1977-ல் Apple உருவாக்கிய சாதனத்தின் விலை 4.71 கோடியா? அப்படி என்ன இருக்கு இதுல?
சில தினங்களுக்கு முன்பு ஒரு அன்பாக்ஸ் செய்யப்பட்ட முதல் தலைமுறை ஐபோன் சாதனம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. Apple iPhone 1st Generation இன் அசல் விலையை விட, 100 மடங்கு அதிக விலைக்கு இது ஏலத்தில் விற்கப்பட்டது.
இது உலகளவில் உள்ள ஆப்பிள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. அன்பாக்ஸ் செய்யப்பட்ட முதல் தலைமுறை ஐபோன் சாதனம் ஏலத்தில் 63,356.40 என்ற அமெரிக்க டாலர் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டது. இந்திய மதிப்பின் படி, இது சுமார் ரூ. 52.40 லட்சம் ஆகும். எது பழைய ஐபோனை 52 லட்சம் கொடுத்து வாங்கினார்களா? என்று நீங்கள் ஷாக் ஆகலாம். உண்மை இது தான்.

100 மடங்கு அதிக விலையில் விற்பனை செய்யப்படும் Apple iPhone 1st Gen மாடல்!
ஆப்பிள் ஐபோன் முதல் தலைமுறை மாடல் கடந்த 2007 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏறக்குறைய 16 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த பழைய ஐபோன் மாடலின் விலை 100 மடங்கு அதிகமாகியுள்ளது. இது விற்பனை செய்யப்பட்டு சில தினங்களே ஆகியுள்ள நிலையில், இப்போது மற்றொரு முதல் தலைமுறை ஐபோன் சாதனம் ஏல இணையதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
ஆனால், இது ஒரு சீல் செய்யப்பட்ட ஐபோன் சாதனம் ஆகும். அதாவது, இதன் கம்பெனி சீல் இன்னும் உடைக்கப்படாமல், அப்படியே புத்தம் புதிதாக பாக்சிற்குள் பாதுகாப்பாக இருக்கிறது. இந்த ஐபோன் சாதனம் இப்போது ஏலம் எடுக்க தயார்நிலையில் உள்ளது. இதுவரை, ஆறு ஏலதாரர்கள் இதன் மேல் ஆர்வம் காட்டியுள்ளனர். இதன் ஏல விலை, தற்போது 4,875 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
இந்திய மதிப்பில் இது சுமார் ரூ. 4.03 லட்சம் ஆகும். அடுத்த ஏல விலை 5,363 டாலராக கோரப்பட்டுள்ளது. இதன் படி, இந்த போனின் தற்போதைய ஏல விலை சுமார் ரூ. 4.43 லட்சத்தை நெருங்குகிறது. இந்த ஏலம் மார்ச் 17 அன்று முடிவடையும். அதுவரை ஏலம் தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதன் இறுதி விலையைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது.

1976 இல் உருவாக்கப்பட்ட ஆப்பிள்-1 கம்ப்யூட்டரின் இன்றைய விலை என்ன தெரியுமா?
இதேபோல், இன்னும் சில ஆப்பிள் தயாரிப்புகளும் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ஆப்பிள்-1 கம்ப்யூட்டர் (Apple 1 Computer) மெயின்பிரேம், ஆப்பிளின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக் கையொப்பமிட்ட மாடல் ஏலத்திற்கு வந்துள்ளது. இந்த சாதனம் 1976 ஆம் ஆண்டில், ஆப்பிளால் உருவாக்கப்பட்டது. ஆப்பிள் 200 மாடல்களை மட்டுமே தயாரித்தது, இதில் 175 ஐ விற்றது.
நான்கு சுற்று ஏலங்களுக்குப் பிறகு, இதன் மதிப்பு 71,425 டாலராக விலை உயர்ந்துள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ. 59.10 லட்சம் ஆகும். அடுத்த ஏலத்தில் அதன் விலை USD 78,568 ஆக (சுமார் ரூ. 65 லட்சம்) உயர்த்தப்படும். ஆப்பிள்-1 கம்ப்யூட்டர் மெயின்பிரேமுக்கான ஏலம் மார்ச் 17 அன்று முடிவடைகிறது.
ஏலத்திற்குச் செல்லும் மற்றொரு ரெட்ரோ ஆப்பிள் தயாரிப்பு சாதனம் என்றால், அது ஆப்பிள்-1 கன்சோல் (Apple 1 Console) ஆகும். இதற்கு முன் வரை இது ஏலத்தில் வந்ததில்லை. ஆப்பிள்-1 கன்சோல் முதன் முதலில் 1977 இல் இந்தியானாவின் கொலம்பஸில் உள்ள டேட்டா டொமைன் கணினி கடையில் ஒரு செயல் விளக்க அமைப்பாகப் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு, அது முக்கியமாக விற்பனையாளர்களால் மட்டுமே சேகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1977 இல் ஆப்பிள் உருவாக்கிய இந்த சாதனத்தின் விலை இப்போது ரூ. 4.71 கோடியா?
இது USD 500,000 டாலர் மதிப்பு வரை செல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ. 4.71 கோடிக்கு விற்கப்படும் என்று இணையதளம் எதிர்பார்க்கிறது. இதேபோல், அடுத்த ஏலத்தில், "ஸ்டீவ் ஜாப்ஸ் அண்ட் தி கம்ப்யூட்டர் ரெவல்யூஷன்" என்ற சிறப்பு ஏல விற்பனையை RR ஏல நிறுவனம் நிகழ்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் கீழ், ஸ்டீவ் ஜாப்ஸ் கையால் எழுதப்பட்ட நோட்ஸ் போன்றவை ஏலம் விடப்படவுள்ளது.
ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்திட்ட செக், ஸ்டீவ் ஜாப்ஸ் வணிக அட்டை, ஆப்பிள் IIe, மேகிண்டோஷ் 128K மாடல் கம்ப்யூட்டர், ஆப்பிள் லிசா, ஆப்பிள் கம்ப்யூட்டர் பங்குச் சான்றிதழ், ஆப்பிள் கம்ப்யூட்டர் ஹூக் ரக், ஏ கலெக்ஷன் போன்ற சில அற்புதமான ஆப்பிள் தயாரிப்புகள் ஏலத்தில் களமிறக்கப்படவுள்ளது. ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் பழைய ஆப்பிள் தயாரிப்புகள் உங்களை மிகவும் உற்சாகப்படுத்தும் என்றால், RR ஏல இணையதளத்தை நீங்கள் தவறவிடக் கூடாது.


Click it and Unblock the Notifications