ஐபோன் முதல் மேக் வரை.. ஆப்பிளின் புதிய ஓஎஸ் அப்டேட்.. என்னென்ன புதிய வசதிகள்.. இதோ விவரம்..
ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ், ஐபோன் டியோ மற்றும் பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது. இது சமீப ஆண்டுகளில் அந்நிறுவனம் நடத்திய மிகப்பெரிய வெளியீட்டு நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பாக இந்த நிகழ்வில், ஆப்பிளின் புதிய இயங்குதளங்கள் (ஓஎஸ்) செப்டம்பர் 14 முதல் பயனர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அறிவித்தபடியே, ஐஓஎஸ் 27 (iOS 27), ஐபேட்ஓஎஸ் 27 (iPadOS 27), மேக்ஓஎஸ் 27 (macOS 27), வாட்ச்ஓஎஸ் 27 (watchOS 27) மற்றும் டிவிஓஎஸ் 27 (tvOS 27) ஆகியவை தற்போது ஆதரவு பெறும் சாதனங்களுக்கு வெளியாகத் தொடங்கியுள்ளன. இந்த புதிய ஓஎஸ் அப்டேட்களில் பல புதிய வசதிகள், மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு, சிறந்த செயல்திறன் மற்றும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் ( Apple Intelligence) சார்ந்த புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ஐஓஎஸ் 27 மற்றும் ஐபேட்ஓஎஸ் 27
ஐஓஎஸ் 27 மற்றும் ஐபேட்ஓஎஸ் 27 அப்டேட்களில் சிரி (Siri)-க்கு பல முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது புதிய Siri ஆனது பயனர்களுடன் இயல்பாக உரையாடுவதுடன், அவர்களின் தகவல்களைப் புரிந்துகொண்டு, திரையில் உள்ளவற்றை அறிந்து, பல செயலிகளில் உள்ள பணிகளைத் தொடர்ந்து செய்யும் திறன் பெற்றுள்ளது. Siri-க்கென தனி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முந்தைய உரையாடல்களை சேமித்து வைத்துக்கொள்ளலாம். மேலும், Siri-யை தனிப்பயனாக்கும் புதிய வசதிகளும், கேமராவுடன் பயன்படுத்தக்கூடிய சிரி மோட் (Siri Mode) வசதியும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த புதிய அப்டேட்டில் லிக்விட் கிளாஸ் (Liquid Glass) வடிவமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே வசதியும், தெளிவான தோற்றமும் கிடைக்கிறது. செயலிகள் வேகமாக திறப்பது, புகைப்படங்கள் விரைவாக லோடு ஆவது மற்றும் ஏர் டிராப் (AirDrop) வேகம் அதிகரிப்பது போன்ற செயல்திறன் மேம்பாடுகளும் உள்ளன. அதேபோல் Spatial Reframing போன்ற புதிய புகைப்பட எடிட்டிங் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஷஃபாரி (Safari)-யில் தானாக Tab-களை குழுவாக பிரிக்கும் வசதியும், இணையதளங்களில் புதிய தகவல்கள் வந்தால் தெரிவிக்கும் வசதியும் அறிமுகமாகியுள்ளது. மேலும், AirPods-ல் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட Custom EQ வசதியும் தற்போது கிடைக்கிறது.
இந்த புதிய அப்டேட்டில் இமேஜ் பிளேகிரவுண்ட் (Image Playground) மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஐபேட்ஓஎஸ் 27-ல் Status Bar-ல் செயலிகளின் பெயர்களைக் காட்டும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர மேப்ஸ், வாலட், ஐகிளவுட் ஆல்பம், பேரண்டல் கண்ட்ரோல் போன்ற பல அம்சங்களிலும் சிறிய மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
iOS 27-க்கு தகுதியான ஐபோன்கள்:
- ஐபோன் 17 , ஐபோன் 17 ப்ரோ , ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் , ஐபோன் ஏர் , ஐபோன் 17இ
- ஐபோன் 16இ, ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்
- ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்
- ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்
- ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ்
- ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்
- ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்
- ஐபோன் எஸ்இ (2020), ஐபோன் எஸ்இ (2022)

மேக்ஓஎஸ் 27
மேக்ஓஎஸ் 27 கோல்டன் கேட் (macOS 27 Golden Gate)-ல் சிரி ஏஐ (Siri AI) மேலும் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இது Spotlight உடன் இணைந்து செயல்படுகிறது. பயனர்களின் தகவல்களைப் புரிந்துகொள்வது, திரையில் உள்ளவற்றை அறிதல் மற்றும் தொடர்ந்து உரையாடுவது போன்ற வசதிகள் இதில் உள்ளன. Siri-யின் உரையாடல் வரலாற்றை (history) மற்ற Apple சாதனங்களிலும் பார்க்கலாம். மேலும், Siri பேசும் வேகத்தையும் குரல் பாணியையும் பயனர்கள் மாற்றிக்கொள்ளலாம்.
இந்த அப்டேட்டில் விண்டோக்களின் வடிவமைப்பு மேலும் அழகாக மாற்றப்பட்டுள்ளது. சைடுபார் (Sidebar)-ல் வண்ணமயமான ஐகான்கள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் தகவல்களை படிப்பதும் எளிதாகிறது. Search மற்றும் Spotlight வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், தேடல் வேகமாகவும் செயல்திறன் சிறப்பாகவும் உள்ளது. அனிமேஷன்களும் மென்மையாக மாற்றப்பட்டுள்ளன. Ultrawide Display ஆதரவு மற்றும் சாதனத்தின் ஒட்டுமொத்த வேகமும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அப்டேட்டில் Safari-ல் புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இணையதளத்தில் மாற்றம் ஏற்பட்டால் Notify Me மூலம் தகவல் கிடைக்கும். Photos செயலியில் Clean Up, Extend மற்றும் Spatial Reframing போன்ற வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
வாட்ச்ஓஎஸ் 27
வாட்ச்ஓஎஸ் 27-ல் ஆப்பிள் வாட்ச்-க்கு சிரி ஏஐ (Siri AI) அறிமுகமாகியுள்ளது. இது ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் உதவியுடன் மிகவும் சிறப்பாகவும் இயல்பாகவும் செயல்படுகிறது. பயனர்களின் தகவல்களைப் புரிந்துகொண்டு தொடர்ந்து உரையாடும் வசதியும் இதில் உள்ளது. Siri-யின் உரையாடல் வரலாறு (history) மற்ற ஆப்பிள் சாதனங்களுடன் இணைக்கப்படும். மேலும் டிஜிட்டல் கிரவுன்-ஐ அழுத்தும்போது புதிய App Grid தோன்றும். இதில் Siri மற்றும் தேவையான செயலிகள் விரைவாக கிடைக்கும்.

வாட்ச்ஓஎஸ் 27-ல் ஹெல்த் (Healt) மற்றும் பிட்னஸ் (Fitness) வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இனி அருகில் iPhone இல்லாமலும் Workout Buddy வேலை செய்யும். நடை மற்றும் ஓட்டத்தின் வேகம், தூரம் மற்றும் நேரம் பற்றிய கூடுதல் தகவல்களையும் வழங்கும். Cycle Tracking-ல் மாதவிடாய் நிற்கும் காலம் தொடர்பான புதிய தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், பேட்டரி பயன்பாடு மேம்படுத்தப்பட்டு, செயலிகள் வேகமாக திறக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. Find My வசதியும் எளிமையாக மாற்றப்பட்டுள்ளது. புதிய Siri Modular watch face-ம் அறிமுகமாகியுள்ளது.
சுருக்கமாக கூறவேண்டும் என்றால் ஆப்பிளின் புதிய அப்டேட்டில் வடிவமைப்பு மற்றும் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. iPhone, iPad மற்றும் Mac சாதனங்கள் இப்போது வேகமாகவும் சிறப்பாகவும் செயல்படும். Siri-யும் பயனர்களின் கேள்விகளை நன்றாகப் புரிந்துகொள்ளும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
photo credits: 91mobiles


Click it and Unblock the Notifications
