செப்டம்பர் 30 வரை இலவசம்.. குழந்தைகளின் ஆதார் அப்டேட்.. பெற்றோர்களே இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
நாடு முழுவதும் இதுவரை சுமார் 2 கோடி பள்ளி மாணவர்களின் ஆதார் (Aadhaar) பயோமெட்ரிக் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்தியா முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் புகைப்படம் மற்றும் அடிப்படை விவரங்களின் அடிப்படையில் பால் ஆதார் (Baal Aadhaar) அட்டை வழங்கப்படுகிறது. இந்த வயதில் குழந்தைகளின் கைரேகை மற்றும் கருவிழி பயோமெட்ரிக் விவரங்கள் பதிவு செய்யப்படுவதில்லை.

குறிப்பாக குழந்தைகள் 5 வயதைக் கடந்ததும் ஆதார் மையத்திற்கு நேரில் சென்று கைரேகை, கருவிழி உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களைப் பதிவு செய்வது அவசியம். அதன்பிறகு, 15 வயதை எட்டும்போது மீண்டும் அவர்களின் ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், பள்ளிகளுக்கே நேரடியாகச் சென்று மாணவர்களின் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியது. குறிப்பாக மாநில அரசுகளுடன் இணைந்து இதுவரை 1.56 லட்சம் பள்ளிகளில் ஆதார் புதுப்பிப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 2 கோடி மாணவர்களின் ஆதார் பயோமெட்ரிக் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் பயோ-மெட்ரிக் புதுப்பிப்பு இலவசமா?
குறிப்பாக 5 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பயோமெட்ரிக்கை புதுப்பிக்க இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் கடந்த செப்டம்பர், 2025 முதல் ஓராண்டுக்கு பயோ-மெட்ரிக் புதுப்பிப்பு கட்டணத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை சரியான நேரத்தில் புதுப்பித்து வைத்திருப்பது முக்கியம். இது அவர்கள் உயர்கல்வி செல்லும் போது ஆதார் தேவைப்படும் சமயங்களில் ஏற்படக்கூடிய அங்கீகாரச் (authentication) சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.
முக்கியமாக அரசின் கல்வி உதவித்தொகைகள், கல்வி சார்ந்த திட்டங்கள் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற ஆதார் அட்டை தேவைப்படுகிறது. அதேபோல், NEET, JEE, CUET போன்ற முக்கிய நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும்போதும் ஆதார் அட்டை அவசியமாகிறது.
ஆதார் பயோமெட்ரிக்கை எங்கே புதுப்பிக்கலாம்?
ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை ஆன்லைன் மூலம் புதுப்பிக்க முடியாது. குழந்தைகளைப் பெற்றோர் நேரடியாக அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு அழைத்துச் சென்று பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும். உங்கள் அருகிலுள்ள ஆதார் மையத்தை புவன் ஆதார் போர்டல் (Bhuvan Aadhaar Portal) மூலம் எளிதாகக் கண்டறியலாம்.

குறிப்பாக ஆதார் அட்டையை அபடேட் செய்ய கண்டிப்பாக குழந்தைகளின் ஆதார் அட்டையுடன் குழந்தையையும் ஆதார் மையத்துக்குப் பெற்றோர் அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு குழந்தைகளின் கைரேகைகள், கருவிழிப் படலம் மற்றும் புகைப்படம் ஆகியவை பதிவு செய்யப்படும்.
கடைசியாக ஆதார் விவரங்களைப் புதுப்பித்த பிறகு, ஆதார் மையத்தில் புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN) கொண்ட ஒப்புதல் சீட்டு வழங்கப்படும். அந்த எண்ணை பயன்படுத்தி, ஆதார் புதுப்பிப்பு கோரிக்கையின் நிலையை ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications