ஸ்டார்லிங்கிற்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி.. ஏர்டெல்லுக்கு அடிக்குமா ஜாக்பாட்? வெளியானது முக்கிய தகவல்..
இந்தியாவில் தொழில் தொடங்கி நடத்த வேண்டும் என்றால், நாட்டின் சட்டங்களையும் விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதைத் தெளிவுபடுத்தும் வகையில், விதிகளை மீறி சாட்டிலைட் இன்டர்நெட் சேவையை வழங்க முடியாது என எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் (starlink) நிறுவனத்துக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.
சாட்டிலைட் மூலம் அதிவேக இன்டர்நெட் சேவை வழங்கும் ஸ்டார்லிங்க் திட்டத்தை இந்தியாவில் தொடங்க எலான் மஸ்க் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். இதற்கான பணிகளை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்தியாவில் தனது சேவையைத் தொடங்க ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு மத்திய அரசு இன்னும் முழுமையான அனுமதி வழங்கவில்லை. இந்தியாவில் தொழில் தொடங்கும் நிறுவனங்கள், நாட்டின் சட்டங்களையும் அரசு விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த விதிகளைப் பூர்த்தி செய்த பிறகே ஸ்டார்லிங்க் நிறுவனம் தனது இன்டர்நெட் சேவையை இந்தியாவில் தொடங்க முடியும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

குறிப்பாக இந்தியாவில் சாட்டிலைட் இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள், நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில முக்கிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதன்படி, தொலைத்தொடர்பு சேவைகளைக் கண்காணிக்க உதவும் தரைவழி கட்டுப்பாட்டு மையங்களை இந்தியாவிலேயே அமைக்க வேண்டும். இதன் மூலம், சட்ட அமலாக்க அமைப்புகள் தேவையான நேரங்களில் சேவைகளைக் கண்காணித்து, விதிமீறல்கள் ஏதேனும் நடந்தால் உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆனால், இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு செயல்பட ஸ்டார்லிங்க் நிறுவனம் இதுவரை முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இந்தியாவில் அந்நிறுவனத்தின் சேவை தொடங்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
இதுகுறித்து மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியாவின் பாதுகாப்பு விதிமுறைகளை ஸ்டார்லிங்க் நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், இந்தியாவிலேயே பேஸ் ஸ்டேஷன்களை அமைக்க ஒப்புக்கொண்டால் மட்டுமே சேவையைத் தொடங்க அனுமதி வழங்கப்படும். இந்த விவகாரத்தில் எந்த நிறுவனத்துக்கும் சிறப்புச் சலுகை கிடையாது. இந்திய சட்டங்களையும் விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றினால், ஸ்டார்லிங்க் நிறுவனம் சேவையைத் தொடங்குவதில் அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

எலான் மஸ்க் குற்றச்சாட்டுக்கு மறுப்பு
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை தொடங்குவதில் ஏற்படும் தாமதத்துக்கு, உள்ளூர் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலையீடுதான் காரணம் என எலான் மஸ்க் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளில் எந்த நிறுவனத்துக்கும் சிறப்புச் சலுகை வழங்க முடியாது என்றும், சட்டங்களைப் பின்பற்றும் நிறுவனங்கள் இந்தியாவில் சேவையைத் தொடங்குவதில் அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
யாருக்கு முதலில் அனுமதி கிடைக்கும்?
இந்தியாவில் சாட்டிலைட் மூலம் இன்டர்நெட் சேவையைத் தொடங்க, சுனில் பார்தி மிட்டல் (ஏர்டெல்), முகேஷ் அம்பானி (ஜியோ) மற்றும் எலான் மஸ்க் (ஸ்டார்லிங்க்) ஆகியோரின் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் புளூம்பெர்க் பொருளாதார மாநாட்டில் பேசிய பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் பார்தி மிட்டல், இந்தியாவில் சாட்டிலைட் இன்டர்நெட் சேவையைத் தொடங்க தங்கள் நிறுவனம் விண்ணப்பித்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டதாகத் தெரிவித்தார். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாகவே இந்தியாவில் தரைவழி கட்டுப்பாட்டு மையங்கள் தயாராக இருப்பதாகவும், சாட்டிலைட்களும் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுவிட்டதாகவும் கூறினார். இதனால், எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு முன்பாக தங்கள் நிறுவனத்துக்கு அனுமதி கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
