அசால்ட் செஞ்ச Apple.. அம்புட்டு பேரும் வாங்கும் விலையில் புதிய Rugged Watch!
மக்கள் மத்தியில் ஐபோன்களுக்கு (iPhones) இருக்கும் மவுசு ஆப்பிளின் மற்ற தயாரிப்புகளுக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆண்ட்ராய்டில் (Android) இருந்து ஐஓஎஸ்-க்கு (iOS) மாறிய பலரும் ஆப்பிளின் மற்ற கேஜெட்களை வாங்குவதையும் கருத்தில் கொள்கின்றனர். குறிப்பாக ஆப்பிள் வாட்ச் (Apple Watch) மாடல்களை!
ஐபோன்களுக்கு அடுத்தபடியாக ஆப்பிள் வாட்ச் மாடல்கள் மீதே பலரது கண்கள் உள்ளன. இருப்பினும் ஐபோன்களில் இருப்பது போலவே ஆப்பிள் வாட்ச்களிலும் கூட "பெரிய பட்ஜெட்" ஒரு முக்கிய சிக்கலாக இருக்கிறது. அதாவது ஐபோன்களை போலவே ஆப்பிள் வாட்ச்களின் விலை நிர்ணயமும் அதிகமாகவே இருக்கும்!

ஆப்பிள் வாட்ச் மீதான மக்களின் ஆர்வம் மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்களின் விலை நிர்ணயம் ஆகிய இரண்டிற்குமான இடைவெளியை குறைக்கும் நோக்கத்தின்கீழ் ஆப்பிள் நிறுவனமானது, அதன் ஹை-எண்ட் மாடலான ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவின் (Apple Watch Ultra) பட்ஜெட்-விலை வெர்ஷனை (Budget Price Version) உருவாக்கி வருகிறது.
எஃப்.சி.சி (FCC) வழியாக வெளியான லேட்டஸ்ட் ரெண்டர் புகைப்படங்களை (Latest Renders) வைத்தே இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளியான புகைப்படங்களில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவை "மறுவடிவமைப்பு" (Redesigned) செய்தது போன்ற ஒரு மாடலை பார்க்க முடிகிறது. அது ஒப்பீட்டளவில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவை விட மலிவான விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவூட்டும் வண்ணம் ஆப்பிளின் முதல் வாட்ச் அல்ட்ரா (Apple Watch Ultra) மாடலானது கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் வாக்கில் அறிமுகமானது. அதை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வாட்ச் அல்ட்ரா 2 (Apple Watch Ultra 2) மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 ஆகிய இரண்டுமே இந்தியாவில் ரூ.89,900 க்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
இதற்கிடையில் தான் பட்ஜெட் விலையில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலொன்று தயார் ஆகிறது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. மேலோட்டமாக பார்த்தால் இது டிஜிட்டல் க்ரவுன் (Digital crown), ஆக்ஷன் பட்டன் (Action button), ஸ்பீக்கர் கிரில்ஸ் (Speaker grilles) மற்றும் மைக்ரோஃபோன்களுக்கான இடவசதியுடன், ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 போன்ற ரக்டு டிசைனையே (Rugged Design) கொண்டுள்ளது.

ஆனால் கொஞ்சம் கவனித்து பார்த்தால், சில வேறுபாடுகளை காணமுடிகிறது. எஃப்சிசி ரெண்டர்கள் ஆனது இந்த புதிய வாட்ச் அல்ட்ரா மாடலில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 (Apple Watch 9 Series) மற்றும் பழைய மாடல்களுக்கு இணையான பிளாக் செராமிக் பேனலை (Black Ceramic Panel) சித்தரிக்கின்றன.
மேலும், வாட்ச் அல்ட்ரா 2-வில் உள்ள மெட்டல் பட்டன் (Metal Button) வழியிலான ஆக்ஷன் பட்டன் ஆனது பிளாஸ்டிக் (Plastic) ஆக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதெல்லாம் வைத்து பார்க்கும் போது, இது ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவின் பட்ஜெட் விலை வேரியண்ட் ஆக இருக்கலாம் என்கிற முடிவுக்கு வரமுடிகிறது.
நினைவூட்டும் வண்ணம் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 ஆகிய இரண்டும் நீடித்திருக்கும் விண்வெளி-தர டைட்டானியம் கேஸ் (Durable aerospace-grade Titanium case), மெட்டல் ஆக்ஷன் பட்டன் மற்றும் கலர் மேட்ச்டு செராமிக் (Colour-matched ceramic) மற்றும் சபையர் கிரிஸ்டல் பேக் பேனல் (Sapphire crystal back panel) ஆகியவற்றை கொண்டுள்ளது
இருப்பினும் இந்த எல்லா தகவல்களையும் மேலோட்டமாக எடுத்துக்கொள்வதே புத்திசாலித்தனம். ஏனெனில் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னர் எஃப்சிசி க்கு பல்வேறு முன்மாதிரிகளை (Prototypes) சமர்ப்பிக்க ஆப்பிள் கடமைப்பட்டுள்ளது. ஆக ஆப்பிளின் அடுத்த வாட்ச் அல்ட்ரா அறிமுகம் செய்யப்பட இன்னும் கணிசமான நேரம் உள்ளது. அதாவது இது உடனடி வெளியீட்டை (Imment launch) காணாது. அதற்குள் ஆப்பிள் பல மாற்றங்களை செய்யும் வாய்ப்புகளும் அதிகம்!


Click it and Unblock the Notifications








