சபாஷ்.. இனி ஐபோன் பயனர்களை கையில பிடிக்க முடியாது... வருகிறது Apple பே..
இந்தியாவில் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்த துவங்கிவிட்டனர். இந்த செயலிகளின் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்கு சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கு ஸகேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது.
அதேபோல் மின்சார கட்டணத்தைக் கூட இந்த UPI செயலிகள் மூலம் செலுத்த முடியும். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனமும் விரைவில் இந்திய பயனர்களுக்கு ஆப்பிள் பே- அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் ஆப்பிள் நிறுவனம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக இரு தரப்புக்கும் இடையிலான இந்த பேச்சுவார்த்தை தொடக்க நிலையில் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்திய பயன்களுக்காக வேண்டி பிரத்யேகமாக இந்தியாவில் பயன்படுத்தும் வகையில் தான் இதன் இயக்கம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் மற்ற யுபிஐ செயலிகள் எப்படி செயல்படுகிறதோ அது போலவே தான் இதன் இயக்கம் இருக்கும் எனத் தெரிகிறது.
குறிப்பாக பாதுகாப்பு அம்சங்களுக்கு மிகவும் பெயர்போன ஆப்பிள் நிறுவனம், யுபிஐ செயலியிலும் வாடிக்கையாளர்களின் தகவல்கள், பணம் சார்ந்த விஷயங்களை மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஆப்பிள் பே விரைவில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் சமீபத்தில் மும்பை மற்றும் டெல்லியில் ஆப்பிள் ஆஃப் லைன் ஸ்டோர்கள் திறக்கப்பட்டன. அதாவது இந்த ஸ்டோர்களை ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் திறந்து வைத்தார். இவரது வருகையால், ஆப்பிள் பிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் அந்த ஸ்டோர்களில் குவித்து பிரம்மாண்ட வரவேற்பை அவருக்கு கொடுத்தனர். அதோடு, பல மணி நேரம் காத்திருந்து, ஆப்பிள் போன்களை வாங்கி சென்றனர். இப்படி முதல் நாளிலேயே 2 கடைகளிலும் கோடிக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் வெளிவந்த தகவலின்படி, வெறும் ஒரே மாதத்தில் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள ஸ்டோர்களில் முறையே ரூ.22, ரூ.25 கோடிக்கு விற்பனை செய்துள்ளது. இவ்வளவு கோடிகளுக்கு விற்பனையிருக்கும் என்று ஆப்பிள் நிறுவனமே, எதிர்பார்த்திருக்காது, என்றே சொல்லலாம். ஏனென்றால், இவ்வளவு லாபத்தைப் பார்த்த பின்பு ஆப்பிள் நிறுவனம், மேலும் மூன்று ஆஃப் லைன் ஸ்டோர்களை இந்தியாவில் திறக்க உள்ளது.

அதாவது இந்த ஸ்டோர்கள் பிற முக்கிய நகரங்களில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் மும்பை மற்றும் டெல்லியிலேயே திறக்க ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. அந்த வகையில், மும்பையின் போரிவலி (Borivali) பகுதியில் 2025ஆம் ஆண்டு மூன்றாவது ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்படும். அதன்பின் நான்காவது ஆப்பிள் ஸ்டோர் 2026ஆம் ஆண்டு டெல்லியின் டிஎல்எஃப் ப்ரோமெனேட் மாலில் (DLF Promenade Mall) திறக்கப்படும்.
பின்பு ஐந்தாவது ஆப்பிள் ஸ்டோர் 2027ஆம் ஆண்டு மும்பையில் உள்ள வோர்லி (Worli) பகுதியில் திறப்பட்ட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், சென்னை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் வசிக்கும் ஆப்பிள் பிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர். இந்த முடிவை மாற்றி வேறு முக்கிய நகரங்களில் திறக்குமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு ஆப்பிள் நிறுவனம் என்ன முடிவெடுக்கும் என்பது வரும் காலங்களில் தெரியவரும்.


Click it and Unblock the Notifications