பிரைம் வீடியோ இருக்கா.. ஜூன் 17-க்கு அப்புறம் எக்ஸ்ட்ரா காசு.. ரூ.129 தேவைப்படும்.. இல்லனா விளம்பரம் வரும்!
அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) ஓடிடி சந்தா வைத்திருக்கும் சந்தாதாரர்களுக்கு ஜூன் 17ஆம் தேதி கடுப்பான நாளாக இருக்கப் போகிறது. அந்த நாளில் இருந்து இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த சந்தாதாரர்களுக்கும் விளம்பரங்கள் ஸ்ட்ரீம் செய்யப்பட இருக்கிறது. இந்த விளம்பரங்கள் வேண்டாம் என்றால், கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. மாதாந்திரம் அல்லது வருடாந்திர கட்டணத்தை செலுத்தி அதில் இருந்து தப்பிக்கலாம். இப்போது, என்ன செய்வது?
இந்தியாவில் நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார் மட்டுமல்லாமல், அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்துக்கும் ஏகப்பட்ட சந்தாதாரர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு ஜூன் 17ஆம் தேதி முதல் விளம்பரங்கள் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒன்றும் புதிது அல்ல. யுஎஸ், யுகே நாடுகளில் ஏற்கனவே விளம்பரங்கள் ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றன.

இப்போது, இந்தியாவில் அமல் செய்யப்பட இருக்கிறது. இந்த விளம்பர ஸ்ட்ரீமிங்கை தவிர்க்க வேண்டுமானால், ஆட்-ஆன் திட்டங்கள் போல 2 திட்டங்கள் இருக்கின்றன. அதாவது, உங்களிடம் இருக்கும் திட்டத்தில் கூடுதலாக கட்டணம் செலுத்தி ஆட்-ப்ரீ (Ad-free) திட்டங்களாக மாற்றி கொள்ளலாம். ரூ.129 செலுத்தினால், மாதம் முழுவதும் விளம்பரங்கள் ஸ்ட்ரீம் செய்யப்படாது.
அதேபோல ரூ.699 செலுத்தினால், வருடம் முழுவதும் விளம்பரங்கள் ஸ்ட்ரீம் செய்யப்படாது. சொல்லப்போனால், இந்த வருடாந்திர ஆட்-ப்ரீ திட்டத்தின் விலை ரூ.999ஆக இருக்கிறது. இருப்பினும், அறிமுக சலுகையாக ரூ.699 விலைக்கு அமேசான் நிறுவனம் கொடுக்கிறது. ஆகவே, ஜூன் 17ஆம் தேதி முதல் கூடுதல் செலவில் இந்த திட்டங்கள் கிடைக்க இருக்கின்றன.
விளம்பரங்கள் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டால், ஒன்றும் பிரச்சனையில்லை என்று சொல்லும் சந்தாதாரர்களுக்கு கவலை இருக்காது. ஆனால், விளம்பரங்கள் ஸ்ட்ரீமிங் பிடிக்காத கஸ்டமர்களுக்கு இது கூடுதல் கட்டணத்தை விதிக்க இருக்கிறது. அமேசான் பிரைம் வீடியோ சந்தாவை பொறுத்தவரையில் ரூ.299 விலை முதல் தொடங்குகிறது. இதற்கு ஒரு மாதம் சந்தா கிடைக்கிறது.
மூன்று மாதங்களுக்கு ரூ.599 மற்றும் 12 மாதங்களுக்கு ரூ.1,499 விலைக்கு திட்டங்கள் இருக்கின்றன. அமேசான் பிரைம் லைட் திட்டத்தில் 12 மாதங்களுக்கு ரூ.799ஆக விலை இருக்கிறது. இந்த விலையுடன் ஜூன் 17ஆம் தேதிக்கு பிறகு விளம்பரங்கள் அல்லாத ஆட்-ஆன் திட்டங்களும் கூடுதல் விலைக்கு கிடைக்கும். மற்ற ஓடிடி ஆப்களில் எப்படி?
பிரைம் வீடியோ மட்டும் இப்படி விளம்பரங்களுக்கு கட்டணம் கேட்கவில்லை. ஓடிடி ஆப்களில் பலவற்றில் இதுபோன்ற திட்டங்கள் இருக்கின்றன. ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஆப்-ஐ பொறுத்தவரையில், மொபைல், சூப்பர் மற்றும் பிரீமியம் என்று மூன்று செக்மெண்ட்டில் திட்டங்கல் கிடைக்கின்றன. இதில் பிரீமியம் தவிர மற்ற செக்மெண்டில் விளம்பரங்கள் இருக்கும்.
ஆகவே, மொபைல் செக்மெண்ட்டில் ரூ.149 விலைக்கு மூன்று மாத சந்தாவும், ரூ.499 விலைக்கு 1 வருட சந்தாவும் கிடைக்கிறது. சூப்பர் செக்மெண்ட்டில் ரூ.299 விலைக்கு 3 மாத சந்தாவும், ரூ.899 விலைக்கு 1 வருட சந்தாவும் கிடைக்கிறது. இந்த 4 திட்டங்களிலும் விளம்பங்கள் இருக்கும். பிரீமியம் திட்டங்களை பெறும்பட்சத்தில் உங்களுக்கு விளம்பரங்கள் ஸ்ட்ரீம் செய்யப்படாது.
இதன் விலையை பார்க்கையில், ரூ.299-க்கு ஒரு மாத சந்தாவும், ரூ.1,499-க்கு 1 வருட சந்தாவும் கிடைக்கிறது. மூன்று மாதங்களுக்கு ரூ.499 சந்தா இருக்கிறது. ஆனால், நெட்பிளிக்ஸ் தளத்தில் விளம்பரங்கள் கிடையாது. இது வரும் நாட்களில் மாற வாய்ப்புள்ளது. ஏனென்றால், அமேசான் பிரைம் வீடியோ, ஜியோஹாட்ஸ்டார் அதை தொடங்கிவிட்டன.


Click it and Unblock the Notifications








