ஆதார் வாங்கி 10 வருஷம் ஆயிடுச்சா? அப்போ உடனே இந்த வேலையை முடிங்க.. ஏன்?
இந்தியாவில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை (Aadhaar card) மிகவும் முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. குறிப்பாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சேவைகளைப் பெறுவது முதல், குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது, வங்கி தொடர்பான சேவை, லோன் எடுப்பது, புது சிம் கார்டு வாங்குவது என பல பல விஷயங்களுக்கு இப்போது ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் 10 வருடங்களுக்கு ஒருமுறை ஆதார் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது ஆதார் அட்டை வழங்கப்பட்ட தேதியில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ள ஆதார் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும். இதன் மூலம் பொது அடையாள தரவு சேகரிப்பு மையத்தில் உங்கள் பற்றிய தகவல்கள் சரியானதாகவும் துல்லியமானதாகவும் இருக்கும்.

அதுவும் நீங்கள் ஆவணங்களைப் புதுப்பிப்பதற்காகவே UIDAI-இல் ஒரு சிறப்பு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி Myaadhaar போர்ட்டல் அல்லது Myaadhaar என்ற செயலியில் சென்று updatedocument என்ற அம்சத்தைப் பயன்படுத்தி நீங்கள் ஆவணங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை உங்களுக்கு ஆன்லைனில் ஆவணங்களை எப்படி புதுப்பிக்க வேண்டும் என்பது பற்றி சரியாகத் தெரியவில்லை என்றால், அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு சென்று ஆவணங்களின் நகலை வழங்கி, ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த சேவையை மைஆதார் 'myAadhaar' தளத்தில் மட்டுமே இலவசமாகப் பெற முடியும். நீங்கள் ஆதார் மையங்களில் நேரடியாகச் சென்று புதுப்பித்தால் வழக்கம்போல் ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்க.
அதேபோல் சிலர் ஆதார் கார்டு வாங்கிய நாள் முதல் இப்போது வரை புகைப்படத்தை மாற்றாமல் இருக்கலாம். ஆனால் அந்த புகைப்படத்தை எளிமையாக மாற்றலாம். அதேபோல சிலருக்கு சிறு வயதில் எடுத்த போட்டோ என்பதால் அடையாளமே தெரியாத அளவில் இருக்கும். எனவே தங்களது ஆதார் கார்டில் சமீபத்திய போட்டோவை அப்டேட் செய்து பயன்படுத்தத் தோன்றும். இப்போது ஆதாரில் புகைப்படம் மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
முதலில் https://uidai.gov.in/en/ என்ற இந்த யூஐடிஏஐ (UIDAI) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். இந்த இணையதளத்தில் முகப்பு பக்கத்தில் ஆதார் என்ரோல்மென்ட் படிவத்தை (Aadhaar Enrolment Form) பதிவிறக்கம் செய்து பிரிண்ட்-அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து நீங்கள் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்த அந்த படிவத்தைப் பூர்த்தி செய்து கொள்ளவும். அந்த படிவத்தை உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஆதார் சேவை மையத்தில் சென்று, ஆதார் சேவை மைய அதிகாரியிடம் அளிக்கவும். ஆதார் சேவை மையத்தில் உங்களது பயோமெட்ரிக் விவரங்களை அளிக்க வேண்டும். அனைத்தையும் சரியாக அளித்த பின்பு ஆதார் சேவை மைய அதிகாரி உங்களை அங்கேயே புகைப்படம் எடுத்துக் கொள்வார்
அவ்வளவுதான் உங்களது ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்றுவதற்கான செயல்முறை முடிந்துவிட்டது. இப்போது உங்களுக்கு ஒரு யூஆர்என் (URN) எண் அதற்கான ஒப்புதல் படிவத்துடன் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதைக் கொண்டு உங்களுக்குச் சேவையின் நிலையை நீங்கள் அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








