அமேசான் பே இருக்கா? அறிமுகமானது ஃபிக்ஸட் டெபாசிட் வசதி.. ரூ.1000 முதல்.. அதிக வட்டி.. இதோ முழு விவரம்..
இந்தியாவில் கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே போன்றவற்றை மக்கள் அதிக பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக இது போன்ற செயலிகளில் அவ்வப்போது சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் அமேசான் பே (Amazon Pay) ஆனது ஒரு சிறப்புத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அமேசான் பே செயலி ஆனது இந்தியாவில் ஃபின்டெக் சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக யுபிஐ, ரீசார்ஜ், டிராவல் புக்கிங், விமான டிக்கெட் பதிவு, சினிமா டிக்கெட் புக்கிங் உள்ளிட்ட பல சேவை வழங்குகிறது. இந்த நிலையில் ஃபிக்ஸட் டெபாசிட் எனப்படும் நிலையான வைப்பு தொகை திட்டமும் இந்த அசேமசான் பே செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது.

இனி நீங்கள் இந்த அமேசான் பே செயலியில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யலாம். குறிப்பாக ஆண்டுக்கு 8 சதவீதம் வரை வட்டி தரக்கூடிய வகையிலான ஃபிக்சட் டெபாசிட் திட்டம் தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஐந்து வங்கிகளுடன் இணைந்து துவங்கப்பட்டுள்ளது.
அதன்படி சிவாலிக் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, சூர்யோதய் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, சவுத் இந்தியன் வங்கி, ஸ்லைஸ் மற்றும் உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி ஆகியவற்றுடன் இணைந்து தான் இந்த புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஸ்ரீராம் பைனான்ஸ், பஜாஜ் பைனான்ஸ் ஆகிய இரண்டு வங்கியல்லா நிதி நிறுவனங்கள் வாயிலாகவும் இந்த திட்டம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம். குறிப்பாக எந்த வங்கியை நாம் தேர்வு செய்கிறோம் அந்த முதலீடு பொருத்தும் ஆண்டுக்கு 8 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பெண்களுக்குக் கூடுதலாக 0.5 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் முத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.5 சதவீதம் வட்டி கிடைக்கும். பின்பு இது குறித்து அமேசான் பே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விகாஸ் கூறியது என்னவென்றால், இந்தியா முழுவதும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் மக்களிடம் மிகவும் பிரபலமானவையாக இருக்கின்றன. பெரிய அளவிலான சிக்கல் வராது, எளிமையாக முதலீடு செய்யலாம், உத்தரவாதமான வருமான கிடைக்கும் என்பதால் மக்கள் இந்த ஃபிக்ஸ்ட் டெபாசிட்களை நம்புகிறார். இதனை அடிப்படையாகக் கொண்டுதான் அமேசான் பே தற்போது இந்த திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது என்று தெரிவித்தார்.

அதேபோல் அமேசான் பே டெபாசிட் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்றால், அவர்களோடு பார்ட்னராக இருக்கக்கூடிய வங்கி அல்லது வங்கி சாராத நிதி அமைப்புகளிடம் தனியாக ஒரு சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டிய அவசியம் கிடையாது. அதாவது நேரடியாக அமேசான பே மூலம் கணக்கைத் தொடங்கி விடலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக மக்கள் இந்த அமேசான் பே செயலியை பயன்படுத்துகின்றனர். அதுவும் கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான அறிவிப்பில், இந்தியாவில் முதல் பத்து யுபிஐ செயலிகளில் அமேசான் பே ஆனது முன்னணி இடம் பிடித்துள்ளது. இதன் மூலம் 8.9 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. மேலும் தற்போது அமேசான் பே செயலியில் இந்த புதிய திட்டம் வந்துள்ளதால் இன்னும் அதிக மக்கள் இந்த செயலியைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
photo credits: cnbctv18, shutterstock


Click it and Unblock the Notifications








