"நான் மறைந்தாலும் AI மூலம் மீண்டும் வருவேன்" - ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ்
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் சீரிஸில் மறைந்த நடிகர் பால் வாக்கர், டெர்மினேட்டர் சீரிஸில் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் உள்ளிட்ட சில நடிகர்களை, ஜிஎப்எக்ஸ் (GFX) மூலம் படங்களில் இடம்பெற செய்திருந்த ஹாலிவுட் (Hollywood) வட்டாரம், இப்போது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் மறைந்த மற்றும் வயதான திரைப்பிரபலங்களை படங்களில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
தி பார்ரெஸ்ட் கம்ப் (The Forrest Gump), காஸ்ட் அவே (Cast Away) போன்ற புகழ்பெற்ற படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் (Tom Hanks) தனது மரணத்துக்கு பின்பும் அவரது நடிப்பு வாழ்க்கை ஏஐ (AI) மூலம் தொடரும் என்று நம்புகிறார். 21ஆம் நூற்றாண்டில் எந்தவொரு தொழில்நுட்பமும் அடைந்துவிடாத உச்சத்தை செயற்றை நுண்ணறிவு அடைய வாய்ப்புள்ளது. ஏனென்றால், சமீப காலமாக அதன் வளர்ச்சியை உலகம் பார்த்துவருகிறது.

தொழில்நுட்பத்துறை மட்டுமல்லாமல், கல்வி (Education), மருத்துவம் (Medical), வங்கி (Bank) உள்ளிட்ட துறைகளிலும் காலூன்றிவிட்டது. இப்போது, சினிமா (Cinema) துறையிலும் ஆதிக்கத்தை செலுத்த காத்திருக்கிறது. சினிமா என்றாலே, ஹாலிவுட் திரையுலகம் முன்னணியில் இருக்கும். ஏனென்றால், ஹாலிவுட் படங்களின் ஜிஎப்எக்ஸ், ரசிகர்களை வேறு உலகத்துக்கே கொண்டு சென்றுவிடும் வகையில் இருக்கும்.
இந்த ஜிஎப்எக்ஸ் மூலம் மறைந்த மற்றும் வயதான நடிகர்களை திரையில் காட்டி வருதிலும் ஹாலிவுட் முந்தியிருக்கிறது. பல படங்களில், நடிகர்கள் இல்லாமலேயே ஜிஎப்எக்ஸ் மூலம் அவர்களை திரையில் கொண்டுவந்துள்ளது. இருப்பினும் ஜிஎப்எக்ஸ் மூலம், ஒரு சில காட்சிகளில் மட்டுமே அப்படி செய்ய முடியும். அதுவும் நடிப்பு திறனையோ, உடல் அசைவுகளையோ, டயலாக் டெலிவரிகளையோ அப்படியே காப்பியடித்தது போல செய்துவிட முடியாது.
ஆனால், செயற்கை நுண்ணறிவு மூலம் அப்படி செய்ய முடியும். ஒருவரது குரல் முதல் உடல் அசைவுகள் வரையில் அப்படியே செய்து திரையில் காட்டிவிட முடியும். அப்படியான முயற்சிகளில் ஹாலிவுட் திரையுலம் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் தனது மரணத்துக்கு பின்பும் அவரது நடிப்பு வாழ்க்கை செயற்கை நுண்ணறிவு மூலம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் டாம் ஹாங்க்ஸ், தி ஆடம் பக்ஸ்டன் பாட்காஸ்ட் (The Adam Buxton podcast) என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அப்போது அவரிடம், உலகம் சந்தித்துவரும் புதிய தொழில்நுட்பம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டாம் ஹாங்க்ஸ் கூறுகையில், "2004ஆம் ஆண்டில் வெளியான தி போலார் எக்ஸ்பிரஸ் (The Polar Express) படம் மூலம் முதன்முதலில் நடிகர்களின் முழு தகவல்களும் கம்ப்யூட்டருக்குள் அடைக்கப்பட்டது.
அதில், எங்களின் உருவம், நடிப்பு, குரல் ஆகியவை டிஜிட்டல் மோஷன்-கேப்சர் மூலம் தத்ரூபமாக திரையில் கொண்டுவரப்பட்டது. இன்று, மேலும் பல மடங்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இப்போது, நான் விரும்பினால், மோஷன்-கேப்சர் மூலம் ஒரே நேரத்தில் 7 திரைப்படங்களில் நடிக்க முடியும். அந்த படங்களில் எனக்கு 32 வயது இருப்பதுபோலவும் காட்டிவிட முடியும். ஆனால், அதற்கு நான் இருக்க வேண்டும்.
ஆனால், செயற்கை நுண்ணறிவு மூலம் என்னை நானே மீண்டும் உருவாக்கிக் கொள்ள முடியும். நான் பேருந்தில் அடிபட்டாலும், அதே நாளில் நிகழ்ச்சிகளில் தோன்ற முடியும். இது நிச்சயம் கலைக்கான சவாலாகத்தான் இருக்கும். இதுபோன்ற தொழில்நுட்பங்களில் இருந்து நடிகர்களை காக்க பேச்சுவார்த்தையும் நடந்துவருகிறது. நான் மரணமடைந்தாலும், செயற்கை நுண்ணறிவு மூலம் நடிப்பு வாழ்க்கையை தொடர முடியும்" எனத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








