போய் வா ஆதித்யா எல்1.. நேற்று இரவு நிரந்தரமாக பிரிந்து சென்றது.. ஏன்? என்ன நடந்தது?
கசப்பான உண்மை என்னவென்றால்.. ஆதித்யா எல்1 விண்கலத்தை (Aditya L1 Spacecraft) பார்த்து "போய் வா" என்று நம்மால் கூறவே முடியாது. ஏனென்றால் அதனால் போக மட்டும் தான் முடியும்; திரும்பி வரவே முடியாது. ஏனென்றால் அது போகும் இடமும், தூரமும் அப்படி!
இதற்கிடையில், செப்டம்பர் 19 ஆம் தேதி நள்ளிரவில் ஆதித்யா எல்1 விண்கலமானது பூமியை விட்டு நிரந்தரமாக பிரிந்து சென்றது. பூமி கிரகத்தை சுற்றி வந்த 17 நாட்களுக்கு பிறகு இஸ்ரோவின் முதல் சோலார் மிஷன் (First Solar Mission) ஆன ஆதித்யா எல்1 விண்கலமானது 'ஸ்லிங்ஷாட்' செய்யப்பட்டுள்ளது.

அதாவது பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள அதன் இலக்கை நோக்கி நீண்ட பயணத்திற்கு "தள்ளப்பட்டு" உள்ளது. இஸ்ரோவின் கூற்றுப்படி, செப்டம்பர் 19 ஆம் தேதி அதிகாலையில் ஆதித்யா எல்1 விண்கலத்தின் ஆன்-போர்டு என்ஜின்கள் 'ஃபையர்' செய்யப்படுவதற்கான கட்டளை வழங்கப்பட்டது; அவ்வாறே ஃபையரும் செய்யப்பட்டது
இதன் மூலம் சூரியன்-பூமி லாக்ராஞ்சியன் பாயிண்ட் 1க்கு (Sun-Earth Lagrangian Point 1) செல்லும் பாதையில் பயணிக்க போதுமான புறப்பாடு ஆற்றலை (Departure energy to travel on the trajectory) ஆதித்யா எல்1 பெற்றது. அதாவது ஆதித்யா எல்1 விண்கலமானது நமது பூமியை விட்டு நிரந்தரமாக பிரிந்தது.
ஆதித்யா எல்1 விண்கலம் சென்றடைய உள்ள லாக்ராஞ்சியன் பாயிண்ட் 1 ஆனது பூமி மற்றும் சூரியனுக்கு இடையே உள்ள 150 மில்லியன் கிமீ தூரத்தில் வெறும் 1 சதவீத தூரம் மட்டுமே ஆகும் (1.5 மில்லியன் கிமீ) என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையனத்தின் (இஸ்ரோ) கூற்றுப்படி, "ஆதித்யா எல்1 விண்கலமானது இப்போது சூரியன்-பூமி எல்1 புள்ளியை நோக்கி செல்லும் பாதையில் உள்ளது. சுமார் 110 நாட்களுக்கு பிறகு இது ஒரு சூழ்ச்சி (Maneuver ) மூலம் எல்1 சுற்றுப்பாதையில் செலுத்தப்படும்".
நினைவூட்டும் வண்ணம் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்1 மிஷன் ஆனது சூரிய கிரகத்தின் போட்டோஸ்பியர் (Photosphere), குரோமோஸ்பியர் (Chromosphere) மற்றும் கரோனாவை (Corona) ஆய்வு செய்வதை முக்கிய நோக்கமாக கொண்டு உள்ளது.
மேலும் இது விண்வெளி வானிலையின் இயக்கவியல் (Dynamics of space weather) மற்றும் துகள்கள் மற்றும் புலங்களின் பரவலையும் (Propagation of particles and fields) ஆராயும். எல்லாவற்றை விட முக்கியமான ஆதித்யா எல்1 விண்கலத்தின் இலக்கான எல்1 புள்ளியானது சூரியனின் தடையற்ற காட்சியை (Uninterrupted view of the Sun) வழங்குகிறது.
இந்த புள்ளியானது சூரிய செயல்பாடுகளையும், விண்வெளி வானிலையில் அவற்றின் தாக்கத்தையும் கவனிப்பதற்கான மிகச்சிறந்த இடமாக அமைகிறது. அதாவது இந்த புள்ளியில் எந்த மறைவோ அல்லது கிரகணமுமோ இருக்காது. குறிப்பிட்ட புள்ளியை ஆதித்யா எல்1 விண்கலம் அடைந்தவுடன், அது ஒரு ஒளிவட்ட சுற்றுப்பாதையில் நுழைந்து. அதன் மொத்தம் வாழ்நாளிற்கும் அங்கேயே இருக்கும்.
ஆதித்யா-எல்1 விண்கலமானது இஸ்ரோ மற்றும் தேசிய ஆராய்ச்சி ஆய்வகங்களால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஏழு சயின்டிஃபிக் பேலோடுகளை கொண்டுள்ளது. இந்த கருவிகள் கரோனல் வெப்பமாக்கல் (Coronal heating), கரோனல் மாஸ் எஜெக்ஷன்கள் (Coronal mass ejections), ப்ரீ-ஃப்ளேர் மற்றும் ஃப்ளேயர் செயல்பாடுகள் (Pre-flare and flare activities) பற்றிய முக்கியமான நுண்ணறிவுகளை வழங்கும்.
இந்த 7 பேலோடுகளில் 4 பேலோடுகள் சூரியனை நேரடியாக கண்காணிக்கும், மீதமுள்ள மூன்றும் எல்1 புள்ளியில் உள்ள துகள்கள் மற்றும் புலங்களை பற்றிய ஆய்வுகளை செய்யும். ஆதித்யா எல்1 மிஷன் ஆனது இந்தியாவின் விண்வெளி ஆய்வு முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.


Click it and Unblock the Notifications








