நிரந்தர வொர்க் ஃப்ரம் ஹோம்.. 48 மணி நேரத்தில் 3000 விண்ணப்பங்கள்.. ஸ்பிரிங்வொர்க்ஸ் சிஇஓ ட்வீட்!
பெங்களூருவில் செயல்பட்டுவரும் டெக் ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு 48 மணி நேரத்தில் 3,000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இந்த நிறுவனம் நிரந்தர வொர்க் ஃப்ரம் ஹோம் பணிகளை வழங்குவதால், இப்படி நடத்திருக்கலாமென்று நினைக்கும் வேளையில், அந்த நிறுவனத்தின் சிஇஓ கார்த்திக் மண்டவில்லி வேறொரு காரணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இன்றைய காலத்தில் வேலைவாய்ப்பு என்பது அரிதாகி வருகிறது. படித்தப் படிப்புக்கு வேலை கிடைக்காமல், கிடைத்த வேலைக்கு சென்றுவரும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்துவிட்டது. இதனால், பெரும்பாலானோர், சம்பந்தமே இல்லாத துறைகளுக்கு வேலைக்கு செல்வதை பற்றி கவலைப்படுவதில்லை. இருப்பினும், அவர்களுக்கான வேலை கிடைக்கும் வரையில் அதை தேடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அதேபோல, படித்து முடித்துவிட்டு வேலை தேடுவதிலேயே பல ஆண்டுகளை செலவழிக்கும் இளைஞர்களும் இங்கு ஏராளமாக இருக்கின்றனர். இன்னும் சிலர், அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இப்படி அனைத்திலும் பொதுவாக இருப்பது வேலை தேடுவதுதான். இதனால், எங்கு பார்த்தாலும் போட்டிகள் நிறைந்து விட்டன.
ஒரு காலி பணியிடங்களுக்கு கூட 100 பேர் விண்ணப்பிக்கும் சூழல் இருக்கிறது. இது தனியார் துறைக்கும் பொருந்தும் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், பெங்களூருவில் செயல்பட்டுவரும் ஒரு டெக் நிறுவனத்துக்கு 48 மணி நேரத்தில் 3000 விண்ணப்பங்கள் வந்துள்ளது. ஒரு மாதத்தில் மட்டும், 12,500 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் வியப்பும் கவலையும் அடைந்த அந்த நிறுவனத்தின் சிஇஓ கார்த்திக் மண்டவில்லி, ட்விட்டரில் அதற்கான காரணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஸ்பிரிங்வொர்க்ஸ் (Springworks) என்னும் டெக் ஸ்டார்ட் அப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மனித வள மேம்பாடு தொடர்பான பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. ஜூன் மாத கடைசியில் அதற்கான விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.
அப்போதில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்து வந்துள்ளனர். இதுவரை 12,500க்கும் அதிகமான விண்ணப்பங்களும், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 3000 விண்ணப்பங்களும் குவிந்துள்ளன. இதுகுறித்து சிஇஓ கார்த்திக் மண்டவில்லி, தனது ட்விட்டர் பக்கத்தில், "எங்களது நிறுவனத்தில் கம்பெனி செக்ரட்டரி, டேட்டா என்ட்ரி, இன்ஜினியர், ப்ராடெக்ட் சேல்ஸ் ஆகிய வெறும் 10 காலிப் பணியிடங்களுக்கு விண்ணங்களை வரவேற்றோம்.
ஜூன் 30ஆம் தேதி வரையில் மட்டும் 13,000 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. குறிப்பாக, ஜூன் 14, 15 தேதிகளில் மட்டும் 3000 ஆயிரம் விண்ணங்கள் வந்துள்ளன. எங்கள் நிறுவனத்தில் நிரந்தர வொர்க் ஃப்ரம் ஹோம் பணியிடம் இருக்கிறது என்பதால், இவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்று நினைத்தோம். ஆனால், இது எவ்வளவு மோசமான வேலை சந்தையை நாம் எதிர்கொண்டு வருகிறோம் என்பதை காட்டியிருக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications








