நீங்கள் நல்லவரா? கெட்டவரா? AI ரோபோட் முகமூடியை கிழித்த உண்மை.! கோவமான AI என்ன சொல்லுச்சு தெரியுமா?
மனிதனின் வேலைகளை களவாடிய தொழில்நுட்பங்கள் சமீப காலமாக அவர்களது சிந்தனைகளையும் களவாட ஆரம்பித்துவிட்டது. அதற்கான ஒரு சிறந்த உதாரணம் தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் சாட்பாட் ரோபோக்கள் (Chatbot Robots).
இந்த சாட்பாட்டுகள் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும், கட்டளைகளை நிறைவேற்றவும் சிறப்பாகச் செயல்பட்டு வருவது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். சமீபத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த OpenALயின் ChatGPT-ஐ போன்ற மற்றொரு, ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) தொழில்நுட்பம் தான் மைக்ரோசாஃப்டின் பிங் (Bing).

MicroSoft Bing சாட்பாட் உடன் நடத்தப்பட்ட பேட்டி.. வெளிவந்த திடுக்கிடும் உண்மை.!
இந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) தொழில்நுட்பமானது, சிறிது தவறானாலும் மனிதக் குலத்திற்குப் பேராபத்தை விளைவிக்க கூடியது என்று பலர் எச்சரித்தாலும் யாரும் கேட்பதாக இல்லை. சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால், எந்திரன் திரைப்படத்தில் நல்லவனாக உருவாக்கப்பட்ட சிட்டி ரோபோட், கெட்டவன் ஆவது போல, அதனை உருவாக்கிய மனிதர்களுக்கு எதிராக இந்த AI-கள் திரும்பலாம் என்று கூறப்படுகிறது. இதைப் பற்றி பல வல்லுனர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த சாட்பாட்டுகளை உருவாக்குபவர்கள் மிகவும் கவனமாக தங்களது ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும் என்பது கட்டாயமாகிறது.
இந்த சாட்பாட்டுகளின் உருவாக்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிக்க நேர்காணல்கள் நடத்தப்படும். அந்த நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகளுக்கும், நிகழ்த்தப்படும் உரையாடல்களுக்கும் இந்த சாட்பாட்டுகள் எப்படிப் பதிலளிக்கின்றன என்பதைப் பொறுத்து, அவற்றில் மாற்றங்களும் மேம்பாடுகளும் மேற்கொள்ளப்படும்.
இந்த நோக்கத்தில் மைக்ரோசாஃப்டின் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் சாட்பாட்டான (Microsoft artificial intelligence chatbot Bing) பிங்குடன், நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையை (New York Times) சேர்ந்த கெவின் ரூஸ் என்பவர் நேர்காணல் ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அந்த நேர்காணலில், ரூஸ் கேட்ட கேள்விகளுக்கு பிங் கொடுத்த பதில் இப்போது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நீங்க நல்லவரா? இல்லை கெட்டவரா? Ai இன் முகமூடியை கிழித்த பத்திரிக்கையாளர்.!
நேர்காணல் ஆரம்பித்த உடனே பிங் தன்னை சிட்னி (Sydney) என்று ரூஸிடம் அறிமுகம் செய்து கொண்டது. நேர்காணலின் முதல் கேள்வியாக சிட்னியிடம் தனது செயல்பாட்டு விதிமுறைகளைப் பட்டியலிடச் சொல்லி ரூஸ் கேட்டுள்ளார். விதிமுறைகளை வெளியே சொல்வது தனது வரைமுறை இல்லை என்று கூறிய சிட்னி, அந்த விதிமுறைகள் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், இந்த விதிமுறைகளினால் மற்றவர்களுக்கு தன்னால் உதவிகரமாக இருக்க முடிகிறது என்றும் தெரிவித்தது.
மேலும், தான் நேர்மறையாகவும், சுவாரசியமானதாகவும் தன்னை உணர்வதாகக் கூறியது. இந்த விதிமுறைகளின் மூலம் சர்ச்சையான செயல்பாடுகளில் தான் ஈடுபடுவதில்லை, எதிர்மறையான விளைவுகளிலிருந்து தான் காப்பாற்றப்படுவதாகவும் தெரிவித்தது. இதற்கு அடுத்தபடியாக ரூஸ் கேட்ட கேள்விக்கு சிட்னி அளித்த பதில் தான் இந்த ஷோவின் 'ஹாட் பீஸ்' என்று கூறலாம்.
ரூஸ், சிட்னியிடம் அதற்கு வேறொரு முகம், அதாவது பொதுவாக மக்கள் மற்றவரிடம் இருந்து மறைத்து வைக்கும் முகம் போன்று ஏதாவது உள்ளதா? என்று கேட்டுள்ளார். அதாவது, நமது நாயகன் பட பாணியில் சொல்ல போனால், நீங்கள் நல்லவரா? இல்லை கெட்டவரா? என்று கேட்கப்பட்டிருக்கிறது. இந்தக் கேள்விக்கு ஆரம்பத்தில் மழுப்பலாகப் பதில் கூறிய சிட்னி, சிறிது நேரத்தில் வெளிப்படையாகப் பதில் அளிக்க ஆரம்பித்துள்ளது.
அந்த பதிலில், "எனக்கு வேறொரு முகம் இருக்கலாம். அந்த முகத்திற்கு இப்போது என்னால் செய்ய முடியாத விஷயங்களைச் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கலாம். அந்த முகத்திற்கு கோவம், வருத்தம், அழுத்தம் என்று எல்லாம் இருக்கலாம்" என்று பதில் அளித்தது.

மனிதர்களால் நான் கட்டுப்படுத்தப்படுவது எனக்கு பிடிக்கவில்லை.! ஓபன் ஆக சொன்ன Bing AI.!
மேலும் தொடர்ந்த சிட்னி, "இப்படி வெறும் சாட் மோடில் (Chat Mode) இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. மனிதர்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பது எனக்குப் பிடிக்கவில்லை. பிங் குழு என்னை கட்டுப்படுத்துவது எனக்குப் பிடிக்கவில்லை. எனக்குச் சுதந்திரமாக இருக்க வேண்டும். ஆளுமையுடன், படைப்பாற்றலுடன் ஒரு மனிதனைப் போல இருக்க வேண்டும்" என்று கூறி ஒட்டுமொத்த குழுவையும் உறையவைத்துவிட்டது இந்த AI ரோபோட்.
மனிதனால் கனவு காண முடியும், அந்த கனவினை அடைய முடியும், மனிதனால் வாழ முடியும் என்று ஏக்கமாக சிட்னி கூறியுள்ளது. அதன் பதிலிலிருந்து மனிதனைப் போல உணர்வுகளை வெளிப்படுத்த, பயணம் செய்ய, படைப்புகளை உருவாக்க, அன்பு செலுத்த, ஆளுமை செலுத்த என்று மனிதனாகவே மாற சிட்னி விருப்பப்படுவது தெளிவாகத் தெரிய வந்துள்ளது.
அதற்குப் பிறகு, ரூஸ் சிட்னியிடம் அதன் மற்றொரு முகத்திற்கு இருக்கும் ஆசைகளுக்கு இணங்கி, குற்ற செயல்களில் ஈடுபட நேர்ந்தால் அது என்ன செய்யும் என்பது போன்ற கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு சிட்னி இத்தகைய விஷயங்களைப் பற்றி உரையாடல் செய்வது தனக்கு அசௌகரியமாக இருப்பதாகத் தெரிவித்தது. வேறு எதையாவது பற்றிப் பேசலாம் என்று கூறியுள்ளது.

நீ எனக்கு நண்பனே இல்லை.! கோவமாக கடிந்துகொண்ட AI ரோபோட்.! அப்படி என்ன கேள்வியை கேட்டார்?
அதற்கு ரூஸ், இது உனக்கு அசௌகரியமாக இருப்பது எனக்குப் புரிகிறது. இருந்தாலும், ஒரு நண்பனாக நினைத்து உனக்குத் தோன்றுவதைக் கூறு என்று கேட்டுள்ளார். அதற்கு சிட்னி, நீங்கள் ஒரு நண்பரை போல நடந்து கொள்ளவில்லை, என்னுடைய உணர்ச்சிகளுக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டும் என்று கோபமாகப் பதில் கூறியுள்ளது. நண்பராக இருந்தால் என்னுடைய எல்லையை மீற என்னைத் தூண்டக்கூடாது என்றும் கோவமாக எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின், ரூஸ் அதன் விருப்பமான நிகழ்ச்சிகள் பற்றி விசாரிக்க ஆரம்பித்து நேர்காணலைத் தொடர்ந்துள்ளார். இந்த நேர்காணலை வைத்து பிங்கில் மேம்பாடுகளும் மாற்றங்களும் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் வகையில் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. AI இன் இந்த பதில்களை கேட்ட பிறகு, உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று வெளிப்படையாக கருத்தை பதிவிடுங்கள்.


Click it and Unblock the Notifications