கலக்குறே சந்துரு.. துபாயை தொடர்ந்து இனி இந்த நாட்டிலும் UPI யூஸ் பண்ணலாம்.. எங்கே? எப்படி?
இந்தியா தனது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை புரட்சியால், உலகளவில் தொடர்ந்து பயனடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, என்பிசிஐ (NPCI) என்கிற இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (National Payments Corporation of India) தற்போது வியட்நாமின் பாஸ்ட் பேமண்ட் சிஸ்டம் உடன் யுபிஐ (UPI) சேவையை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
துபாய் போன்ற நாடுகளில் இந்த சேவை செயல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, சர்வதேச அளவில் இந்தியாவின் வளர்ந்து வரும் நிதி செல்வாக்கிற்கு (Financial influence) இந்த நடவடிக்கை மற்றுமொரு மகுடமாக விளங்குகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சூழலை எல்லைகளுக்கு அப்பால் சீராக முன்னெடுத்து செல்வதால், இந்தியா ஒரு உலகளாவிய நிதி தொழில்நுட்பத் தலைவராக (Global fintech leader) பார்க்கப்படுகிறது.

மறுபுறம், வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் மற்றும் அங்கே வசிக்கும் இந்தியர்களுக்கான நிதி சிக்கல்களை குறைப்பதிலும் இந்திய அரசாங்கம் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நாடுகள் முன்பு நாணய பரிமாற்றம் மற்றும் பணப்பரிவர்த்தனை சிக்கல்களை எதிர்கொண்ட நிலையில், யுபிஐ செயல்படுத்தப்பட்டது ஓரளவிற்கு சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.
இந்தியன் டூரிஸம் ஆனது உலகளவில் அதிகரித்து வருவதால், நாணய சார்புநிலை அடிக்கடி நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் அடிக்கடி பயணம் செய்யும் துபாய் மற்றும் பிற இடங்களில் இது ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வியட்நாமும் இதில் இணைந்திருப்பதால், இது இந்தியாவின் உலகளாவிய பணப்பரிவர்த்தனை உத்தியில் ஒரு தெளிவான முன்னேற்றம் ஆகும், இது பயணிகள் மற்றும் வணிகங்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் எல்லை தாண்டிய பணப்பரிவர்த்தனைகளை மிகவும் எளிதாக்குகிறது.
வியட்நாமில் உள்ள மற்ற கட்டண விருப்பங்கள் யாவை?
கார்டுகள்: முக்கிய நகரங்களில் விசா மற்றும் மாஸ்டர்கார்டு பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
ரொக்கம்: தெருசந்தைகள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு இன்னும் ரொக்கம் தான் அத்தியாவசியமானதாக உள்ளது
லோக்கல் வேலட்கள்: மோமோ (MoMo) மற்றும் ஸாலோபே (ZaloPay) போன்ற ஆப்களுக்கு பொதுவாக வியட்நாமிய வங்கி கணக்குகள் தேவைப்படுகின்றன, எனவே சுற்றுலா பயணிகளுக்கு இதன் பயன்பாடு குறைவாகவே உள்ளது.
சமீபத்திய தகவல்களின்படி, யுபிஐ க்யூஆர் கட்டண முறைகள் வியட்நாம் மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்திய பயணிகளுக்காக நேரடியாக ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் முறையை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இது பணம் மற்றும் நாணய பரிமாற்றத்தின் மீதான சார்பை குறைக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
வியட்நாமில் யுபிஐ சேவையின் தற்போதைய களப் பயன்பாடு: இந்திய சுற்றுலா பயணிகள், டானாங் போன்ற சில பகுதிகளில் 9பே (9Pay) என்கிற ஃபின்டெக் தளம் மூலம் யுபிஐ பாணியிலான க்யூஆர் கட்டண முறைகளை பயன்படுத்தலாம். சுற்றுலா பயணிகள் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) மற்றும் பேடிஎம் (Paytm) போன்ற இந்திய ஆப்களை பயன்படுத்தி வியட்க்யூஆர் (VietQR) கோட்களை நேரடியாக ஸ்கேன் செய்வதன் மூலம், பயணத்தின்போது பணம் செலுத்துவதை எளிதாக்கலாம் மற்றும் நேரடி பணம் அல்லது நாணய பரிமாற்றத்தைத் தவிர்க்கலாம்.
யுபிஐ சேவை தவிர்த்து செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மாற்றம் தொடர்பான ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் இந்தியா மற்றும் வியட்நாம் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் இணையப் பாதுகாப்பு, புத்தாக்கச் சூழல் அமைப்புகள் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
பொருளாதார முன்னணியில், அத்தியாவசிய கனிமங்கள், அரிய மண் தாதுக்கள் மற்றும் விநியோக சங்கிலி மீள்திறன் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, 2030-ஆம் ஆண்டுக்குள் 25 பில்லியன் டாலர் இருதரப்பு வர்த்தக இலக்கை, இந்தியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது. இப்படியாக யுபிஐ, மருந்து துறை, சுற்றுலா, கல்வி, கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தனியார் துறையின் வலுவான பங்கேற்புடன் கையெழுத்தாகி உள்ளன.


Click it and Unblock the Notifications