போச்சு.. இனி ரூ.250 இல்ல ரூ.500.. ஜூலை 1 முதல் இரயில் பயணிகள் உஷார்.. இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு!
இந்திய ரயில்வேயும், ஐஆர்சிடிசி-யும் புதிய செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ரயில்வே டிக்கெட் முன்பதிவு முறையை கொண்டுவந்து, "ஆன்லைனில்" நடக்கும் டிக்கெட் புக்கிங் தொடர்பான விதிமீறல்களை, குற்ற செயல்களை ஒடுக்கிய கையோடு, இப்போது சில முக்கியமான "ஆப்லைன்" மாற்றங்களையும் செய்துள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்ச்) சட்டம் 2026-ஐ (Jan Vishwas Act 2026) அமல்படுத்த இந்திய ரயில்வே (Indian Railways) தயாராகி வருகிறது. இச்சட்டம், ரயில்வே சட்டம் 1989 இன் கீழ் வரும் டிக்கெட் இல்லா பயணம், செல்லுபடியாகும் டிக்கெட் இன்றி பயணம் செய்தல் மற்றும் பிற குற்றங்களுக்கான அபராத தொகையை உயர்த்துகிறது.

கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட இந்த சட்டத்தின் திருத்தப்பட்ட விதிமுறைகள் ஆனது மத்திய அரசின் தனி அறிவிப்பின் மூலம் ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
டிக்கெட் இல்லா பயணம் மற்றும் அனுமதிக்கப்பட்ட தூரத்திற்கு அப்பால் பயணம் செய்தல் தொடர்பான ரயில்வே சட்டத்தின் 137 மற்றும் 138 வது பிரிவுகளில் ஒரு முக்கிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விதிமுறைகளின் படி, பயண கட்டணத்துடன் சேர்த்து விதிக்கப்படும் குறைந்தபட்ச அபராதம் ரூ.250 இலிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
டிக்கெட் இல்லா பயணத்தை தடுத்தல், ரயில்வே விதிமுறைகளை பின்பற்றுவதை ஊக்குவித்தல் மற்றும் ரயில்வே வருவாயை பாதுகாத்தல் ஆகியவை இந்த திருத்தத்தின் முக்கிய நோக்கங்களாகும். டிக்கெட் இல்லா பயணத்திற்கான அதிகபட்ச தண்டனை தொடர்பான தற்போதைய விதிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை; இதில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் முடிவின்படி ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1,000 வரை அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம்.
இத்திருத்தங்கள் 'பெனால்டி' (penalty - அதிகாரப்பூர்வ ஊழியரால் விதிக்கப்படும் கட்டணம்/அபராதம்) மற்றும் 'ஃபைன்' (fine - நீதிமன்றத்தால் விதிக்கப்படும் அபராதம்) ஆகியவற்றுக்கு இடையே தெளிவான வேறுபாட்டை ஏற்படுத்துகின்றன. அங்கீகரிக்கப்பட்ட ரயில்வே ஊழியரால் 'பெனால்டி' விதிக்கப்படலாம், அதே சமயம் நீதிமன்றத்தால் 'ஃபைன்' விதிக்கப்படலாம்.
பொதுவாக, பயணி ஒருவர் நிர்ணயிக்கப்பட்ட அபராதத்தை செலுத்த தவறினாலோ அல்லது செலுத்த மறுத்தாலோ மட்டுமே நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிரிவுகள் 137 மற்றும் 138 தவிர, இச்சட்டம் வேறு சில குற்றங்களுக்கும் அபராதங்களை நிர்ணயித்துள்ளது.
உதாரணமாக, அங்கீகரிக்கப்படாத விற்பனைக்கு (பிரிவு 144) ரூ.2,000; மதுபோதையில் தொந்தரவு செய்வதற்கு (பிரிவு 145) 24 மணிநேர சிறைத்தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம்; பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டியில் ஆண் பயணி பயணம் செய்வதற்கு (பிரிவு 162) ரூ.2,500; மற்றும் ரயில்வே வளாகம் அல்லது ரயில்களில் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் புகைபிடித்தலுக்கு (பிரிவு 167) ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.
இந்த புதிய விதிகளை மற்றும் மாற்றங்களை அறிவித்ததுடன் சேர்த்து, அனைத்துப் பயணிகளும் செல்லுபடியாகும் டிக்கெட்டுடன் பயணம் செய்யவும், ரயில்வே விதிமுறைகளை பின்பற்றவும், சோதனைகளின் போது ரயில்வே ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
முன்னதாக அறிவிக்கப்பட்ட புதிய செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ரயில்வே டிக்கெட் முன்பதிவு முறை என்றால் என்ன? இந்திய ரயில்வே, மே 2026 முதல் நாடு முழுவதும் "குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ரயில் பயணச்சீட்டு மற்றும் செயற்கை நுண்ணறிவு அட்டவணையிடல்" (Citizen-First Rail Ticketing and AI Scheduling) என்ற புதிய மேம்படுத்தலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அமைப்பில் பின்வருவன அடங்கும்:
1. செயற்கை நுண்ணறிவு மூலம் மோசடியை கண்டறிதல்'
2. நிகழ்நேர வெயிட்டிங் லிஸ்ட் ஆப்டிமைசேஷன்
3. போலி முன்பதிவுகளுக்கு எதிரான பாதுகாப்பு
4. நுண்ணறிவுமிக்க ரயில் அட்டவணை பகுப்பாய்வு. ரயில்வேயின் கூற்றுப்படி, பயணச்சீட்டு கள்ளச்சந்தையை தடுத்து, உண்மையான பயணிகளுக்கான பயணச்சீட்டு அணுகலை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.


Click it and Unblock the Notifications