Google Pay-ல் ரிவார்டு மழை! UPI பேமெண்ட் முதல் மளிகை வரை.. புதிய சலுகைகள்.. இதோ முழு விவரம்..
பண்டிகை காலம் வந்துவிட்டாலே வங்கிகளும், டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கும். அந்த வகையில், கூகுள் பே (Google Pay) தனது Flex கிரெடிட் கார்டு ரிவார்டு திட்டத்தில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
அதாவது ஆக்சிஸ் பேங்க் (Axis Bank) மற்றும் எஸ்பிஐ கார்டு (SBI Card) இணைந்து வழங்கும் கூகுள் பே Flex கிரெடிட் கார்டின் ரிவார்டு திட்டத்தில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் 2026 அக்டோபர் 16 முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதன் மூலம், UPI மூலம் பணம் செலுத்துபவர்களுக்கும், அன்றாட செலவுகளுக்குக் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துபவர்களுக்கும் கூடுதல் ரிவார்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

Flex கிரெடிட் கார்டு வைத்திருக்கும் கூகுள் ஒன் (Google One) வாடிக்கையாளர்கள், ஒரு ரிவார்டு சைக்கிளில் ரூ.15,000-க்கு மேல் செலவு செய்தால் கூடுதல் சலுகைகளைப் பெறலாம். கூகுள் ஒன் சந்தா வைத்திருப்பவர்களுக்கு, தகுதியான செலவுகளுக்கு 3.2% வரை ரிவார்டு கிடைக்கும். கூகுள் ஒன் சந்தா இல்லாதவர்களுக்கு, அதே செலவு வரம்பைத் தாண்டிய பிறகு தகுதியான பரிவர்த்தனைகளுக்கு 1.6% ரிவார்டு வழங்கப்படும். இந்த ரிவார்டுகள் 'ஸ்டார்' (Star) வடிவில் வழங்கப்படுகின்றன. ஒரு ஸ்டாரின் மதிப்பு ரூ.1 ஆகும்.
கூகுள் ஒன் (Google One) மெம்பர்களுக்கு உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்கும்போதும் கூடுதல் ரிவார்டுகள் கிடைக்கும். ஒவ்வொரு ரிவார்டு சைக்கிளிலும், முன்னணி உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் டெலிவரி ஆப்களில் ரூ.5,000 வரை செய்யும் தகுதியான செலவுகளுக்கு 5% கூடுதல் ரிவார்டு வழங்கப்படும். இதன் மூலம், அன்றாட உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்கும் செலவுகளிலும் பயனர்கள் கூடுதல் பலன் பெற முடியும்.
அதேபோல், மின்சாரக் கட்டணம் செலுத்துவது, OTT தளங்களுக்குச் சந்தா செலுத்துவது மற்றும் மொபைல் ரீசார்ஜ் செய்வது போன்றவற்றுக்கும் சிறப்புச் சலுகைகள் உள்ளன. இந்த சேவைகளில் ஒவ்வொரு ரிவார்டு சைக்கிளிலும் ரூ.3,000 வரையிலான தகுதியான செலவுகளுக்கு 15% கூடுதல் ரிவார்டு கிடைக்கும். இருப்பினும், இந்தச் சலுகைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கார்டுதாரர்கள் தெளிவாகச் சரிபார்த்துக்கொள்வது அவசியம்.
ரெஃபர் செய்தால் எவ்வளவு ரிவார்டு கிடைக்கும்?
Flex கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு மற்றொரு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்டு திட்டத்தில் சேர நண்பர்கள் அல்லது குடும்பத்தினரைப் பரிந்துரை செய்தால், ஒவ்வொரு ரெஃபரலுக்கும் ரூ.1000 வரை ரிவார்டு பெறலாம். மேலும், எத்தனை பேரை வேண்டுமானாலும் ரெஃபர் செய்யலாம் என்றும், இதற்கு குறிப்பிட்ட வரம்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சலுகையைப் பெறுவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முன்கூட்டியே சரிபார்த்துக்கொள்வது நல்லது.
அதேபோல் புதிதாக Flex கார்டு வாங்குபவர்களுக்கும் வெல்கம் ரிவார்டு சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளது. கார்டு பெற்ற முதல் 60 நாட்களுக்குள், தேர்வு செய்யும் கார்டு வகையைப் பொறுத்து ரூ.2,500 வரை வெல்கம் ரிவார்டுகளைப் பெற முடியும். இதனால், புதிதாக இந்தக் கார்டைப் பெற விரும்புபவர்களுக்கும் கூடுதல் பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

மொத்தத்தில் Flex கிரெடிட் கார்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய மாற்றங்கள், அன்றாட செலவுகளை கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். UPI பேமெண்ட், உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்குவது, மொபைல் ரீசார்ஜ் செய்வது போன்ற செலவுகளுக்கு ரிவார்டுகள் கிடைப்பதால், வாடிக்கையாளர்கள் கூடுதல் பலன்களைப் பெற வாய்ப்புள்ளது.
இருப்பினும், இந்தச் சலுகைகளைப் பெறுவதற்கு கார்டின் விதிமுறைகள், தகுதி வரம்புகள் மற்றும் ரிவார்டு வழங்கப்படும் முறையைத் தெளிவாகத் தெரிந்துகொள்வது அவசியம்.
photo credit: fonearena, google


Click it and Unblock the Notifications
