போட்றா வெடிய! தடையை உடைத்து சாதித்தது ISRO-வின் PAPA.. ஏன் NASA மட்டும் தான் உலகத்தை காப்பாத்தனுமா?
ஸ்பைடர் மேன், ஐயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா போன்ற ஹாலிவுட் திரைப்படங்களானது ஒரே விஷயத்தைத்தான் மீண்டும்-மீண்டும் நமக்கு கற்பிக்க விரும்புகின்றன. அது என்னவென்றால், இந்த பூமிக்கு எந்தவொரு ஆபத்து வந்தாலும் சரி, அதை அமெரிக்க சூப்பர் ஹீரோக்களால் மட்டுமே தடுக்க முடியும்.
நிஜத்திலும் கூட சிலர் அதை நம்பிகின்றனர். அதாவது பூமிக்கு ஒரு ஆபத்து வந்தால், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA - National Aeronautics and Space Administration) தான் நம்மையெல்லாம் காப்பாற்றும் என்று நம்புகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால்.. அபாரமான விண்வெளி அறிவியல் அறிவும், தொடர்ச்சியான தொழில்நுட்ப வளர்ச்சியும் கொண்ட "எவராலும்".. இந்த பூமியை காப்பாற்ற முடியும்!

அதற்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு நம்மிடமே உள்ளது. அது தான் - இஸ்ரோ (ISRO - Indian Space Research Organisation). ஒரு ஹாலிவுட் திரைப்படம் எடுக்கும் செலவில் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் (Mangalyaan - Mars Orbiter Mission) அனுப்பியது, யாருமே தரையிறங்காத நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தை (Chandrayaan-3) வெற்றிகரமான தரை இறக்கியது என இஸ்ரோவின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
அந்த வரிசையில் ஆதித்யா எல்-1 விண்கலத்திற்கும் (Aditya-L1 satellite) ஒரு முக்கிய இடமுண்டு. இது சூரியனை ஆய்வு செய்யும் நோக்கத்தின் கீழ் அனுப்பபட்ட இந்தியாவின் முதல் ஸ்பேஸ் பேஸ்டு ஆப்ஸர்வேட்டரி (Space based observatory) ஆகும். கடந்த செப்டம்பர் 2, 2023 அன்று விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 தற்போது வெற்றிகரமாக தனது ஆய்வு வேலைகளை செய்ய தொடங்கியுள்ளது.

ஆதித்யா-எல்1 செயற்கைக்கோளின் முக்கியமான பேலோடுகளில் ஒன்றான PAPA ((Plasma Analyser Package for Aditya) குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இது சூரியக்காற்றில் உள்ள கரோனல் மாஸ் எஜெக்ஷன்களின் (Coronal mass ejections - CMEs) விளைவுகளை கண்டறிந்துள்ளது. இஸ்ரோவின் கூற்றுப்படி, கடந்த பிப்ரவரி 10 மற்றும் 11 தேதிகளில் கரோனல் மாஸ் எஜெக்ஷன்கள் நிகழ்வுகளை PAPA திறம்பட கவனித்துள்ளது.
PAPA என்றால் என்ன? இது சூரியனின் கரோனல் வெப்பமாக்கல் செயல்முறைகள் மற்றும் சூரிய மின்மாற்றங்களை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 மிஷனின் முக்கிய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்டது கருவி ஆகும். இது சூரியப்புயல்கள் மற்றும் அவற்றின் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான உணர்திறன் வாய்ந்த விண்வெளி அறிவியல் கருவிகளை வடிவமைப்பதில் இஸ்ரோ எவ்வளவு பெரிய திறமைசாலி என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு தான் இந்த PAPA!

PAPA-வில் 2 சென்சார்கள் உள்ளன! சோலார் விண்ட் எலக்ட்ரான் எனர்ஜி ப்ரோப் (Solar Wind Electron Energy Probe - SWEEP) மற்றும் சோலார் விண்ட் அயன் கம்போசிஷன் அனலைசர் Solar Wind Ion Composition Analyser - SWICAR). இந்த சென்சார்கள் முறையே எலக்ட்ரான்கள் மற்றும் அயனிகளை அளவிடும் திறனை கொண்டுள்ளன; மேலும் இவைகளால் சூரிய காற்றின் துகள்களின் திசையையும் தீர்மானிக்க முடியும்.
இதெல்லாம் கண்டுபிடிப்பதால், ஆய்வுகள் செய்வதால் பூமிக்கும், நமக்கும் என்ன நன்மை? PAPA-வின் இந்த வெற்றிகரமான அவதானிப்புகள் ஆனது.. பூமியை நேரடியாக பாதிக்கக்கூடிய சூரியப்புயல் (Solar storm) உட்பட விண்வெளி வானிலை மற்றும் சூரிய நிகழ்வுகளை பகுப்பாய்வு செய்வதற்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கும்.
நினைவூட்டும் வண்ணம், 2024 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி அன்று ஆதித்யா-எல்1 விண்கலத்தின் ஒளிவட்ட சுற்றுப்பாதை செருகலின் (Halo orbit insertion ) போது ஸ்பெக்ட்ரமில் ஒரு தற்காலிக சரிவு (Temporary dip in the spectrum) காணப்பட்டது. அப்போது பேலோட் நோக்குநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும் PAPA-வின் இரண்டு சென்சார்களும் வெற்றிகரமாக செயல்படுகின்றன; சூரிய காற்றின் துகள்களின் கலவை குறித்த தரவுகளை சேகரிக்கின்றன என்கிற தகவல் உண்மையிலேயே.. ஆதித்யா எல்1 மிஷனில் பணிபுரியும் ஒட்டுமொத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் மற்றும் நம் அனைவருக்குமே - ஒரு குட் நியூஸ் தான்!


Click it and Unblock the Notifications