என்னென்ன சொல்லிருக்கான் பாருங்க.. டிண்டர் காதலனிடம் ரூ.4.5 லட்சத்தை இழந்த பெண்.!
இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருப்பது அனைவரின் கடமையாகும். இந்நிலையில் டிண்டர் காதலனிடம் ரூ.4.5 லட்சத்தை இழந்த பெங்களூர் பெண் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இப்போது இதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
பெங்களூருவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 37 வயதான பெண் ஒருவர், இந்தியாவில் மிகவும் பிரபலமான டேட்டிங் செயலியான டிண்டர் மூலமாக மும்பையைச் சேர்ந்த அத்விக் சோப்ரா என்ற நபருடன் பழகி வந்துள்ளார். மேலும் லண்டனில் மருத்துவப் பயிற்சியாளராக இருப்பதாக அத்விக் சோப்ரா கூறியதை நம்பி, அப்பெண் அந்நபருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இவர்களது நட்பு காதலாக மாற, அப்பெண்ணை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து லண்டனில் இருந்து துபாய் வழியாகப் பெங்களூரு வரவிருப்பதாக அத்விக் சோப்ரா கூறியிருக்கிறார். எனவே ஆன்லைனில் மட்டுமே பழகி வந்த அத்விக் சோப்ராவை நேரில் காணும் ஆவலில் இருந்து வந்துள்ளார் அந்த பெண்.
இந்நிலையில் தான் அந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு கடந்த மே 17-ம் தேதி அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் இருந்து பேசிய நபர், தான் இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அத்விக் சோப்ரா டெல்லி விமான நிலையத்திற்குக் கணக்கில் வராத பணத்தை எடுத்து வந்துள்ளதாகவும், எனவே அவரை இங்கிருந்து அனுப்புவதற்கு ஒப்புதல் கட்டணமாக ரூ.68,500 செலுத்த வேண்டும் என்று அந்த நபர் கூறியிருக்கிறார்.
அதன்பின்பு சில மணி நேரத்திற்குப் பின்னர் மீண்டும் தொடர்ந்து கொண்ட அந்த நபர் கட்டணமாக ரூ.1.8 லட்சமும், செயலாக்க கட்டணமாக கூடுதலாக ரூ.2.06 லட்சமும் கட்ட வேண்டும் என்று மாற்றிக் கூறியிருக்கிறார். குறிப்பாக அத்விக் சோப்ரா மீதான கண்மூடித்தனமான நம்பிக்கையில், அதிகாரி போல் பேசிய அந்த நபர் கேட்ட தொகையை, அவர் அளித்த வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார் அந்த பெண்.
இதைதொடந்து மீண்டும் தொடர்புகொண்ட அந்த போலி அதிகாரி, ஜிஎஸ்டி கட்டணமாக மேலும் ஒரு 6 லட்சம் ரூபாய் கேட்டதால் அந்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அதிகாரியைப் போல் பேசிய நபரிடம் துருவித்துருவி கேள்வி கேட்டுள்ளார். இதனால் அந்த நபர் அழைப்பைத் துண்டித்துவிட்டுத் தலைமறைவானார்.

அதன்பின்பு தான் போனில் பேசிய நபர் போலியான அதிகாரி என்பது அந்த பெண்ணுக்குத் தெரியவந்தது. மேலும் அத்விக் சோப்ரா மீது சந்தேகமடைந்த அந்த பெண், அவரின் டிண்டர் ஐடிக்கு சென்று பார்த்தபோது, அந்த அக்கவுண்ட் நீக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அத்விக் சோப்ராவால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார் அந்த பெண்.
இதனைத் தொடர்ந்து டிண்டர் காதலனிடம் ரூ.4.5 லட்சத்தை இழந்த அந்த பெண் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது முன்பு கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்துத்தான் திருடினார்கள். இப்போது மொபைல்போன் மூலமாகவே எளிமையாகக் கொள்ளையடிக்கின்றனர். எனவே டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருப்பது அனைவரின் கடமையாகும்.


Click it and Unblock the Notifications








