AI வருகையால் அழியப்போகும் 10 வேலைகள்.. முதலில் Data Entry வேலை.. லிஸ்ட் உள்ளே!
உலகம் முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளில் கோடிக்கணக்கான மனித வேலைவாய்ப்புகளை செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் பறிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் நம்பியிருக்கும் முக்கிய 10 வேலைகளை ஏஐ (AI) முழுமையாக அழித்தொழிக்குமென வேர்ல்ட் எகனாமிக் ஃபோரம் (World Economic Forum (WEF)) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைகாலமாக செயற்கை நுண்ணறிவின் அதீத வளர்ச்சியை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். கிட்டத்தட்ட எல்ல துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு தேவையென்று முடிவு செய்யப்பட்டுவிட்டது. மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி எப்படியெல்லாம் லாபத்தை பார்க்க முடியும் என்று திட்டம்போடத் தொடங்கிவிட்டன.

இந்த செயற்கை நுண்ணறிவால் எவ்வளவோ நன்மைகள் இருந்தாலும், மனித வேலைகளை அழிப்பதே அதன் முதல் தாரக மந்திரமாக இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் கோடிக்கணக்கான மனித வேலைவாய்ப்புகளை பறிக்கும். இளைஞர்களில் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
சொல்லப்போனால், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கணினிமயமாக்கல் (Computerization) மற்றும் எந்திரமயமாக்கல் (Mechanization) காரணமாக மனித வேலைகள் பறிபோனது. அந்த நேரத்திலேயே, வேலைவாய்ப்பின்மை என்றால் என்ன என்பதை உலக நாடுகள் அறிந்துகொண்டன. இருப்பினும், இவற்றால் கிடைக்கும் லாபம் பெரும் நிறுவனங்களின் கண்ணை மறைத்துவிட்டது.
இவை பெரும் நிறுவனங்களை கடந்து, சிறு-குறு நிறுவனங்கள் வரை பரவலாகிவிட்டன. இப்போது லாபம் தரும் எந்த வேலைகளிலும் கணினியோ, எந்திரமோ இல்லாமல் இருப்பதில்லை. அந்த வகையில், தொழில்துறையில் அனைத்தும் மாறிவிட்டன. ஆனால், வேலைவாய்ப்பின்மை மட்டும் மாறவே இல்லை.
இப்படிப்பட்ட சூழலில் செயற்கை நுண்ணறிவின் வருகை, மனித வேலைவாய்ப்புகளை முற்றிலும் அழித்தொழிக்கும் வகையில் தனது ஆக்கிரமிப்பை தொடங்கிவிட்டது. ஏற்கனவே, செயற்கை நுண்ணறிவு காரணமாக 2030ஆம் ஆண்டுக்குள் 80 கோடி மனித வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று, அமெரிக்காவின் நிர்வாக மேலாண்மை மற்றும் ஆலோசனை நிறுவனமான மெக்கின்ஸி அறிக்கை வெளியிட்டிருந்தது.
ஆனால், இப்போது, வேர்ல்ட் எகனாமிக் ஃபோரம் (WEF) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 10 வேலைகள் அழிந்தே போகும் அபாயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், நம் நாட்டில் பெரும்பாலான இளைஞர்கள் நம்பியிருக்கும் டேட்டா என்ட்ரி கிளர்க் (Data Entry), காசாளர் (cashier), கணக்கேடுகள் பராமரிப்பாளர் (Bookkeeping) உள்ளிட்ட முக்கியமான வேலைகளும் இடம்பெற்றுள்ளன.
அதேபோல ஆன்லைன் பேங்கிங்கில் ஏஐயின் பயன்பாடு காரணமாக ஸ்டாட்டிகல்ஸ், ஃபைனான்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் கிளார்க் (Statistics Finance and Insurance Clerk) வேலைகளும் கலாவதியாகிவிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி ஒருபக்கம் வேலைகள் அழிந்தாலும் மறுபக்கம் புதிய வேலைகளை ஏஐ உருவாக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஏஐ மற்றும் மெஷின் லேர்னிங் ஸ்பெஷலிஸ்ட் (AI and Machine Learning Specialists), டிஜிட்டல் ட்ரான்ஸ்பர்மேஷன் ஸ்பெஷலிஸ்ட் (Digital Transformation Specialist), டேட்டா அனலிஸ்ட் மற்றும் சைன்டிஸ்ட் (Data Analyst and Scientist) உள்ளிட்ட 10 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி ஏஐ தொழில்நுட்பம் பல்வேறு வேலைகளை பறித்தும், கொடுத்தும் முன்னேற காத்திருக்கிறது. இந்த நேரத்தில் மனித அறிவாற்றலை செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ப வளர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்பதே உண்மை.


Click it and Unblock the Notifications








