ஒரே நேரத்தில் EPFO கொண்டு வரும் 3 மாற்றங்கள்.. 7.5 மடங்கு அதிக பணம், புது வட்டி விகிதம், ஈஸி வித்ட்ராவல்!
இபிஎப் (EPF) சந்தாதாரர்கள் விரைவில் மூன்று பெரிய மாற்றங்களை சந்திக்கலாம் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன. மிகவும் சமீபத்தில் தான் இபிஎப்ஓ (EPFO) என்கிற ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆனது புதிய வருமான வரிச் சட்டத்திற்கு இணங்க நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்த படிவங்கள் 15ஜி மற்றும் 15எச்-க்கு பதிலாக, ஒரே ஒருங்கிணைந்த படிவமான பார்ம் 121-ஐ அறிமுகப்படுத்தப்படுத்தி இருந்தது
இதற்கிடையில் தற்போது மேலும் மூன்று மாற்றங்கள் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று - குறைந்தபட்ச ஓய்வூதியத்தில் கணிசமான உயர்வை கொண்டுவர இந்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது, இரண்டு - வட்டி விகிதத்தில் மாற்றம். மூன்று - இபிஎப்ஓ (EPFO) ஆனது ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதை அனுமதிக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் பணத்தை விரைவாகவும் எளிமையாகவும் அணுக முடியும்.

பரிசீலனையில் உள்ள ஓய்வூதிய உயர்வு: ஊழியர் ஓய்வூதிய திட்டத்தின் (EPS-95) கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தில் கணிசமான உயர்வை கொண்ட வர இந்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. தற்போதைய குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.1,000 ஆனது ரூ.7,500 ஆக உயர்த்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 7.5 மடங்கு அதிகமாகும்.
இந்த உயர்வுக்கான கோரிக்கை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவதக்கவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தொழிற்சங்கங்கள் இந்த திருத்தத்திற்காக வலுவாக வலியுறுத்தியும் வருகின்றன. ஒரு நாடாளுமன்ற குழுவும், ஓய்வூதியத் தொகையை உயர்த்த பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்த இறுதிமுடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதம் மற்றும் பணம் எடுப்பதில் நிவாரணம்: ஓய்வூதிய மாற்றங்களுடன், இபிஎப்ஓ ஆனது கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 8.25% வட்டி விகிதத்தை வழங்கவும் வாய்ப்புள்ளது. இந்த முன்மொழிவு தற்போது நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஒப்புதல் கிடைத்தவுடன், வட்டி தொகை சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
இதேபோல செயல்பாட்டில் உள்ள மற்றொரு முக்கிய மாற்றம், ஏடிஎம் அடிப்படையிலான பிஎஃப் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்துவதாகும். இந்த நடவடிக்கை - இபிஎப்ஓ உறுப்பினர்கள் தங்களுடைய நிதியை எளிதாகவும், விரைவாகவும் அணுகுவதற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் எப்போது முதல் அமலுக்கு வரும் என்று விரைவில் அறிவிக்கப்படும்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இபிஎஃப்ஓ புதிய சாதனை படைத்துள்ளது: இபிஎப்ஓ ஆனது, கோரிக்கை தீர்வுகளில் வலுவான செயல்திறனை பதிவு செய்துள்ளது. 2025-26 நிதியாண்டில், இது 8.31 கோடி கோரிக்கைகளை தீர்த்துள்ளது, இது முந்தைய ஆண்டின் 6.01 கோடி கோரிக்கைகளை விட குறிப்பிடத்தக்க உயர்வாகும்.
இவற்றில், 5.51 கோடி கோரிக்கைகள் முன்பணம் அல்லது பகுதி பணம் எடுத்தல் தொடர்பானவை, இது பிஎப் பணம் எடுப்பது எளிமையாகியுள்ளது என்பதை காட்டுகிறது. இந்த அமைப்பு தானியக்கத்தின் மூலம் தனது செயலாக்க வேகத்தை மேம்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு 59.19% ஆக இருந்த முன்பண கோரிக்கைகள், இந்த ஆண்டு 71.11% ஆக மூன்று நாட்களுக்குள் தீர்க்கப்பட்டுள்ளன. மனித தலையீடும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
டிஜிட்டல் முன்னெடுப்புகள் செயல்முறைகளை எளிதாக்குகின்றன: டிஜிட்டல் முயற்சிகள் பயனர்களுக்கான செயல்முறையை எளிதாக்கியுள்ளன. காசோலை படங்களை பதிவேற்றத் தேவையின்றி 6.68 கோடி கோரிக்கைகள் செயல்படுத்தப்பட்டன. கூடுதலாக, எம்ப்ளாயரின் ஒப்புதல் இல்லாமலேயே 1.59 கோடி கணக்குகள் வங்கிகளுடன் இணைக்கப்பட்டன.
புதிய இ-ப்ராப்தி தளமும் அறிமுக செய்யப்பட்டுள்ளது: செயலற்ற பிஎப் கணக்குகளை செயல்படுத்த உதவும் வகையில், இபிஎஃப்ஓ ஆனது இ-ப்ராப்தி (E-PRAAPTI) என்கிற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆதார் (Aadhaar) அடிப்படையிலான அணுகலை பயன்படுத்தி, பழைய கணக்குகளை எளிதாக இணைக்க இந்த தளம் பயனர்களை அனுமதிக்கிறது. யுஏஎன் (UAN) உடன் கணக்குகள் இணைக்கப்படாதவர்களுக்கு இது பயனளிக்கும். எதிர்காலத்தில், உறுப்பினர் அடையாள எண் இல்லாத பயனர்களுக்கும் இந்த வசதி நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications