கிறது.
விலை உயர்வால் அடிப்படை ரீசார்ஜ் கட்டணங்களின் விலைகளும் உயர்ந்து உள்ளது. எதிர்காலத்தில் அடிப்படை ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை மேலும் அதிகரிக்க முடியாது. ஆகையால் அதிக டேட்டாவை பயன்படுத்தும் பயனர்கள் அதற்கு அதிக பணம் செலுத்த வேண்டிய கட்டமைப்பு இருக்க வேண்டும் என்று வோடபோன் ஐடியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன அக்ஷயா மூந்த்ரா கூறியுள்ளார்.
கட்டண உயர்வு அமலுக்கு வந்த பிறகு, வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் ஒரு பயனருக்கான சராசரி வருவாய் (Average revenue per user- ARPU) ஆனது ரூ.154 இல் இருந்து ரூ.166 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் அமலுக்கு வந்த கட்டண உயர்வின் முழு விளைவும், வரும் காலாண்டுகளில் ஏஆர்பியு மற்றும் ஒட்டுமொத்த வருவாயில் காணப்படும் என்றும் அக்ஷயா மூந்த்ரா கூறி உள்ளார்.
ஆனாலும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது, வோடபோன் ஐடியாவின் ஏஆர்பியு ஆனது இன்னுமும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளது. ஏர்டெல் அதன் ஏஆர்பியு-வை ரூ.233 என்கிற நிலையிலும், ஜியோ அதன் ஏஆர்பியு -வை ரூ.195.1 என்கிற நிலையிலும் வைத்துள்ளன.
ஏர்டெல் மற்றும் வோடபோன் கோரும் புதிய அமைப்பானது தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் தங்கள் வருவாய் நிலைகள் மற்றும் ஏஆர்பியு-வை இன்னும் அதிகரிக்க அனுமதிக்கும். ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய இரு நிறுவனங்களும், டெலிகாம் துறையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, கட்டணங்களை மேலும் திருத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளன.
இதுகுறித்து ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், ஏர்டெல் நிறுவனத்தின் ரோஸ் (ROCE) வருமானம், அதாவது ரிட்டர்ன் ஆன் கேபிடல் எம்பிளாய்டு (Return on capital employed) வருமானம் 11% ஆகும். ஆனால் தொழில்துறையின் சராசரி உடன் ஒப்பிடும் போது இது குறைவாக உள்ளது. இது மேம்படுத்தப்பட வேண்டும், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக வருமானம் ஈட்ட முடிந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்று கூறியுள்ளார்.
ஏர்டெல் சிஇஓ கூறுவதை வைத்து பார்த்தால் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகள் இன்னும் அதிகமாக்கப்படும் என்பது போன்றே தெரிகிறது. ஒருவேளை 5ஜி டேட்டாவுடன் வரும் திட்டங்களின் விலைகள் மட்டும் அதிகப்படுத்தப்படலாம் அல்லது 5ஜி டேட்டாவிற்கென விலை அதிகமான புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படலாம்.
"இப்போதைக்கு இது எல்லாம் தேவை இல்லை" என்பதால் முகேஷ் அம்பானி, இந்த புதிய கட்டண கட்டமைப்பை கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கிறாரோ என்னவோ? சரியாக தெரியவில்லை. புதிய கட்டண கட்டமைப்பு என்றால் என்ன என்கிற தெளிவான விளக்கம் முன்வைக்கப்படும் வரையிலாக.. விலை குறையுமா.. இன்னும் அதிகமாகுமா என்கிற குழப்பம் நீடித்து கொண்டே தான் இருக்கும்!


Click it and Unblock the Notifications