விடவே கூடாது.. பெங்களூரு நேர்காணலின் கருப்பு பக்கம்.. இளம்பெண்ணுக்கு வந்த இமெயில்.. கொதிக்கும் இளைஞர்கள்!
பெங்களூருவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மூன்று சுற்று நேர்காணலில் தகுதி பெற்றும், அற்ப காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டுள்ளார். இந்த காரணத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, அடுக்கடுக்கான கேள்விகள் மூலம் நம்முடைய சமுதாயத்தின் மீதான கருப்பு பக்கத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறார். இதுகுறித்த விவரம் இதோ.
இன்றைய காலத்தில், கடன் வாங்கி படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களின் கஷ்டத்தைப் பற்றி யாருக்கும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. பொழுது விடிந்தால் போதும், இன்று வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், பல கம்பெனிகளுக்கு ஏறி இறங்குகிறார்கள். இதில் பல இளைஞர்கள் அற்ப காரணங்களுக்காகவும், அப்ளை செய்த வேலைக்கு துளியும் சம்பந்தமே இல்லாத கேள்விகளாலும் நிராகரிக்கப்படுவதை, யாரும் மறுக்க முடியாது.

இதுபோன்று பல சம்பவங்களை கேள்விப்பட்டிருப்போம். ஏன்? நாமும் நிராகரிக்கப்பட்ட சூழ்நிலையை கடந்து வந்திருப்போம். இந்த நிராகரிப்பு காரணங்கள் பல நேரங்களில் பொதுவானதாகவே இருக்கும். ஆனால், பெங்களூருவை சேர்ந்த இளம்பெண் ஒருவரை நேர்காணல் செய்த நிறுவனம், வித்தியாசமான காரணத்தை சொல்லி நிராகரித்து இருக்கிறது. இந்த காரணம் நிறத்தை பற்றியதாக இருப்பதால், சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது.
பிரதிக்ஷா ஜிச்கர் (Pratiksha Jichkar) என்னும் இளம்பெண், கடந்த வாரம் அங்குள்ள பிரபல நிறுவனத்துக்கு நேர்காணலுக்கு சென்றுள்ளார். அந்த நிறுவனத்தின், மூன்று சுற்று நேர்காணலில் தகுதி பெற்றும், அவர்கள் கொடுத்த ஒரு அசைன்மெண்ட்டை சரியாக செய்தும் முடித்துள்ளார். இதையடுத்து, இமெயில் மூலம் ஆஃபர் லெட்டர் வரும் என்று காத்திருந்தார். அந்த பெண் நினைத்தபடியே இமெயில் வந்தது, ஆனால் அது "நிராகரிக்கப்பட்டீர்கள்" என்பதை குறிப்பிட்டிருந்தது.
இந்த நிராகரிப்புக்கான காரணத்தை படித்த பிரதிக்ஷா ஜிச்கர், உடனே அதை அவரது லிங்க்ட்இன் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த காரணத்தை பார்த்தால் உங்களுக்கே விசித்திரமாக இருக்கும். இதுகுறித்து பிரதிக்ஷா ஜிச்கர் அவரது லிங்க்ட்இன் பக்கத்தில், "என்னுடைய நேர்காணலின் இறுதிச்சுற்றில், நான் நிராகரிக்கப்பட்டேன். மூன்று சுற்றுகளில் வெற்றி பெற்றும், ஒரு அசைன்மெண்ட்டை சரியாக செய்தும், எனது திறமைகள், தகுதிகள், அனுபவங்கள் அந்த பணிக்கு போதவில்லை.
ஏனென்றால், நான் வேலை செய்யப்போகும் டீம் மெம்பர்களைவிட எனது தோலின் நிறம் அழகாக இருந்துவிட்டது. ஆகவே, பணியமர்த்தல் மேலாளர், அந்த டீமில் எந்தவித வேறுபாடும் இருக்கக்கூடாது என்பதால் என்னை நிகாரித்து விட்டார். அப்படியென்றால், அவருக்கு எவ்வளவு இரக்கக் குணம் இருக்க வேண்டும். அந்த நேரத்தில், நான் திகைக்கவில்லை, அதிர்ச்சியடையவில்லை. ஆனால், நாம் எப்படிப்பட்ட உலகத்தை நோக்கிச் செல்கிறோம் என்பதைப் பற்றி மிகவும் கவலைப்பட்டேன்.
இங்கு, நாம் பன்முகத்தன்மை, சம உரிமை மற்றும் நிலைத்தன்மை பற்றி பேசுகிறோம். ஆனால், நிறம், மதம் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் மக்களை மதிப்பிடுகிறோம். இந்த உலகில் திறமையின் அடிப்படையில் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தும் அதே வேளையில், செயற்கை நுண்ணறிவு மூலம் அபரிமிதமான கற்றல் திறனையும், அசாதாரண தொழில்நுட்பங்களையும் உருவாக்கி மக்களை பணியமர்த்தாமல் இருக்கிறோம்.
இதைப் படித்துக் கொண்டிருப்பவர்கள், திறமைகளையும், ஆற்றலையும் உடையவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் வகையில், உங்களது கலாச்சாரத்தை மாற்ற முயற்சி செய்யுங்கள். இங்கு சிறந்து விளங்கும் நிறுவனங்கள், திறமையான தலைவர்களால் உருவாக்கப்படவில்லை. மரியாதை, கலாச்சாரம், பின்புலம், அரசியல் மற்றும் போட்டி ஆகியவற்றை கடந்து திறமையால் வளரும் ஊழியர்களால் உருவாக்கப்படுகின்றன" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பலரும் பகிர்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








