நிலாவில் டீ ஆத்தும் நபர்.. விக்ரம் லேண்டர் மீது உலகத்தின் கண்கள்.. ஆனால், இந்தியாவில் மீம்ஸ் மீதே கண்கள்!
நிலவை ஆய்வு செய்வதற்கான போட்டியில், தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும் வளர்ந்த பல நாடுகள் தோல்வியை தழுவிய நிலையில், வெற்றிக்கு மிக அருகில் இந்தியாவின் விக்ரம் லேண்டரானது, நிலவின் வளிமண்டலத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால், இங்கு ஒரு சாதாரண மீம்முக்காக (Meme) நெட்டிசன்கள் அடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க சந்திரயான் 3 விண்கலம், நிலவின் தென்துருவத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதைக்கு சென்றுவிட்ட நிலையில், அதிலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நாளை (ஆகஸ்ட் 23) மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்க இருக்கிறது.

இதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஒட்டுமொத்த உலக நாடுகளின் கண்களும், இந்தியா மீதும் விக்ரம் லேண்டர் மீதும் இருக்கிறது. இதனிடையே விக்ரம் லேண்டர் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ பகிர்ந்து 140 கோடி மக்களை தலைநிமிர செய்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது, ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் லேண்டரின் முதல் புகைப்படம் என்று, தேநீர் ஆற்றும் நபரை குறிக்கும் விதமாக கேலி சித்திரம் ஒன்றை பகிர்ந்தார்.
இந்த சித்திரத்தில் லுங்கி கட்டிக்கொண்டு, 2 கோப்பைகளில் தேநீர் ஆற்றுவதை போல ஒருவரது புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதோடு அந்த பதிவில், "பிரேக்கிங் நியூஸ்: விக்ரம் லேண்டர் எடுத்த முதல் புகைப்படம். வாவ்" என்ற வாக்கியம் இடம்பெற்றிருந்தது. இந்த ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள், இந்தியாவின் பல ஆண்டுகள் உழைப்பையும், உலகமே கவனித்து வரும் விக்ரம் லேண்டரின் லட்சியப் பயணத்தையும் இப்படி கிண்டல் அடிப்பதா? என்று கேள்வி எழுப்பி ட்விட்டரில் வார்த்தை போர் நடத்தத் தொடங்கினர்.
இதையடுத்து அவருக்கு ஆதரவாக ஒரு தரப்பும், எதிராக மற்றொரு தரப்பும் ட்வீட்களை பதிவிட தொடங்கிவிட்டன. இதுபெரும் பேசுபொருளாக மாறிவிட்ட நிலையில், பிரகாஷ் ராஜ் அதற்கு விளக்கம் அளித்தார். அதிலும், கிண்டல் இடம்பெற்றிருந்து. இதுகுறித்து அவரது விளக்கத்தில், "வெறுப்புக்கு வெறுப்பு மட்டுமே தெரியும்.
ஆர்ம்ஸ்ட்ராங் காலத்து ஜோக் ஒன்றை குறிப்பிட்டே நான் பதிவிட்டிருந்தேன். நமது கேரளாவின் சாய்வாலாவை கொண்டாடுகிறோம். எந்த சாய்வாலாவுக்கு இது ட்ரோல் செய்வது போல தெரிகிறது?. உங்களுக்கு ஜோக் புரியவில்லை என்றால், அந்த ஜோக் உங்கள் மீதே இருக்கிறது. வளருங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனால், இந்த வார்த்தை போர்கள் முற்று பெறாமல், தொடர்ந்து நீண்டு வருகிறது. இந்த சம்பவம் சர்ச்சையானதை தொடர்ந்து, கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டப் போலீஸார் புகாரின் அடிப்படையில் பிரகாஷ் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சொல்லப்போனால், நடிகர் பிரகாஷ் ராஜ், மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இவரது பல கருத்துக்கள், அவ்வப்போது, சர்ச்சைகளையும் கிளப்பியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், மத்திய அரசுக்கு எதிரான நெட்டிசன்கள், பிரதமர் மோடியை அடிக்கடி சாய்வாலாவுடன் ஒப்பிட்டு, மீம்ஸ்களை பகிர்ந்து வருவது வழக்கமாக இருக்கிறது. அவ்வளவு ஏன்? பல அரசியல்வாதிகள் கூட பிரதமர் மோடி கடந்த காலங்களில் டீ கடையில் பணிபுரிந்ததை ஒப்பிட்டு கருத்துக்களை தெரிவித்திருந்ததையும் நாம் பார்த்திருப்போம். இதனடிப்படையில், பிரகாஷ் ராஜ், பிரதமரையே குறிப்பிட்டிருப்பதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் கனவு திட்டமான சந்திராயன் 3 மற்றும் விக்ரம் லேண்டருக்கு பின்னால், பல்லாயிரக்கனக்கான விஞ்ஞானிகளின் உழைப்பு அடங்கியிருக்கிறது. அதே நேரத்தில் உலக நாடுகள் விக்ரம் லேண்டருடன் (Vikram Lander) சேர்த்து பிரதமர் மோடியையும் உற்று கவனித்து வருகின்றன. இப்படிப்பட்ட வரலாறு சிறப்புமிக்க தருணத்தில், ஒரு மீம்ஸ் பின்னால், இந்திய மக்களின் கவனம் செல்வது, சிலருக்கு வேடிக்கையாக தோன்றலாம். இதுபோன்ற தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை அறிய கிஸ்பாட் சேனலுடன் இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications








