ஆந்திர அரசு மகளிர் தினத்தில் மொபைல் வாங்கும் பெண்களுக்கு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.!
ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் அவர்கள் வரும் மகளிர் தினத்தன்று பெண்கள் வாங்கும் மொபைல் போன்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடியும், பெண் காவலர்களுக்கு விடுமுறை என பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நமது வீட்டில் தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள் தான். அதிலும் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான். ஏன் ஒருவரின் சொந்த நாடு கூட, தாய் நாடு என்று தான் அழைக்கப்படுகிறது.

அதன்படி இந்த உலகை இயக்கும் பெண்களை போற்றும் வகையில் மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினம், உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வரும் 2021 மார்ச் 8-ல் உலக மகளிர் தினத்தை மிகவும் விமர்சையாக கொண்டாடும் விதத்தில் ஆந்திர அரசு பெண்களுக்கு பல சலுகைகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.

அண்மையில் வெளிவந்த ஆந்திர அரசு அறிக்கையில், காவல்துறையில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் மார்ச் 8-ம் தேதி விடுமுறை கொடுப்பதாகவும், பின்பு பெண்கள் பாதுகாப்பு ஆப் வசதியான திஷா செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்யும் பெண்கள் வாங்கும் மொபைல் சாதனங்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்குவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த திஷா செயலியை கல்லூரிகள் மற்றும் பிற உயர் கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில் விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என்று ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் ஆந்திர அரசு அறிவித்துள்ள செல்போன்களுக்கான இந்த தள்ளுபடி தேர்ந்தெடுக்கப்பட்ட வணிக வளாகங்களில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் மகளிர் தினத்தில் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களுக்கும் சுகாதார பரிசோதனைகள் நடத்தவும், பெண்கள் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் குறித்த குறும்பட போட்டிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications