சைபர் மோசடிகளில் இருந்து பாதுகாக்க OTP அனுப்புவதில் புதுமையை கொண்டுவந்த பிரபல வங்கி.. எப்படி?
நாட்டில் மக்களிடையே சைபர் மோசடி குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அதிக அளவில் மோசடிக்கு ஆளாகி தங்களுடைய வாழ்நாள் சேமிப்பை இழந்து வருகின்றனர். அதுவும் மோசடி செய்பவர்கள் அரசாங்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் மக்களை ஏமாற்றுகின்றனர்.
குறிப்பாக ஆன்லைனில் மெசேஜ் அனுப்புவது, போன் செய்து மிரட்டுவது, லிங்குகளை அனுப்பி அதன் மூலம் சுய விவரங்கள் மற்றும் பணம் திருடுவது என எண்ணற்ற யுக்திகளை அதற்காகப் பயன்படுத்துகின்றனர். எனவே மக்கள் எப்போதும் ஓடிபி மற்றும் ஆன்லைன் பேங்கிங், யுபிஐ விஷயங்களில் அதிக கவனமாக இருக்க வேண்டும்.

இந்நிலையில் சைபர் மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்காக ஓடிபி (OTP) அனுப்பும் முறையில் ஆக்சிஸ் வங்கி (Axis Bank) புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த தகவல்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அதாவது வழக்கமாக மெசேஜ் (குறுஞ்செய்தி) வாயிலாகவே ஓடிபி அனுப்பப்படுகிறது. குறிப்பாக இதற்குத் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உதவி தேவைப்படுகிறது. ஆனால் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வழியாக இல்லாமல், ஆக்சிஸ் வங்கியின் செயலியான ஓபன் செயலியிலேயே ஓடிபி அனுப்பும் நடைமுறையை அந்த வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
அதுவும் பயனர்களுக்கு செயலியிலேயே குறிப்பிட்ட கால அவகாசம் வரை செல்லுபடியாகும் ஓடிபி அனுப்பப்படும். பின்பு பயனர்கள் அந்த ஓடிபி-ஐ பெற்றதும் வழக்கம் போல அதை உள்ளிட்டு, தங்கள் வங்கி பரிவர்த்தனைகளைச் செய்து கொள்ளலாம். செயலியில் உள்நுழைவதற்கு மட்டுமின்றி, பரிவர்த்தனைகளை மேற்கொள்வது உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கு இவ்வாறு ஓடிபி-ஐ பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விரைவாகவும், பாதுகாப்பாகவும் இணைய வங்கி சேவைகளை மேற்கொள்வதற்கு இது வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. ஆக்சிஸ் வங்கி கொண்டுவந்துள்ள இந்த புதிய வசதி வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 1 முதல் புதிய யுபிஐ மாற்றம்
அதேபோல் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் பேடிஎம் (paytm), போன் பே (PhonePe), கூகுள் பே (Google Pay) போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு புதிய விதிமுறைகள் வந்துள்ளன. அதன்படி யுபிஐ செயலிகளுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் குறிப்பிட்ட காலத்திற்குச் செயல்பாட்டில் இல்லையென்றால் அவை வங்கி கணக்கில் இருந்து அகற்றப்படும் என்று இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) தெரிவித்துள்ளது.
அதாவது உங்களது வங்கி கணக்கில் செயலற்ற மொபைல் இணைக்கப்பட்டிருந்தால் அது நீக்கப்படும். பின்பு கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ மூலம் நீங்கள் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது இது உங்களுக்குப் பிரச்சனையை ஏற்படுத்தும். தற்போது நாட்டில் சைபர் குற்றங்கள் அதிகரித்து உள்ளதால் NPCI இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் செயலற்ற மொபைல் நம்பர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக அவை யுபிஐ அமைப்புகளுக்குள் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகளை ஏற்படுத்தக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தான் வங்கி கணக்கில் செயலற்ற மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருந்தால் அது நீக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனவே நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பர் உங்கள் வங்கி கணக்குடன் இணைந்திருக்கிறதா என்பதை ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
மேலும் வங்கி கணக்கில் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் செயலில் இல்லை என்றாலோ அல்லது சிறிது காலமாக ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலோ அந்த நம்பர் உங்களுடைய பெயரில் இருக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா அல்லது எந்த ஆபரேட்டரை பயன்படுத்தியிருக்கிறீர்களோ அவர்களுடைய கஸ்டமர் கேருக்கு தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








