ஜூலை 1 முதல்.. இந்த வங்கியில் அக்கவுண்ட் இருக்கா? இனி ATM-ல் பணம் எடுக்கும்போது இதை தெரிஞ்சுக்கோங்க..
இந்தியாவில் யுபிஐ (UPI) செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதாவது கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm), கூகுள் பே (Google Pay) போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தி பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது.
குறிப்பாக நகரங்கள் முதல் துவங்கி உள்ளூர் சந்தைகள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகமாக இருந்தாலும், சில முக்கியத் தேவைகளுக்கு இன்னமும் ரொக்கப் பணம் தான் தேவைப்படுகிறது. அதற்கு ஏடிஎம் (ATM) மூலம் தான் பணம் எடுக்க வேண்டி இருக்கிறது.

ஆனால் சிலர் ஏடிஎம்களில் அடிக்கடி பணம் எடுத்துக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. இதுபற்றி பலருக்குச் சரியான விழிப்புணர்வு இல்லை. அதுவும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்குக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் விரைவில் அதற்கான செலவுகள் மேலும் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஆக்சிஸ் வங்கி (Axis Bank) தனது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டணங்களை (ATM transaction fees) அதிகரித்துள்ளது. இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு ஆக்சிஸ் வங்கி ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஆக்சிஸ் வங்கி அதன் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை அதிகரிக்கிறது.
குறிப்பாக ஜூலை 1-ம் தேதி முதல் ஆக்சிஸ் வங்கி அதன் ஏடிஎம் கட்டணங்களைத் திருத்தியுள்ளது. அதன்படி சேமிப்பு கணக்குகள், என்ஆர்ஐ கணக்குகள் மற்றும் அறக்கட்டளை கணக்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கணக்குகளில் செய்யும் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை அதிகரிப்பதாக ஆக்சிஸ் வங்கி அறிவித்துள்ளது.
அதுவும் வங்கி நிர்ணயித்த இலவச வரம்புக்குப் பிறகு ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 23 ரூபாய் வசூலிக்க அவ்வங்கி முடிவு செய்துள்ளது. அதேபோல் இலவச வரம்புக்குப் பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் ஆக்சிஸ் வங்கி முன்னர் 21 ரூபாய் வசூல் செய்து வந்தது. தற்போது ரூ.23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி திருத்தப்பட்ட ஏடிஎம் பரிமாற்ற கட்டண வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதன் அடிப்படையில் பல்வேறு வங்கிகள் ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணத்தை அதிகரித்துள்ளன. அதேபோல் இலவச வரம்பு என்பது, பெருநகரங்களில் 3 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகள் மற்றும் பெருநகரங்கள் அல்லாத நகரங்களில் 5 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகள் என்ற வரம்பு உள்ளது. இந்த வரம்புக்குப் பிறகு ஆக்சிஸ் வங்கி ஏடிஎம்களில் மூலம் பரிவர்த்தனை செய்தால் முன்பை விட அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் மற்ற வங்கிகள் கூட தங்களுடைய ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை அறிவித்துள்ளன. எனவே அந்தந்த வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம் தொடர்பான விவரங்களைத் தெரிந்துகொண்டு அதன்பிறகு பரிவர்த்தனை செய்தால் நல்லது. இல்லாவிட்டால் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
தொடர்ந்து ஏடிஎம் மூலம் மட்டுமே பணம் எடுத்துக் கொண்டிருந்தால் ஒரு பெரிய தொகை செலவழிந்துவிடும். எனவே தான் ஒரு முறை பணம் எடுக்கும் போகும் போது அடுத்து எவ்வளவு தேவைப்படும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு எடுத்தால் வீண் செலவு இருக்காது.


Click it and Unblock the Notifications