மகிழ்ச்சியோடு படிங்க: கிராமத்துக்கு செல்போன் டவர் அமைத்துக் கொடுத்த பிரபல வில்லன் நடிகர்!
ஆன்லைன் வகுப்பு படிக்க செல்போன் டவர் கிடைக்காமல் தவித்த கிராம மாணவர்களுக்காக செல்போன் டவர் அமைத்துக் கொடுத்த நடிகருக்கு மாணவர்கள் தங்களது நன்றியுணர்வை வெளிப்படுத்தினர்.

பிரபல நடிகர் சோனு சூட்
அருந்ததி படத்தில் அடியேய் பொம்மாயி என அகோர வில்லன், குஸ்தி படத்தில் அரசியல் வில்லன் என தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கியவர் நடிகர் சோனு சூட். திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் என்றாலும் இவர் நிஜ வாழ்க்கையில் நிகரற்ற ஹீரோவாக வாழ்ந்து வருகிறார்.

பல்வேறு சமூக உதவி
கொரோனா பரவல் தொடங்கிய காலம் முதல் சோனு சூட் செய்த சமூக உதவி என்ற பட்டியல் நீண்டுக் கொண்டே போகும். கொரோனா பரவலைத் தடுக்க பொது போக்குவரத்து முடக்கப்பட்டிருந்த நேரத்தில் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்து, விமானம் போன்ற ஏற்பாடுகளை செய்து உதவினார்.
உணவின்றி தவித்த பலருக்கும் உணவு
கொரோனா காலங்களில் உணவின்றி தவித்த பலருக்கும் உணவுகளை வழங்கினார். சமூகவலைதளங்களில் உதவி கேட்ட பலருக்கும் பலவகையில் உதவி செய்தார். குறிப்பாக விவசாயி ஒருவர் நிலத்தை உழுவ முடியாமல் தவித்த போது அவருக்கு டிராக்டர் வாங்கி கொடுத்து உதவினார்.உயர்கல்வியைத் தொடர விரும்பும் சலுகை இல்லா மாணவர்களுக்கு உதவித்தொகையை அறிவித்தார். மாணவர்களின் முன்னேற்றத்துக்கு பணப் பிரச்சனை தடையாக இருக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டார்.

செல்போனுக்கு டவர் கிடைக்காமல் தவித்த மாணவர்கள்
இந்த நிலையில் தற்போது செல்போனுக்கு டவர் கிடைக்காத மலைக்கிராம மாணவர்களுக்கு சோனு சூட் அமைத்து கொடுத்துள்ளார். ஹரியானா மாநிலம் மோர்னி கிராமப்பகுதியில் உள்ள மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பாடம் கற்றுக் கொள்வதற்கு செல்போன் டவர் கிடைக்காமல் சிரமப்பட்டு வந்துள்ளனர். மரத்தில் ஏறி உச்சிக்கு சென்றால்தான் டவர் கிடைக்கும் என்ற நிலை அந்த பகுதியில் இருந்துள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தை அணுகி டவர்
இந்த நிகழ்வு குறித்து சோனு சூட்டுக்கு டுவிட்டர் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் சோனு சூட் தனது நண்பர் கரண் கில்கோத்ராவை தொடர்பு கொண்டு ஏர்டெல் நிறுவனத்தை அணுகி, அந்த கிராமத்தில் டவர் அமைத்துள்ளார்.
தடையின்றி செல்போன் டவர்
சோனுசூட் நடவடிக்கையால் அந்த பகுதியில் தடையின்றி செல்போன் டவர் கிடைப்பதாகவும் இதன்மூலம் மாணவர்கள் தங்களது படிப்பை தடையின்றி கற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆன்லைன் வகுப்பில் கற்கத் தொடங்கிய மாணவர்கள் நடிகர் சோனு சூட்டுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.

இனி மரங்கள் ஏறாமல் மகிழ்ச்சியோடு படிக்கட்டும்
இதுகுறித்து சோனுசூட் கூறும்போது குழந்தைகள்தான் நமது நாட்டின் எதிர்காலம். இதுபோன்ற சவால்கள் அவர்களின் திறமைகளுக்கு தடையாக இருக்கக் கூடாது. இனி மரங்கள் ஏறாமல் மகிழ்ச்சியோடு படிக்கட்டும் என தெரிவித்துள்ளார். சோனு சூட்டின் இதுபோன்ற செயல்களுக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications