ஆடிய ஆட்டமென்னா? எலான் மஸ்க் சேட்டை தாங்க முடியலப்பா.. ட்விட்டரைவிட்டு Bluesky-க்கு தாவும் பிரபலங்கள்
எலான் மஸ்க் (Elon Musk) கையில் சிக்கிக்கொண்ட ட்விட்டர் (Twitter) நிறுவனம் படாதபாடுபடுகிறது என்றே சொல்ல வேண்டும். பல லட்சம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய ட்விட்டர் நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதலில் ஆயிரக்கணக்கான ட்விட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்தார்.
அதன்பின் பிரபலங்களுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக்கிற்கு அதிரடியாக கட்டணத்தை அதிகரித்தார். அதேபோல கோல்டன், கிரே போன்ற புதுப்புது கலர்களில் வெரிஃபைட் டிக் அம்சத்தை கொண்டு வந்தார். குறிப்பாக, ட்விட்டரின் பறவை லோகோவை மாற்றி நாய் லோகோவை வைத்தார். அதன் பின்பு சில மணி நேரங்களிலேயே மீண்டும் பறவை படத்தையே மாற்றினார்.

இப்படி அப்டேட்களை மட்டும் கொண்டுவந்தால் பரவாயில்லை. ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனங்களின் ட்விட்டர் கணக்கை முடக்குவது, பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ப்ளூ டிக்கை பறிப்பது போன்ற செயல்களுக்கும் காரணமாக இருந்து வருகிறார்.
அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்களின் ப்ளூ டிக் பறிக்கப்பட்டு, பின்பு மீண்டும் கொடுக்கப்பட்டது. இவர்கள் மாத சந்தா கட்டவில்லை என்பதால் ப்ளூடிக் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கும் முடிக்கப்பட்டு பின்பு சீரானது.
இதைக்கூட பொறுத்துக்கொள்ளலாம், ஆனால், நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் ஜெயம் ரவியின் ப்ளூ டிக் நீக்கம் கவனிக்க வேண்டியது. இவர்கள் இருவரும் பென்னியின் செல்வன் 2ஆம் பாகத்தின் வெளியீட்டை முன்னிட்டு, அவர்களது ட்விட்டர் பக்கத்தில், தங்களது பெயர்களை மாற்றிவிட்டு படத்தின் கதாப்பாத்திரங்களின் பெயர்களை வைத்திருந்தனர். இதற்காக அவர்களது ப்ளூ டிக் பறிக்கப்பட்டிருந்தது.
இப்படி பல காரணங்களால் ட்விட்டர் பயனர்கள் நொந்துபோய் உள்ளனர். ட்விட்டர் போல வேறொரு ஆப் (App) கிடைக்காதா என்ற விரக்தி நிலைக்கே சில பிரபலங்கள் சென்றுவிட்டனர். இதனிடையேதான் ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான ஜாக் டோர்ஸி (Jack Dorsey) ப்ளூஸ்கை ( BlueSky) என்ற சோசியல் மீடியா ஆப்பை அறிமுகப்படுத்தினார்.
இந்த ப்ளூஸ்கை ஆப்பை முதலில் அதிகப்படியானோர் பயன்படுத்தவில்லை. இப்போது யூசர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துவருகிறது. இது கூகுள் பிளோ ஸ்டோரில் கிடைப்பதில்லை, ஏற்கனவே பயன்படுத்திவருவோர் உங்களுக்கு இன்வைட் லிங்க் அனுப்பினால் மட்டுமே பயன்படுத்த முடியும். இருப்பினும், ப்ளூஸ்கையின் இணையதளத்துக்கு சென்று ஜாய்ன் வெயிட்லிஸ்டில் (Join Waitlist) டேப்பை பயன்படுத்தி உங்களது மெயில் ஐடியை கொடுத்து லிங்க் வரும்வரை காத்திருக்கலாம்.
அப்போது உங்களுக்கு இன்வைட் லிங்க் கிடைக்கும். இப்படி பயன்படுத்துவதில் பல சிரமங்கள் இருந்தாலும், ட்விட்டர் மீது கொண்ட அதிருப்தியால் லட்சக்கணக்கானோர் ப்ளூஸ்கைக்கு மாற முயற்சித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாத இறுதி வரையில் வெறும் 2000 பேர் மட்டுமே ப்ளூஸ்கை ஆப்பை பயன்படுத்திவந்த நிலையில், இப்போது 40,000 ஆயிரம் பேர் பயனர்களாக இருந்து வருகின்றனர். இதில் அமெரிக்காவின் பிரபல அரசியல்வாதிகளும், திரைநட்சத்திரங்களும் அடங்கும்.
அந்த வகையில், ட்விட்டரில் 13.4 மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட அமெரிக்க அரசியல்வாதியான அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ கோர்டெஸ் ப்ளூஸ்கையில் இணைந்துள்ளார். அதேபோல 12.8 மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட திரைநட்சத்திரமும், மாடலுமான கிறிஸ்ஸி டீஜெனும் ப்ளூஸ்கையில் இணைந்துள்ளார்.
இவர்களது வருகையால் அவர்களது ஃபாலோயர்களும் ப்ளூஸ்கைக்கு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ப்ளூஸ்கை ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் கொண்டுவரவும், ட்விட்டர்போல எளிதாக டவுன்லோட் செய்து பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. இது நடந்தால் ஒரே நாளில் கோடிக்கணக்கானோர் ப்ளூஸ்கைக்கு மாற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








