18 மாடி, 6000 பணியாளர்கள்: சென்னையில் திறக்கப்பட்ட நாட்டின் 2-வது பெரிய அமேசான் அலுவலகம்- வேலை வாய்ப்பு அமோகம்
சுமார் 50 பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட அமேசான் இன்று 14000 பணியாளர்களுடன் இயங்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது பெருங்குடியில் பிரமாண்ட அளவில் பெரிய அலுவலகம் திறக்கப்பட்டு இருக்கிறது. சுமார் 8.23 லட்ச சுதர அடி பரப்பளவில் 18 மாடிகள் உடன் 6000 தொழிலாளர்கள் பணிபுரியும் வசதியோடு அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மிகப் பெரிய அலுவலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நாட்டிலேயே இரண்டாவது பெரிய அலுவலகம்
சென்னை பெருங்குடியில் உள்ள ராஜீவ் காந்தி சாலையின் தகவல் தொழில்நுட்ப வழித்தடத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நான்காவது அலுவலகம் இதுவென்றாலும், இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய அலுவலகம் இது என கூறப்படுகிறது. இந்த அலுவலகம் 18 தளங்கள் உடன் 6000 தொழிலாளர்கள் பணியாற்றும் வசதியோடு இருக்கும் என கூறப்பட்டிருக்கிறது. இந்த அலுவலகத்தில் அமேசானின் எக்கோ சாதனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவும் இந்த அதிநவீன கட்டிடத்தில் இயங்கும் என கூறப்படுகிறது. இது நாட்டிலேயே இரண்டாவது பெரிய அலுவலகம் ஆகும்.

முதலீடு குறித்து வாழ்த்து தெரிவித்து பேசிய தமிழக முதலமைச்சர்
அமேசான் நிறுவனத்தின் இந்த முதலீடு குறித்து வாழ்த்து தெரிவித்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது முதலீட்டுக்கு உகந்த கொள்கைகள் மற்றும் மாநிலத்தின் திறமையாளர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவதற்கான அர்ப்பணிப்பின் விளைவாகும் என குறிப்பிட்டார். அமேசானின் புதிய அலுவலகம் தமிழகத்தின் சென்னையில் அமைக்கப்பட்டதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் பல மடங்கு விளைவை ஏற்படுத்தும் என நம்புகிறோம், விரிவாக்கமும் முதலீடும் மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் சமூகநலனில் பல மடங்கு நல்வினையை ஏற்படுத்தும் என நம்புவதாக குறிப்பிட்டார்.
அமேசானின் மிகப்பெரிய அலுவலக வசதி
அமேசானின் மிகப்பெரிய அலுவலக வசதியை தமிழகத்தில் திறந்து வைப்பதில் தான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என மு.க.ஸ்டாலின் கூறினார். இந்த நிகழ்வில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஐடி துறை முதன்மை செயலாளர் நீரஜ் மிட்டல் மற்றும் அமேசான் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

"பே டு க்விட்" என்ற போனஸ் அறிவிப்பு
அமேசான் நிறுவனம் எப்போதும் தங்களது ஊழியர்களை ஆக்டிவ் உடன் வைத்திருப்பதில் பெருமை பெற்றது. அதன்படி சமீபத்தில் அமேசான் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு "பே டு க்விட்" என்ற போனஸ் அறிவிப்பை வெளியிட்டது. அதாவது அமேசான் ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறினால் சுமார் 3 லட்சம் வரை போனஸ் வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்தது. இந்த மெயில் அமேசான் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பெசோஸ் மூலம் அனுப்பப்பட்டிருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பெசோஸ் அந்த தலைப்பில் "தயவுசெய்து இந்த சலுகையை ஏற்க வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.

வெளியேறினால் $2000 முதல் $5000 வரை போனஸ்
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இதுகுறித்து கூறுகையில், பணியாளர்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறினால் $2000 முதல் $5000 வரை போனசாக பெறுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். அதாவது 5000 டாலர் என்று பொருட்கொள்ளும்பட்சத்தில் இந்திய மதிப்பில் சுமார் 3.72 லட்சம் வரை ஆகும். பணியாளர்கள் இந்த போனஸை எடுக்க முடிவு செய்தால், அமேசானில் மீண்டும் வேலை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எல்லோரையும் சிறிது நேரம் இதுகுறித்து சிந்தித்து ஊக்கத்தோடு செயல்பட வைப்பதே இதன் நோக்கமாகும். அமேசான் தற்போது அறிவித்த சலுகையானது "பே டூ க்விட்" என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அமேசான் நிறுவனரின் நோக்கம்
அமேசான் நிறுவனம் ஜெப்பெசோஸ் இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளார். அமேசான் நிறுவனரின் நோக்கம் அனைத்து ஊழியர்களையும் சிறிது நேரம் ஒதுக்கி சிந்திக்க வைத்து ஊக்குவிப்பதே ஆகும். தங்களது ஊழியர்கள் உண்மையாக என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதே ஆகும். இந்த போனஸை ஏற்று பணியாளர்கள் வெளியேறும் பட்சத்தில் இந்த பணம் வழங்கப்படும் ஆனால் மீண்டும் அமேசானில் வேலை செய்யவே முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எல்லோரும் உண்மையில் என்ன விரும்புகிறார்கள் என்று அறியவும் அவர்களை சிந்திக்க வைத்து ஊக்குவிப்பதே குறிக்கோள் எனவும் பெசோஸ் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் நீண்ட காலமாக ஒரு ஊழியர் அவர்கள் இருக்கு விரும்பாத இடத்தில் நீடிப்பது பணியாளருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ ஆரோக்கியமானதல்ல எனவும் பெசோஸ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications