Google அசைன்மென்ட்.. தேர்தலுக்கு 76,800 விளம்பரங்கள்.. மோடி அரசின் ரூ.39 கோடி டீல்.. பாஜக கொட்டிய கோடிகள்!
போஸ்டர், கட்அவுட், வாகன பேரணி என்று பழைய தேர்தல் பிரச்சாரம் மட்டும் போதாது, டிஜிட்டல் இந்தியாவுக்கு ஏற்ப டிவி, மொபைல், சோஷியல் மீடியாவிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதை அரசியல் கட்சிகள் நன்றாகவே தெரிந்துகொண்டுள்ளன. இப்போது, பாஜக ஒருபடி மேலே சென்றுவிட்டது.
தேர்தல் நெருங்கிவிட்டதால், அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றன. இதில் டிஜிட்டல் விளம்பரங்கள் நாளுக்கு நாளுக்கு விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. எந்த கட்சி எத்தனை கோடி செலவு செய்கிறது என்பதிலேயே போட்டிகள் தொடங்கிவிட்டன. ஆனால், ஆளும் பாஜக மற்ற கட்சிகளை ஓரம் கட்டிவிட்டு கூகுள் விளம்பரங்களுக்கு (Google Ads) கோடிகளை வாரி வழங்கி இருக்கிறது.

கடந்த ஜனவரி 1 முதல் ஏப்ரல் 11ஆம் தேதி வரையில் மட்டும் ரூ.39 கோடிக்கு கூகுள் மூலம் விளம்பரம் செய்துள்ளது. அதேபோல காங்கிரஸ் கட்சியும் கூகுள் விளம்பரங்களுக்கு கோடிகளை கொட்டி இருக்கிறது. இதில், எந்த மாநில மக்களை தன்பக்கம் ஈர்க்க அதிக கூகுள் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதுதான் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
இந்த விவரங்கள் கூகுள் விளம்பர வெளிப்படைத்தன்மை மையம் (Google's Ads Transparency Center) மூலம் தெரிய வந்துள்ளது. இந்த புள்ளி விவரங்கள் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 11ஆம் தேதி வரையில் சேகரிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக ரூ.117 கோடிக்கு கூகுள் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு அதாவது, ரூ.39 கோடிக்கு பாஜக செலவு செய்துள்ளது.
கூகுள் மூலம் மொத்தம் 76,800 விளம்பரங்களை பாஜக செய்துள்ளது. மத்திய அரசின் ஜன்தன் திட்டத்தை (Jan Dhan Scheme) விளம்பரப்படுத்த அதிக தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் இந்தியில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 29 வரையில் மொத்தமாக 49 நாட்களுக்கு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம், ஒடிசா, பிஹார், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இந்த விளம்பரங்கள் ப்ரோமோட் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தப்படியாக முத்ரா கடன் திட்டம் (Mudra Loan Scheme) குறித்த வீடியோ விளம்பரத்துக்கு அதிக செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் தமிழ்நாட்டில் அதிகமாக ப்ரோமோட் செய்யப்பட்டுள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய தகவல் தொடர்புப் பணியகமானது, (Central Bureau of Communication) ரூ.32 கோடி செலவு செய்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதன் மூலம் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா, ஆயுஷ்மான் பாரத் மற்றும் கூரை சூரிய ஒளி திட்டம் ஆகியவற்றுக்கு விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதே காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் ரூ.7.55 கோடிக்கு கூகுள் மூலம் விளம்பரங்கள் செய்துள்ளது. அதேபோல தமிழ்நாட்டின் திமுக ரூ.9.24 கோடி செலவழித்து விளம்பரங்கள் செய்துள்ளது. இந்த விளம்பரங்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக வீடியோ விளம்பரங்களும் மீதமுள்ளவை போட்டோக்கள் அடங்கிய விளம்பரங்களாகவும் இருந்துள்ளன.
பாஜகவை பொறுத்தவரையில், பிரதமர் மோடியின் படம், தாமரை சின்னம் மற்றும் திட்டங்களின் விவரங்கள் அடங்கிய விளம்பர தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. இந்த ரூ.117 கோடியில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் ரூ.15.1 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல ரூ.9.87 கோடி செலவு செய்யப்பட்டு உத்தரப் பிரதேசம் 2ஆவது இடத்தில் இருக்கிறது.
ரூ.9.59 கோடியுடன் ஆந்திரப் பிரதேச மாநிலமும், ரூ.9.57 கோடியுடன் ஒடிசா மாநிலும், ரூ.9.15 கோடியுடன் மகாராஷ்டிரா மாநிலமும் இருக்கிறது. இதற்கு அடுத்து பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இருக்கின்றன. பிரபல தனியார் ஊடகம் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications