ஏழைங்க உழைப்பில் Bluetooth-ஐ வைத்து விளையாட்டு.. தானாக OFF ஆகும் இ-வண்டிகள்.. 7 ஆப்களுக்கு தடை!
இ-ரிக்ஷாக்களை (e-rickshaws) தொலைவில் இருந்து ஆஃப் செய்ய, தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், இதனால் சைபர் பாதுகாப்பு மற்றும் பயணிகள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் வந்த தகவல்களை தொடர்ந்து, ஏழு ஆப்களை (7 Apps) நீக்குமாறு ஆப்பிள் (Apple) மற்றும் கூகுள் (Google) நிறுவனங்களுக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது
ஓடிக்கொண்டிருக்கும் மின்சார ரிக்ஷாக்கள் உடன் ப்ளூடூத் (Bluetooth) மூலம் இணைந்து, அவற்றின் பேட்டரி மேலாண்மை அமைப்புகளை (BMS - Battery management system) செயல் இழக்க செய்யும் நபர்களின் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தடை செய்யப்பட வேண்டிய ஆப்களின் பட்டியலில் பிஏடி-பிஎம்எஸ் (BAT-BMS), லாசிஜி (Lossigy), இபோச் லி-அயன் (Epoch Li-ion) மற்றும் ஸ்மார்ட் பிஎம்எஸ் (Smart BMS) ஆகிய ஆப்களும் அடங்கும். இவற்றில் குறைந்தது இரண்டு ஆப்கள் சீன தயாரிப்புகள் ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் (BMS) என்பது அடிப்படையில் பேட்டரியின் நிலையை கண்காணிக்கும் ஒரு அமைப்பாகும். ஒரு பேட்டரி தொகுப்பிற்குள் (battery pack) உள்ள தனித்தனி பேட்டரி செல்களின் செயல்பாட்டில் உள்ள வேறுபாடுகளை நீக்கி, அவை சீராக செயல்படுவதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
அதிக திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி (large-capacity lithium ion battery) மூலம் இயங்கும் மின்சார வாகனங்களில் (electric vehicle - EV) இந்த அமைப்பு பொருத்தப்படுகிறது. இது பேட்டரியின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதிலும், பாதுகாப்பான பயன்பாட்டை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதில் ப்ளூடூத் இணைப்[பை கொண்டிருப்பதன் நோக்கம், இந்த பேட்டரிகளை கொண்ட வாகனங்கள் ஆனது ஒரு டிவைஸில் உள்ள ஒரு ஆப் மூலம் தொலைவிலிருந்து இணைத்து, பேட்டரியின் அளவுருக்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவுவதே ஆகும். இப்படியாக இணைக்கப்படும் ஆப் ஆனது, பேட்டரியின் மின்னூட்ட நிலை, மின்னழுத்தம், மின்னோட்டம், வெப்பநிலை, மின்னேற்ற சுழற்சிகள் மற்றும் அதன் ஒட்டுமொத்த ஆரோக்கியம் ஆகியவற்றை கண்காணிக்கப் பயனர்களை அனுமதிக்கிறது.
மேலும், இணக்கமான ஆப் ஆனது பயனர்களை மின்னேற்றம் மற்றும் மின்னிறக்க செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது, இதனால் இது பேட்டரி பழுது கண்டறிதல் மற்றும் பராமரிப்புக்கு பயனுள்ளதாக அமைகிறது. பிளே ஸ்டோர் பட்டியலின்படி, இந்த ஆப் சுமார் 15 மீட்டர் இயக்க வரம்பிற்குள் ப்ளூடூத் லோ எனர்ஜி (BLE) வழியாக பேட்டரிகளுடன் வயர்லெஸ் ஆக இணைய முடியும்.
இத்தகைய ஆப்கள் பொதுவாக பேட்டரி தொடர்பான பழுது கண்டறிதலுக்காக சேவை மையங்களில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், குறைந்த விலை மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் சில பிஎம்எஸ்-களின் பாதுகாப்பு உள்ளமைப்பில்தான் தற்போது கவலை உள்ளது. சந்தேகத்திற்கு உரிய ஆப்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் பிஎம்எஸ் உடன் இணைந்து, பேட்டரி சக்தியை துண்டித்து, வாகனத்தை திடீரென நிறுத்த பயன்படுத்தப்படலாம்.
பிஎம்எஸ் அமைப்புகளை வழங்கும் முன்னணி நிறுவனங்கள்: டெக்காஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (Texas Instruments), என்எக்ஸ்பி செமிகண்டெக்டர்ஸ் (NXP Semiconductors), அனலாக் டிவைஸஸ் (Analog Devices), இன்ஃபிநியான் டெக்னாலஜீஸ் (Infineon Technologies), எல்ஜி செம் (LG Chem), பானாசோனிக் (Panasonic) மற்றும் ரெனேசாஸ் எலக்ட்ரானிக்ஸ் (Renesas Electronics) ஆகியவை அடங்கும்.
CATL மற்றும் BYD போன்ற சீன பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களும் இத்துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன; இவற்றுடன் முறைசாரா சந்தைக்கு தேவையான சேவைகளை வழங்கும் பல சிறிய நிறுவனங்களும் இதில் உள்ளன. வாகனத் துறை ஆனது பிஎம்எஸ் அமைப்புகளுக்கான மிகப்பெரிய சந்தை பிரிவாக (50% பங்கு) உள்ளது. மின்சார வாகன பேட்டரி மேலாண்மை மற்றும் ஹைப்ரிட் வாகனங்களின் ஆற்றல் பயன்பாட்டை மேம்படுத்துதல் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகும்.


Click it and Unblock the Notifications