டிஜிட்டல் கைது என்ற மோசடியில் சிக்கிய சாப்ட்வேர் இன்ஜினியர்.. ரூ.11.8 கோடி பறிப்பு.. மக்களே எச்சரிக்கை..
இந்த டிஜிட்டல் (digital) யுகத்தில் ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருப்பது அனைவரின் கடமையாகும். கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழி கேள்விப்பட்டிருப்போம் அதேபோல் இந்த டிஜிட்டல் யுகத்திலும் இருக்க வேண்டும்.
குறிப்பாக சிறுக சிறுக சேமித்த பணம்,உங்கள் முக்கிய புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தும் டிஜிட்டல் மையமாக்கப்பட்டிருக்கின்றன. டிஜிட்டல் இந்தியாவில் எச்சரிக்கையாக இருக்கும்படி பல்வேறு வகையில் அறிவுறுத்தப்பட்டு வந்தாலும் ஆங்காங்கே மோசடி கும்பல் விரிக்கும் வலையில் பொதுமக்கள் சிக்கிக் கொள்கின்றனர் என்று தான் கூறவேண்டும்.

இந்நிலையில் பெங்களூருவில் (Bengaluru) நடந்த டிஜிட்டல் கைது மோசடியில் 39 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் (software engineer) ரூ.11.8 கோடியை இழந்துள்ளார். தற்போது அவரிடம் பணம் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (Telecom Regulatory Authority of India) அதிகாரி என்று கூறிக்கொள்ளும் ஒருவரிடமிருந்து பாதிக்கப்பட்ட சாப்ட்வேர் இன்ஜினியருக்கு நவம்பர் 11-ம் தேதி அழைப்பு வந்துள்ளது. ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட உங்களது சிம் கார்டு சட்டவிரோத விளம்பரங்கள் மற்றும் துன்புறுத்தல் செய்திகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த சாப்ட்வேர் இன்ஜினியரிடம் அந்த அழைப்பில் கூறியுள்ளனர்.
அதுவும் மும்பையின் கொலாபா சைபர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உங்களை டிஜிட்டல் கைது (digital arrest) செய்வதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், நேரில் வந்து கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம் என்று போனில் அழைத்தவர் பயம் காட்டியுள்ளார்.
அதன்பின்பு இந்த விஷயத்தை ரகசியமாக வைத்திருக்கும்படியும் எச்சரித்துள்ளனர். மேலும் ஸ்கைப் செயலி (Skype app) பதிவிறக்கம் செய்யச் சொல்லிப் பேசியுள்ளனர். வீடியோ அழைப்பில் பேசிய அந்த நபர் போலீஸ் சீருடையில் இருந்துள்ளார். அவர், சாப்ட்வேர் இன்ஜினியரிடம் உங்கள் ஆதார் எண் பயன்படுத்தி மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது என்று கூறியுள்ளார், போலீஸ் சீருடையில் இருந்த இன்னொருவர் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. நாங்கள் சொல்வதை கேட்டகத்தவறினால் உங்கள் மொத்த குடும்பத்தையும் கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம் என மிரட்டியுள்ளார்.
இதைக் கேட்டதும் சாப்ட்வேர் இன்ஜினியர் பதறிப்போனார். உடனே அவர் கூறியபடி எல்லாம் செய்துள்ளார். அதாவது கைது அச்சத்தில், அவர்கள் கூறியபடி, பல பரிவர்த்தனைகளில் ரூ.11.8 கோடியை ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். குறிப்பாக ஒவ்வொரு முறையும் பணம் அனுப்பிய பிறகும், மீண்டும் கேட்பதை அந்த நபர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இதனால் சாப்ட்வேர் இன்ஜினியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தான் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் கொண்ட அந்த சாப்ட்வேர் இன்ஜினியர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்பு போலீஸ் விசாரணையில், அவர் மோசடி கும்பலிடம் பணத்தைப் பறிகொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும் மோசடி மற்றும் ஆள்மாறாட்டம் செய்ததற்காக தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் (பி.என்.எஸ்) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனப் பெங்களூரு போலீசார் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications








