AC-ல் உள்ள டன் எதை குறிக்கிறது? எல்லாரும் தப்பா நினைச்சுட்டு இருக்காங்க.. உண்மை இதான்.. டன் அளவு பற்றிய உண்மை?
இந்தியா முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வருவதையே வெறுப்பாக பார்க்கிறார்கள். சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் இருந்து தப்பிக்க, இப்போது மக்கள் அதிகமாக ஏர் கண்டிஷனர் (air conditioner) என்ற ஏசி (AC) சாதனங்களை வாங்கி பயன்படுத்த திட்டமிடுகிறார்கள். ஏசி என்று எடுத்துக்கொண்டால், அவை 1 டன் ஏசி, 1.5 டன் ஏசி மற்றும் 2 டன் ஏசி என்று டன் கணக்கில் (Ac Ton varities) வேறுபடுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. டன் என்ற வார்த்தையை எல்லோரும் எடை என்று தவறாக புரிந்திருக்கிறார்கள். டன் என்றால் என்ன?
டன் என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க. கோடை கால சூரிய வெப்பத்தில் இருந்து தப்பிக்க AC இப்போது முக்கியமானதாக மாறிவிட்டது. வாடகை வீட்டில் இருப்பவர்களும் கூட, இப்போது EMI முறையை பயன்படுத்தி ஏசி வாங்கி பயன்படுத்த துவங்கிவிட்டனர். டிவி (TV) போன்ற சாதனங்கள் போல் இப்போது ஏசியும் ஒரு முக்கியமான சாதனமாக மாறிவிட்டது.

ஏசியை புதிதாக வாங்க திட்டமிடுபவர்களும், இதற்கு முன்பு ஏசி வாங்கி பயன்படுத்துபவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்றால் அது ஏசியில் குறிப்பிடப்பட்டுள்ள டன் (TON) என்ற வார்த்தை தான். டன் (TON) என்ற வார்த்தையை கேட்டவுடனே எல்லோரும் இது ஏசி சாதனத்தின் எடையை குறிப்பதாக தவறாக புரிந்துகொள்கிறார்கள். இது உண்மையில் ஏசி சாதனத்தின் எடையை குறிப்பிடவில்லை என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
அப்படியானால், ஏசியில் குறிப்பிடப்படும் டன் என்ற வார்த்தை உண்மையில் எதை குறிக்கிறது? பொதுவாகவே ஏசி சாதனம் 1 டன் ஏசி (1 TON AC), 1.5 டன் ஏசி (1.5 TON AC) மற்றும் 2 டன் ஏசி (2 TON AC) என்று பிரிவுபடுத்தப்படுகின்றன. இந்த டன் என்ற வார்த்தை அந்த ஏசி சாதனத்தின் கூலிங் கெப்பாசிட்டியை குறிப்பிடுகிறது என்பதே உண்மையான பொருள் ஆகும். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால், இது ஒரு மணி நேரத்தில் ஒரு அறையிலிருந்து ஏசி எவ்வளவு வெப்பத்தை நீக்க முடியும் என்பதைக் குறிக்கிறது.
எந்த டன் ஏசி சாதனம் எவ்வளவு நேரத்தில் ஒரு அறையை வேகமாக குளிர்விக்க முடியும் என்பதை இப்போது பார்க்கலாம்.
- 1 டன் ஏசி 12,000 BTU அளவை கொண்டுள்ளது.
- இது 1 மணிநேரத்திற்குள் 12,000 BTU அளவில் அறையை குளிர்விக்கக்கூடியது.
- 1.5 டன் ஏசி 18,000 BTU அளவை கொண்டுள்ளது.
- 2 டன் ஏசி 24,000 BTU அளவை கொண்டுள்ளது.
- BTU என்பது பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டை (British Thermal Units) குறிக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், அதிக டன் அளவு இருந்தால், வேகமான மற்றும் திறமையான குளிரூட்டலை நீங்கள் அனுபவிக்க முடியும். குறிப்பாக பெரிய அறைகளுக்கு அதிக டன் அவசியம். எந்த அறைக்கு எத்தனை டன் ஏசி சிறந்ததாக இருக்கும் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும் தானே. வாருங்கள் அதையும் தெரிந்துகொள்ளலாம்.
உங்கள் அறை அளவிற்கு ஏற்ற ஏசி மாடல் எது? எத்தனை டன் ஏசி மாடல் இருந்தால் சரியானது? சரியான டன் அளவைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். உங்கள் அறை 120 சதுர அடி வரை சிறிய அறையாக இருந்தால் உங்களுக்கு 1 டன் ஏசி மாடல் ஏற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவே உங்கள் அறை 120 முதல் 180 சதுர அடிக்கு இடைப்பட்ட நடுத்தர அறையாக இருந்தால் உங்களுக்கு 1.5 டன் ஏசி ஏற்றதாக இருக்கும்.
இறுதியாக உங்கள் அறை 180 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய அறையாக இருப்பின், நீங்கள் கட்டாயம் 2 டன் ஏசி மாடலை தான் தேர்வு செய்ய வேண்டும். காரணம், பெரிய இடத்திற்கு குறைந்த சக்தி கொண்ட ஏசியைப் பயன்படுத்துவது மோசமான குளிர்ச்சியையும், அதிக மின் கட்டணத்தையும் ஏற்படுத்தும் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் மக்களே.
அறையின் அளவிற்கு ஏற்ற ஏசியை சரியாக பயன்படுத்தினால், உங்கள் மின்சார கட்டணத்தை கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சிலருக்கு இன்னும் சில சந்தேகங்கள் இருக்கலாம். உதாரணமாக சிறிய அறையில் அதிக டன் சக்தி கொண்ட ac பயன்படுத்தினால் அறை வேகமாக குளிர்ச்சியடையும் தானே, அதனால் மின்சார அளவு குறையும் தானே? என்ற கேள்வி எழுந்திருக்கலாம்.
சிறிய அறையில் அதிக டன் அளவு கொண்ட ஏசி சாதனந்தை பயன்படுத்தும் போது, உங்களது அறை வேகமாக குளிர்ச்சி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், 2 டன் ஏசி மாடலை இயக்க தேவைப்படும் ஆற்றல் சக்தி சிறிய டன் அளவு கொண்ட ஏசி மாடலை விட கணிசமாக உயர்ந்தது என்பதனால், இறுதியில் உங்கள் மின்சார கட்டணம் அதிகமாவதை உங்களால் தவிர்க்க முடியாது.
இதனால் தான், சரியாக டன் அளவு கொண்ட ஏசி மாடலை சரியான அளவு கொண்ட அறையில் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் மின்சார கட்டணத்தை கட்டுப்பாட்டில் வைக்க விரும்பினால், நீங்கள் கட்டாயமாக 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற ஏசி (5 star rating AC) மாடலைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசி மாடல்கள் குறைந்த அளவிலான மின்சாரத்தை பயன்படுத்துகின்றன.
3 ஸ்டார் ரேட்டிங் பெற்ற ஏசி மாடல்களுடன் ஒப்பிடுகையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற ஏசி மாடல்கள் கணிசமான குறைந்தளவு மின்சாரத்தை பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற நட்சத்திர மாடலை தேர்வு செய்துகொள்வது உங்களது விருப்பம். அதிக வெப்பம் உடைய இடங்களில் வசிக்கும் மக்கள் உயர்ந்த டன் அளவு கொண்ட மாடல் மற்றும் 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசி மாடல்களை தேர்வு செய்து பயன்படுத்துவது சிறப்பானது என்று அறிவுரைக்கப்படுகிறது.
ஏசிகளில் "டன்" என்பது எடையை அல்ல, குளிரூட்டும் திறனைக் குறிக்கிறது. எனவே இதன் பிறகு நீங்கள் ஒரு சிறந்த தேர்வில் ஏசியை தேர்வு செய்யலாம். சரியான டன்னைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் எப்போதும் அறையின் அளவு, இன்சுலேஷன் மற்றும் உள்ளூர் வானிலை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளுங்கள். சரியான ஏசி டன் உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும் மற்றும் உங்கள் கோடைகாலத்தை குளிர்ச்சியாகவும் வசதியாகவும் வைத்திருக்கும்.


Click it and Unblock the Notifications








