உங்கள் பார்வைத்திறன் எப்படி உள்ளது? இதோ 60 ரூபாயில் கண்டுபிடித்துச் சொல்ல கருவி.!

  கண்பார்வைக் குறைபாடுகளில் மிகவும் முக்கியமானது ஒளிச்சிதறல் குறைபாடு (Refractive Error)ஆகும். கிட்டப்பார்வைக் குறைபாடு, தூரப்பார்வைக் குறைபாடு மற்றும் வயது மூப்பின் காரணமாக ஒளிச்சிதறல் பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி இக்குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். தொடக்க காலத்திலேயே இக்குறைபாட்டைக் கண்டறிந்துவிட்டால் பார்வை இழப்பிலிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

  உங்கள் பார்வைத்திறன் எப்படி உள்ளது? இதோ கண்டுபிடித்துச் சொல்ல கருவி.!

  இக்குறைபாட்டைக் கண்டறிய நவீன முறையிலான சோதனைக் கருவிகள் உள்ளன. இக்கருவிகளின் வழியாக இக்குறைபாட்டை கண்டறிய அதிகக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இக்கருவிகளை இயக்கிப் பார்வைக் குறைபாட்டைக் கண்டறிய தனித்திறன் தேவை. மேலும், இக்கருவிகளின் வழியாக மிகத் துல்லியமாகப் பார்வைக் குறைபாட்டைக் கண்டறிய முடியும் என்பதற்கும் உத்திரவாதம் இல்லை. இவற்றையெல்லாம் மனதில் கொண்டு குறைந்த செலவில் மிகத் துல்லியமாக ஒளிச்சிதறல் பார்வைக் குறைபாட்டைக் கண்டறிய என்ன செய்யலாம் என யோசித்தார் கண் மருத்துவ நிபுணர், வீரேந்திரநாத் பெசாலா. இவர், ஹைதாராபத்தில் உள்ள எல்.வி.பிரசாத் கண் மருத்துவ நிறுவனத்தில் (LVPEI) பணியாற்றுகிறார். இவருடைய முயற்சியின் விளைவாக மிகக் குறைந்த செலவில், கண்பார்வைக் குறைபாட்டை மிகத் துல்லியமாகக் கண்டறியக் கூடிய கருவி நமக்குக் கிடைத்துள்ளது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  The Folding Foropter

  மடங்கும் பார்வைக் குறைபாடு அறியும் கருவி - The Folding Foropter - என இக்கருவிக்குப் பெயரிடப்பட்டுள்ளது. காகித அட்டைகளால் தயாரிக்கப்பட்டுள்ள இதனுடைய விலை 60 ரூபாய் மட்டுமே. இக்கருவியின் மூலம் ஒருவர் தாமாகவே சோதித்துத் தன்னுடைய பார்வைக் குறைபாட்டை அறிந்து கொள்ள இயலும். தேவைப்படுவோர், கொரியர் மற்றும் அஞ்சல் வழியாக ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு வெள்ளைத் தாள் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இதனை எவ்வாறு மடக்கி நீள் சதுர வடிவ சோதனைக் கருவியாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்கின்ற விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. வாங்குவோர், இக்குறிப்புகளைப் பயன்படுத்தி மிக எளிதாக இதனை மடக்கி அதனைக் கருவியாக மாற்றிக் கொள்ளலாம். இக்கருவி வழியாகப் பார்த்து பார்வைக் குறைபாட்டைச் சோதித்து அறிவதற்காக எழுத்துக்கள் அடங்கிய அட்டை ஒன்றும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. பா்வைக் குறைபாட்டைக் கண்டறிவதற்கு கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளில் இதுதான் மிகவும் விலை குறைவானது மட்டுமின்றி அனைவரும் எளிதில் பயன்படுத்தக் கூடிய கருவியாகவும் இருப்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

  எண்ணம் தோன்றியது இங்கேதான்

  2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கண்பார்வைக் குறைபாட்டைக் கண்டறிவதற்கான சிறப்பு முகாமின் போதுதான் வீரேந்திரநாத் பெசாலாவுக்கு இது போன்ற ஒரு கருவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் தோன்றியது.

  உலகின் பெரும்பாலான மக்களைப் பாதிக்கும் பார்வைக் குறைபாடு

  "உலகில் 285 மில்லியன் மக்கள் பார்வைக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 43 சதவிகித மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஒளிச்சிதறல் பார்வைக் குறைபாட்டை சரிவர கவனிக்காததால் பாதிப்படைந்தவர்கள். ஒளிச்சிதறல் குறைபாட்டை சரி செய்யாத காரணத்தால் பார்வை இழப்பைச் சந்திப்பவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 3% மட்டுமே. ஆனால் இந்தியாவில் ஒளிச்சிதறல் குறைபாட்டைக் சரிசெய்யாததன் ( uncorrected refractive error (UREs) ) காரணமாகப் பார்வை இழப்பவர்களின் எண்ணிக்கை 19 சதவிகிதமாக உள்ளது. இந்த நோயைக் கண்டறிந்து உடனடியாகக் குணப்படுத்தாவிட்டால் தனிநபர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பெரும் பாதிப்பாக அமையும்.

  விழிப்புணர்வு

  தனி நபர்களின் பார்வை இழப்பு என்பது சமூகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தும். இக்குறைபாட்டை எளிதில் கண்டறிந்து குணப்படுத்த இயலும். இருந்தாலும், வளர்ந்துவருகின்ற மற்றும் வளர்ச்சியடையாத நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் இது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது வருத்தத்தி்ற்கு உரிய விசயமாகும்" என்கின்றது, கண் மருத்துவத்துக்கான இந்திய ஆய்வு இதழ் ஒன்று. இது போன்றதொரு நிலையில்தான் இந்த மடங்கும் நிலையிலான காண்பார்வைக் குறைபாட்டைக் கண்டறியும் கருவி - Folding foropter - முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

  கடந்து வந்த சவால்கள்

  "இது போன்ற கருவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தோன்றியவுடன் பல வகையிலும் அது மேம்பட்டதாக இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். குறைந்த விலையில் இருக்க வேண்டும், எளிதில் அனைவரும் பயன்படுத்த வேண்டும், குறைபாட்டை மிகத் துல்லியமாகக் கண்டறிய வேண்டும், நீண்ட நாட்களுக்குப் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் எனப் பலவகையிலும் யோசித்து, பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு இந்தக் கருவி இப்பொழுது சாத்தியமாகி நம்முடைய கைகளில் தவழ்கிறது" எனப் பெருமிதம் பொங்கக் கூறுகிறார், எல்.வி.பிரசாத் கண் மருத்துவ நிறுவனத்தின், விரிவான கண்மருத்துவ சேவைப் பிரிவின் ஆலோசகர், டாக்டர் அந்தோணி விபின் தாஸ்.

  தொழில்நுட்பம்

  "ஒளிச்சிதறல் பார்வைக் குறைபாட்டை கண்டறிவதற்காக தற்போதைய நடைமுறைப் பயன்பாட்டில் உள்ள கருவிகள் அனைத்தும் மிகவும் தொழில்நுட்பம் வாய்த்தவையாகவும், விலை உயர்ந்ததாகவும் உள்ள நிலையில் இது போன்றதொரு கருவியை மிகவும் குறைந்த விலையில் தயாரிப்பது மிகவும் சவாலான செயலாகத்தான் இருந்தது" என்கிறார் விபின் தாஸ்.

  ஆய்வுக்குழுவின் ஒரு பிரிவினர், இக்கருவியின் துல்லியத் தன்மையைச் சோதித்தறிவதில் ஆர்வம் காட்டினர். அதே சமயத்தில் பொதுமக்கள் தாங்களே இந்தக் கருவியைப் பயன்படுத்தி பார்வைக் குறைபாட்டைச் சோதிக்கும் வகையில் எளிமையாகவும் விலை குறைவாகவும் இருப்பதற்கான ஆய்வுகளை மற்றொரு பிரிவினர் மேற்கொண்டனர்.

  காகிதத்தில் உருவான கருவி

  "மனு பிரகாஷ் என்பவர் காகிதத்தைப் பயன்படுத்தி வடிவமைத்திருந்த நுண்னோக்கியை முன்மாதிரியாகக் கொண்டு இந்தக் கருவியைத் தயாரிக்கத் திட்டமிட்டோம். கருவியின் விலை குறைவுக்கு இதுதான் மிக முக்கியக் காரணமாகும். காகிதத்தைப் பயன்படுத்திக் கருவியைத் தயாரித்தாலும், குறைபாட்டைக் கண்டறிவதில் துல்லியத் தன்மையை நிலை நிறுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தினோம். பேப்பரைப் பயன்படுத்துவது சவாலான விசயமாக இருந்தாலும், எளிதாக மடக்குவதற்கும் துளையிடுவதற்கும் இதுதான் மிகப் பொருத்தமானது என்பதைப் பின்னர் கண்டறிந்தோம். பேப்பரைப் பயன்படுத்துவதால் அதனுடைய உறுதித் தன்மையை நிலைநிறுத்துவது கடினமான சவாலாக இருந்தது. அதனைப் போன்றே இதனை வாங்குவோர் அதனை எளிதாகப் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைப்பதும் சலாலான காரியமாக இருந்தது" என இந்தக் கருவியை உருவாக்குவதற்காகத் தாங்கள் தாண்டி வந்த தடைகளையும் அதனை உடைத்தெறிந்த முறைகளையும் விளக்குகிறார் தாஸ்.

  விரைவில் விற்பனைக்கு

  இப்பொழுது, பார்வைக் குறைபாட்டைக் கண்டறிவதற்கான - Folding Foropter கருவி, இருபுறமும் லென்ஸ் பொருத்தப்பட்டு, காகிதத்தில் மடக்கி உருவாக்கப்பட்ட, தொழில் நுட்ப உதவியில்லாமல் வாங்குவோர் தானே பயன்படுத்தும் வகையில், எளிதில் அனைவரும் வாங்கக் கூடிய 60 ரூபாய் விலையில் கண் மருத்துவத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகச் சந்தைக்கு வரவிருக்கிறது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  A simple low cost paper device can tell if you need a pair of glasses ; Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more