கேப்புல நடந்த கிடா வெட்டு.. ரஷ்யா அசந்த நேரம் பார்த்து ISRO செய்த "அடேங்கப்பா" வேலை.. ஓங்குது இந்தியாவின் கை!
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிற்கு (NASA) அடுத்தபடியாக விண்வெளி ஆராய்ச்சி துறையில் ஒரு மேலாதிக்க சக்தியென்றால் அது ரஷ்யா தான். அதற்கு காரணம் ரஷ்ய நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையமான ராஸ்கோஸ்மோஸிடம் (ROSCOSMOS) உள்ள சோயுஸ் (Soyuz) ராக்கெட் தான்!
கடந்த பல தசாப்தங்களாக, விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கைக்கோள் ஏவுதலில், ரஷ்யா ஒரு மேலாதிக்க சக்தியாக, அமெரிக்காவுடன் தோளோடு தோளாக.. சரிக்கு சமமாக நிற்க - சோயுஸ் ராக்கெட் தான் காரணம். மற்ற உலக நாடுகள் தங்கள் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்துவதில் சோயுஸ் ராக்கெட் - ஒரு கில்லாடியாகும்!

குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட்டை தான் நீண்டகாலமாக நம்பி இருக்கின்றன. ஆனால் இப்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. 2022-இல் உக்ரைன் மீது படையெடுத்ததை தொடர்ந்து ஐரோப்பா மற்றும் பிற பிராந்தியங்களில் இருந்து ரஷ்யாவிற்கு கிடைத்த செயற்கைக்கோள் ஏவுதல் ஆர்டர்கள் 90% வீழ்ச்சியை கண்டுள்ளது.
அமெரிக்க வானியற்பியல் வல்லுநர் ஒருவரால் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டில் ரஷ்யாவானது, பிரிட்டன் மற்றும் பிற நாடுகளுக்காக 35 செயற்கைக்கோள் ஏவுதல்களை நடத்தியுள்ளது. இருப்பினும் புவிசார் அரசியல் பதட்டங்களை தொடர்ந்து, இந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் வெறும் 2 ஆக குறைந்துள்ளது; பின்னர் 2023 ஆம் ஆண்டில் (வெறும்) 3 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவின் இந்த பரிதாப நிலையானது, அந்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையமான ராஸ்கோஸ்மோஸின் வருவாயை கடுமையாக பாதித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் ரோஸ்கோஸ்மோஸின் வருவாய் 32.3 பில்லியன் ரூபிள் ($113.7 மில்லியன்) ஆக இருந்தது. இது கடந்த 2021 இல் வெறும் 10.5 பில்லியன் ரூபிள் ஆக குறைந்துள்ளது.
இந்த இடத்தில் தான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையான இஸ்ரோ (ISRO) "மாஸ் ஆக" என்ட்ரி கொடுக்கிறது. இந்த விஷயத்தில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். இருப்பினும் மற்ற நாடுகளின் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்புவதில், ரஷ்யா விட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கு இஸ்ரோ ஒரு தகுதியான தேர்வாக இருக்கும்.

ஏனென்றால், இஸ்ரோ பல எண்ணிக்கையிலான வெளிநாட்டு செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும், சர்வதேச வாடிக்கையாளர்களுக்காக இந்தியா 46 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2021 இல் பதிவு செய்யப்பட்ட புள்ளிவிவரங்களை விட மூன்று மடங்கு அதிகமாகும்!
இதெல்லாம் கருத்தில் கொண்டு தான், கடந்த பிப்ரவரி 28 அன்று, தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் இந்தியாவின் இரண்டாவது விண்வெளி நிலையத்திற்க்கான அடிக்கல் நாட்டபட்டதா என்று கேட்டால்.. இதற்கான சரியான பதிலை இஸ்ரோ தான் கூற வேண்டும்.
குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்படும் விண்வெளி நிலையமானது சிறிய செயற்கைக்கோள்களுக்கான ஏவுதளமாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்படும் மற்றும் ஆண்டுதோறும் 24 ஏவுகணைகளை மேற்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத்தின் கூற்றுப்படி, குலசேகரப்பட்டின ஸ்பேஸ்போர்ட் ஆனது மொபைல் ஏவுதள வசதிகளை பெறும். கூடவே இஸ்ரோ மற்றும் வளர்ந்து வரும் பிற தனியார் விண்வெளி துறைகளின் ஏவுகணைகளை விண்ணில் செலுத்துவதில் முக்கிய பங்கும் வகிக்கும்.
கடந்த மாதம், ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான ரோஸ்கோஸ்மோஸின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO of Roscosmos) ஆன யூரி போரிசோவ் (Yury Borisov), "ரோஸ்கோஸ்மோஸ் அதன் ஏற்றுமதி வருவாயில் பெரும் பகுதியை இழந்தது. இந்நிறுவனம் அதன் ஏற்றுமதி வருவாயில் 180 பில்லியன் ரூபிளை இழதுள்ளது" என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications








