கடுப்பில் சீனா.. குஷியில் இந்தியா.. இனி நாம தான் iPhone 16 Pro மற்றும் 17 போன செஞ்சு தரப்போறோம்.. எப்படி?
ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் அடுத்த புதிய ஸ்மார்ட்போன் சாதனமான ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 Series) மாடலை வரும் செப்டம்பர் 10, 2024 ஆம் தேதி உலகளவில் அறிமுகம் செய்யுமென்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு இடையில், ஐபோன் 16 வரிசையில் ப்ரோ மாடல்களான ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) மாடல்கள் இந்தியாவில் பிரத்தியேகமாக தயார் செய்யப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் தயார் செய்யப்படும் ஐபோன்கள் தான் உலகளவில் எக்ஸ்போர்ட் செய்யப்படப் போகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஐபோன் 16 தொடர் மாடல்கள் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஐபோன் 16 தொடரில் ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கமான பழக்கம் போல 4 புதிய ஐபோன் மாடல்களை நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதில் என்னென்ன மாடல்கள் வெளிவரும் என்ற விபரம் இங்கே.

ஆப்பிள் வரலாற்றில் முதல் முறையாக ப்ரோ மாடல்கள் இந்தியாவிலேயே தயாராக போகிறது:
இதில் ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) போன்ற மாடல்கள் எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் இந்தியாவில் தயாரிக்கப்படும். இது சீனாவிற்கு வெளியே ஆப்பிளின் ப்ரோ தொடர் பிரத்தியேகமாக உருவாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
புளூம்பெர்க்கின் கூற்றுப்படி, ஃபாக்ஸ்கான் (Foxconn) இந்தியா நிறுவனம் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களை அதன் இந்திய தொழிற்சாலைகளில் இருந்து உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஐபோன் 16 தொடர் அறிமுகப்படுத்திய சில வாரங்களில் இந்த ஐபோன் தயாரிப்பு துவக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஏழு ஆண்டுகளாக இந்தியாவில் ஐபோன்களை அசெம்பிள் செய்து வருகிறது.
இந்த ஆண்டின் முற்பகுதியில் வெளியான அறிக்கையின்படி, மொத்த ஐபோன் உற்பத்தியில் இந்தியா தற்போது 14% பங்கு வகிக்கிறது. அடுத்த ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 25% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, ஆப்பிள் ஐபோன் 17 இன் பிரத்யேக உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் இருந்தே தொடங்கலாம் என்ற கருத்தும் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 இந்தியாவில் உருவாக போகிறது:
ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் டைட்டானியம் ஒயிட், டைட்டானியம் பிளாக், டைட்டானியம் கிரே மற்றும் டைட்டானியம் கோல்டு ஆகிய 4 நிறங்களில் சந்தைக்கு வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது ஆப்பிளின் உற்பத்தி திட்டங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கிறது. சீனாவிற்கு அப்பால் அதன் உற்பத்தி தளத்தை பல்வகைப்படுத்துவதை ஆப்பிள் இப்போது நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியா, தாய்லாந்து, மலேஷியா போன்ற நாடுகளில் இப்போது ஐபோனை உருவாக்க துவங்கியுள்ளது.
Foxconn இன் இந்திய வசதிகள் புதிய உற்பத்திச் சுமையைக் கையாளத் தயாராகி வருகின்றன. புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி இடையூறுகளுக்கு மத்தியில் சீன உற்பத்தியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான ஆப்பிளின் புதிய திட்டம் தான் இந்தியா போன்ற நாடுகளில் ஐபோன் உற்பத்திக்கு வழிவகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிளின் விநியோகச் சங்கிலியில் இந்தியாவின் பங்கு படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய ஐபோன் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு பல ஆண்டுகளாக கணிசமாக வளர்ந்துள்ளது. இது 25% அதிகரிப்பை வரும் ஆண்டில் எட்டுமென்றும், பிறகு, இந்தியாவில் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், ஆப்பிள் அதன் விநியோகச் சங்கிலியில் அதிக ஸ்திரத்தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஐபோன் 17 இன் பிரத்தியேக உற்பத்திக்கான சாத்தியம் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகுமென்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications








