புது PF ரூல்ஸ்.. இனி 75% பணம் எடுக்க எவ்ளோ நாள் ஆகும்? 100% எடுக்க எவ்ளோ நாள் ஆகும்? EPFO விளக்கம்!
இபிஎப்ஓ (EPFO) என்கிற ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organization) அறிவித்துள்ள புதிய விதிகளுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 75% பணத்தை எடுக்க எவ்வளவு காலம் ஆகும்? 100% பணத்தை எடுக்க எவ்வளவு காலம் ஆகும்? என்று இபிஎப்ஓ விளக்கம் அளித்துள்ளது.
வேலையின்மையின் போது வருங்கால வைப்பு நிதியை முன்கூட்டியே பைனல் செட்டில்மென்ட் ஆக பெறுவதற்கான குறைந்தபட்ச காலத்தை ஏற்கனவே உள்ள 2 மாதங்களிலிருந்து 12 மாதங்களாகவும், இறுதி ஓய்வூதியத்தை திரும்ப பெறுவதற்கான குறைந்தபட்ச காலத்தை 2 மாதங்களிலிருந்து 36 மாதங்களாகவும் அதிகரிப்பதாக இபிஎப்ஓ (EPFO) அறிவித்து இருந்ததது.

குறிப்பாக வேலையின்மையின் போது பிஎப் பணத்தை எடுக்க 12 மாதங்கள் காத்திருக்க வேண்டுமா என்று பிஎப் தாரர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்களுக்கு இந்த புதிய விதியை குறித்து இபிஎப்ஓ விளக்கம் அளித்துள்ளது. அதன்படி ஒரு உறுப்பினரின் 75 சதவீத தொகையை வேலையை விட்டு வெளியேறிய உடனேயே திரும்ப பெறலாம் என்றும், ஒரு வருடம் வேலையில்லாமல் இருந்த பிறகு முழுத் தொகையையும் திரும்ப பெறலாம் என்றும் இபிஎப்ஓ ளிவுபடுத்தியுள்ளது.
மேற்கண்ட புதிய விதிகள் ஆனது பணியாளரின் சேவையின் தொடர்ச்சி, சிறந்த பைனல் பிஎப் செட்டில்மென்ட் தொகை மற்றும் குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று இபிஎப்ஓ கூறியுள்ளது. கல்வி, நோய், வீட்டுவசதி மற்றும் சிறப்பு சூழ்நிலைகளுக்கான பணம் திரும்ப பெறுவதற்கான விதிமுறைகளில் கொண்டு வரப்பட்டுள்ள தளர்வுகளுடன் சேர்த்து இந்த மாற்றங்கள் அடுத்த 1-2 மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முடிவுகள் எல்லாமே - புதுதில்லியில் நடைபெற்ற சென்ட்ரல் போர்ட் ஆப் ட்ரஸ்ட்டீஸ் இபிஎப்-ன் (Central Board of Trustees EPF) 238வது கூட்டத்தில் எடுக்கப்பட்டன. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் ஆன மன்சுக் மண்டவியா தலைமையில் இது நடைபெற்ற இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட புதிய முடிவுகள் ஆனது ஒரு செய்திக்குறிப்பின் வழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன? இபிஎப்ஓ (EPFO) ஆனது ஊழியர்கள் தங்கள் பிஎப் பணத்தை எடுப்பதற்கான விதிகளில் (PF Claim Rules) 3 முக்கியமான மாற்றங்களை செய்துள்ளது. முதல் மாற்றம் - ப்ரீமெச்யூர் பைனல் செட்டில்மென்ட்டை (Premature final settlement) பெறுவதற்கான காலக்கெடுவானது 2 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது மாற்றம் - ப்ரீமெச்யூர் பென்சன் வித்ட்ராவலுக்கு (Premature pension withdrawal) தேவையான காலக்கெடுவானது 2 மாதங்களிலிருந்து 36 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மாற்றம் - உறுப்பினர்களின் கணக்கில், பங்களிப்புகளில் 25% ஐ உறுப்பினர் எப்போதும் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்பாக (minimum balance) வைத்திருக்க வேண்டும் என்கிற புதிய தேவையையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. வேலையை இழந்த பிறகு முன்கூட்டியே பணத்தை எடுக்க விரும்புவோருக்கு இது பொருந்தாது.
மேலும் பணியாளர் மற்றும் முதலாளி பங்கு உட்பட, வருங்கால வைப்பு நிதியில் உள்ள தகுதியான நிலுவைத் தொகையில் 100% வரை உறுப்பினர்கள் திரும்ப பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வித்ட்ராவல் லிமிட்களை (Withdrawal limits) தளர்த்துகிறது. மேலும் அனைத்து பார்ஷியல் வித்ட்ராவல்களுக்கும் (All partial withdrawals) குறைந்தபட்ச சேவையின் தேவை ஒரே மாதிரியாக 12 மாதங்களாக குறைக்கவும் பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








