குத்தி காட்டிய Elon Musk.. கத்தி பேச தரவுகள் இல்லை.. இவ்ளோ பேர் படிச்சவங்க இருக்கீங்க.. ஆனாலும் இந்தியாவில்?
டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆன எலான் மஸ்க் (Elon Musk), இந்தியாவின் குறைந்து வரும் கருவுறுதல் விகிதத்தை ( India's declining fertility rate) சுட்டிக்காட்டி உள்ளார். நீண்ட காலத்திற்கு மக்கள்தொகை வளர்ச்சியை தக்கவைக்க தேவையான மாற்று அளவை (Replacement level) விட நாட்டின் பிறப்பு விகிதம் குறைந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கருவுறுதல் அளவில் தொடர்ச்சியான சரிவை காட்டும் தரவுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில், "இந்தியாவின் பிறப்பு விகிதம் மாற்று அளவை விட குறைந்துள்ளது. அதிகம் படித்தவர்கள் உள்ள, இந்தியாவின் பிறப்பு விகிதம் பல ஆண்டுகளுக்கு முன்பே மாற்று அளவை விட குறைந்துவிட்டது," என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய மக்கள்தொகை தரவுகள் மற்றும் சர்வதேச அறிக்கைகள், இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (India's total fertility rate - TFR) ஆனது ஒரு பெண்ணுக்கு 1.9 பிறப்புகளாக குறைந்து, 2.1 என்ற மாற்று வரம்பிற்கு கீழே சென்றுவிட்டதை குறிப்பிடும் வேளையில் எலான் மஸ்க்கின் இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன. ஒரு தசாப்தத்திற்கு முன்பு நாட்டின் கருவுறுதல் விகிதம் சுமார் 2.3 ஆக இருந்த நிலையில், இந்த சரிவு ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கிறது.
இணையத்தில் பகிரப்பட்ட தரவுகளின்படி, பெரும்பாலான இந்திய மாநிலங்களில் கருவுறுதல் விகிதங்கள் மாற்று அளவை விட குறைந்துள்ளன. பீகார் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் மட்டுமே அந்த அளவுகோலுக்கு மேல் உள்ளன. டெல்லியின் கருவுறுதல் விகிதம் 1.2 ஆக பதிவாகியுள்ளது, இது நாட்டிலேயே மிகக் குறைந்த விகிதங்களில் ஒன்றாகும்.
ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்தின் (United Nations Population Fund - UNFPA) 2025 ஆம் ஆண்டுக்கான 'உலக மக்கள்தொகையின் நிலை' (2025 State of World Population report) அறிக்கையிலும் இந்த போக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, இந்தியாவின் மக்கள்தொகை 1.46 பில்லியனை தாண்டியுள்ள நிலையில், அதன் கருவுறுதல் விகிதம் மாற்று நிலைக்கு கீழே குறைந்துள்ளது.
2023 இல் இந்தியா, சீனாவை (China) பின்னுக்குத் தள்ளி உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக உருவெடுத்தது. மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் குழந்தை பெறும் வயது பிரிவுகளில் இருப்பதால், மக்கள்தொகை உந்தத்தின் காரணமாக மக்கள்தொகை இன்னும் வளர்ந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், தொடர்ந்து குறைந்த கருவுறுதல் விகிதங்கள் மக்கள்தொகை வளர்ச்சியை மெதுவாக்கி, இறுதியில் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் சரிவுக்கு வழிவகுக்கும்.
"பல ஆண்டுகளாக அதன் கருவுறுதல் விகிதம் குறைந்திருந்தாலும், இந்தியாவின் மக்கள்தொகை ஒரு பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. சுகாதாரம் மற்றும் கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பரந்த ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கின்றன. தாய்வழி இறப்பு மற்றும் பாலின பாகுபாடு அதிகமாகவே உள்ளன. இளம் வயதில் திருமணம் மற்றும் கர்ப்பம் தரிப்பது, 24 வயதுக்குட்பட்ட பெண்களிடையே அதிகப்படியான தாய்வழி இறப்புக்கு காரணமாகிறது," என்று யுஎன்எப்பிஏ இணையதளத்தில் உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் இந்தியா முன்னேற்றம் கண்டிருந்தாலும், பாலின சமத்துவமின்மை, தாய்மார்களின் உடல்நலம் குறித்த கவலைகள் மற்றும் குழந்தைத் திருமணம் உள்ளிட்ட சவால்கள், நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் மக்கள்தொகை போக்குகளை தொடர்ந்து பாதித்து வருகின்றன என்று ஐ.நா. அமைப்பு சுட்டி காட்டியுள்ளதாகும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications