நவம்பரில் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 5

கணினி உலகில் வெற்றிக் கனி பறித்து வரும் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த தனது புதிய கணினி சாதனங்களைக் களமிறக்கி வருகிறது. ஆப்பிளின் ஆரம்ப கர்த்தாவான ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் மறைவுக்கு பின்னும் அவரின் பெயரையும் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் பெயரையும் நிலை நிறுத்தும் வண்ணம் கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் பல புதிய சாதனங்களைக் களமிறக்கி வருகிறது.
அந்த வகையில் ஆப்பிள் வரும் செப்டம்பரில் ஒரு மினி ஐபேடையும் அதனைத் தொடர்ந்து வரும் அக்டோபரில் ஐபோன் 5யும் ஆப்பிள் களமிறக்க இருக்கிறது. ஆப்பிள் ரசிகர்கள் இந்த புதிய சாதனங்களின் வரவிற்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
உலகம் முழுவதும் ஆப்பிளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும் இந்தியாவிலும் அதற்காக கணிசமான அளவில் ரசிகர்கள் உள்ளனர். ஆகவே ஆப்பிளுக்கும் இந்திய கணினி சந்தை ஒரு முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில் இந்த புதிய ஐபோன் 5ஐ எப்போது இந்தியாவில் களமிறக்குவது என்று தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.
வழக்கமாக இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஏர்செல் போன்ற ஒரு சில நிறுவனங்களின் கடைகளில் மட்டுமே ஆப்பிள் சாதனங்கள் சில்லறை விலைக்குக் கிடைக்கும். ஆனால் இந்த புதிய ஐபோன் 5ஐ சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் எல்லா நிறுவனங்களுக்கும் வழங்க இருக்கிறது ஆப்பிள்.
அதோடு இந்தியாவில் வரும் நவம்பர் 13 அன்று தீபாவளி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தீபத் திருவிழாவை முன்னிட்டு நவம்பர் மாதம் 9 அன்று ஆப்பிள் தனது புதிய ஐபோன் 5ஐ இந்தியாவில் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதை ஆப்பிள் இன்னும் ஊறுதிப்படுத்தவில்லை.
ஒரு வேளை அவ்வாறு நடந்தால் இந்தியாவில் உள்ள ஆப்பிள் ரசிகர்களுக்கு இந்த வருட தீபாவளி தித்திப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


Click it and Unblock the Notifications