உலக மகா நாடகம்: ஆன்லைனில் சயனைடு ஆர்டர்: சத்து மாத்திரை என பாசமாக மனைவிக்கு கொடுத்து கொலை
ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்தவர் ரவி சைதன்யா, இவர் மதனபள்ளி பகுதியில் இயங்கி வரும் தனியார் வங்கியில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். இவர் முன்சூலூர் பகுதியை சேர்ந்த ஆமினி என்ற பெண்ணை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். அப்போது ரூ.15 லட்சம் ரொக்கமாகவும் 1 ஏக்கர் நிலத்தையும் வரதட்சனையாக கொண்டு வந்துள்ளார்.

மனைவி தங்கைக்கு 2 ஏக்கர் நிலம் வரதட்சனை
இவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்த வந்த நேரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆமினியின் சகோதரிக்கு திருமணம் நடந்துள்ளது. அப்போது ஆமினி பெற்றோர் 2 ஏக்கர் நிலத்தை வரதட்சனையாக வழங்கியுள்ளனர்.

நிலத்தை விற்று பணத்தை கொண்டுவருமாறு வற்புறுத்தல்
தனக்கு 1 ஏக்கர், மனைவியின் சகோதரிக்கு 2 ஏக்கர் என பொறாமை கொண்ட ரவி சைதன்யா ஆத்திரம் அடைந்துள்ளார். இதையடுத்து மனைவியிடம் இதுகுறித்து கூறி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தங்களுக்கு வழங்கப்பட்ட 1 ஏக்கர் நிலத்தை விற்று பணமாக கொண்டு வருமாறு வற்புறுத்தியுள்ளார் என கூறப்படுகிறது.

பாத்ரூமில் வழக்கி விழுந்து விட்டதாக மருத்துவமனையில் அனுமதி
இது போன்ற பிரச்னைகள் நடந்து வந்த நேரத்தில் கடந்த 27 ஆம் தேதி ஆமினி பாத்ரூமில் வழக்கி விழுந்து விட்டதில் படுகாயமடைந்தார் என ஆமினியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பின் ஆமினியை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் ஆமினி முன்னதாகவே இறந்துவிட்டார் என அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் வழக்கு பதிவு
இதையடுத்து ஒன்று தெரியாத அப்பாவி போல் நடித்து ஆமினியின் உடலை வீட்டுக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளார். ஆனால் மருத்துவர்கள் தடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆமினி உடற்கூறு ஆய்வுக்கு பிறகே வழங்கப்படும் என தெரிவித்துவிட்டனர்.

உடற்கூறு ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இந்த உடற்கூறு ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஆமினி சயனைடு சாப்பிட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து சந்தேகமடைந்த போலீஸார் ஆமினியின் பெற்றோரிடம் விசாரித்துள்ளனர். அப்போது ரவிசைதன்யா கூடுதல் வரதட்சனை கேட்டு தன் மகளை கொடுமை படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

சயனைடு கொடுத்ததாக ஒப்புதல்
ஆமினி பெற்றோர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் பேரில் ரவிசைதன்யா பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். ரவிசைதன்யாவிடம் போலீஸார் கிடுக்குபிடி விசாரணை நடத்தியதில், அவர் கூறிய வாக்குமூலம் பலரையும் கலங்கடித்துள்ளது. அதில் ரவிசைதன்யாதான் சயனைடு கொடுத்தார் என ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆன்லைனில் சயனைடு ஆர்டர்
ரவிசைதன்யா, ஆன்லைனில் சயனைடு ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அதை சத்து மாத்திரைக்குள்(டுயூப் மாத்திரை போன்று) நிறைத்து தனது மனைவி ஆமினிக்கு உன் உடல் மெலிந்து கொண்டு வருகிறது இந்தா சத்து மாத்திரை சாப்பிடு என கொடுத்துள்ளார்.

ஆன்லைனில் எப்படி சயனைடு வாங்கப்பட்டது
இதை சாப்பிட்ட ஆமினி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து ரவி சைதன்யாவை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொள்கின்றனர். இதில் ஆன்லைனில் எப்படி சயனைடு வாங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications