சென்னையில் சாலையோரக் கடைகளை கண்டுபிடிக்க செயலி அறிமுகம்..!!
oi
-Meganathan
By Meganathan
ஸ்மார்ட்போன் மோகம் மனிதர்களை ஆட்டிப்படைக்கும் வேலையில் அவைகளில் இலவச இணைப்பாக இருப்பது தான் செயலிகள் எனப்படும் ஆப்ஸ். மனிதர்களின் அன்றாட பணிகளை ஸ்மார்ட்போன் உதவியோடு எளிமையாக சில க்ளிக்'களில் செய்து முடிக்க செயலிகள் உதவியாக இருக்கின்றது.
தினசரி பணிகளை செய்து முடிக்க உதவும், உதவிய செயலிகளின் வளர்ச்சி பல எல்லைகளை கடந்து மனிதர்களை யோசிக்க விடமால் செய்கின்றது என்றும் கூறலாம். எதற்கெடுத்தாலும் பரிந்துரைகளை வழங்கும் செயலிகள் நாளுக்கு நாள் வெளியாகும் நிலையில் சென்னைவாசிகளுக்கென பிரத்யேக செயலி ஒன்று வெளியாகியுள்ளது.
சென்னையில் இருக்கும் கையேந்தி பவன் எனப்படும் சாலையோரக் கடைகளில் சிறப்பான கடையை பரிந்துரை செய்யும் செயலி தான் 'ஃபைன்டு எ கடை'. இது ஒரு 'கிரவுட் சோர்ஸ்டு ஆப்' என்பதால் சுவையான, தரமான சாலையோரக் கடைகளைப் பற்றி தகவல்களை யார் வேண்டுமானாலும் இணைக்க முடியும்.
சாலையோர உணவகங்களில் பெரும்பாலானோர் பல்வேறு காரணங்களுக்காக தவிர்த்து வரும் நிலையில் இந்த செயலியின் வரவு பலருக்கும் சாலையோர உணவகங்களில் சாப்பிடும் ஆரவத்தை கூட்டும் என்றே கூறலாம். சுகாதாரம் மற்றும் சுவை இவை இரண்டையும் அடிப்படையாக கொண்டு சென்னையில் இயங்கி வரும் சிறந்த சாலையோர உணவகங்கள் சார்ந்த தகவல்களை இந்த செயலியில் தெரிந்து கொள்ள முடியும்.
இதுவரை நூற்றுக்கணக்கான உணவகங்களை அவைகளின் புகைப்படங்களோடு பதிவு செய்யப்பட்டிருப்பதால் செயலியை பயன்படுத்துவோர் சிரமம் இன்றி கடையை அறிந்து கொள்ள முடியும். மேலும் பழச்சாறு, டீ, காபி, டிபன், சாப்பாடு மற்றும் சிற்றுண்டி கடைகளை இச்செயலியை கொண்டு கண்டுபிடிக்க முடியும்.
அடுத்த ஆறு மாதத்திற்குள் கூடுதலாக ஆயிரம் சாலையோர கடைகளை இந்த செயலியில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இந்த செயலியை இணைந்து வெளியிட்ட ரஜோஷி தெரிவித்திருக்கின்றார். தற்சமயம் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் கிடைக்கும் இந்த செயலி விரைவில் ஐஓஎஸ் இயங்குதளத்தில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.