ஆதார் முதல் வருமான வரி, பென்ஷன், போஸ்ட் ஆபிஸ் வரை.. இந்த செப்டம்பரில் அமலுக்கு வரும் 6 புதிய விதிகள்!
ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி வந்துவிட்டால் போதும். பல தரப்பட்ட துறைகளில், பல வகையான புதிய விதிகள் அமலுக்கு வருவது வழக்கமாகி விட்டது. அப்படியாக வருகிற 2025 செப்டம்பர் 1 - 30 ஆம் தேதிக்குள்.. ஆதார், வருமான வரி, ஓய்வூதியம், போஸ்ட் ஆபிஸ், எஸ்பிஐ கிரெடிட் மற்றும் இந்தியன், ஐடிபிஐ வங்கிகள் தொடர்பாக 6 புதிய விதிகள் (New Rules) அமலுக்கு வருகின்றன.
1. ஐடிஆர் தாக்கல் செய்யும் காலக்கெடு (ITR Filing Deadline): இந்த ஆண்டு மே மாதத்தில் வருமான வரித்துறை ஆனது, வருமான வரி (ஐடிஆர்) தாக்கல் செய்யும் காலக்கெடுவை ஜூலை 30 முதல் செப்டம்பர் 15, 2025 வரை என்று நீட்டித்து இருந்தது. இதனால் வரி செலுத்துவோர் வருமான வரி தாக்கல் செய்யும் கடமையை நிறைவேற்ற கூடுதலாக 46 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த காலக்கெடு நெருங்கியுள்ளது.

இந்த நிவாரணம் - கணக்குகள் தணிக்கை செய்ய தேவையில்லாத வரி செலுத்துவோருக்கு வழங்கப்பட்டது. கணக்குகள் தணிக்கை செய்யப்பட வேண்டிய வரி செலுத்துவோர் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதிக்கு முன் தங்கள் ஐடிஆரை தாக்கல் செய்ய வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
2. மத்திய அரசு ஊழியர்களுக்கான யுபிஎஸ் காலக்கெடு (NPS to UPS deadline): தேசிய ஓய்வூதிய முறையின் (National Pension System - NPS) கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (Unified Pension Scheme - UPS) தேர்வு செய்ய செப்டம்பர் 30 வரை மட்டுமே அவகாசம் வழங்கப்படும்.
என்பிஎஸ் இல் இருந்து யுபிஎஸ் க்கு மாறுவதற்கான முந்தைய காலக்கெடு ஜூன் 30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் இந்த காலக்கெடு மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அறியாதோர்களுக்கு யுபிஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்பது என்எஸ் இன் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஓய்வூதிய முறையாகும்.
3. இந்திய அஞ்சல் துறையின் ரிஜிஸ்டர்டு போஸ்ட் ஆனது ஸ்பீட் போஸ்ட் சேவையில் இணைக்கப்படுகிறது: செப்.1 முதல் அமலுக்கு வரும் வகையில், உள்நாட்டு ரிஜிஸ்டர்டு போஸ்ட் சேவையை ஸ்பீட் போஸ்ட் சேவையில் இணைக்க அஞ்சல் துறை (Department of Posts - DoP) முடிவு செய்துள்ளது. எனவே செப்.1 முதல் (நாட்டிற்குள்) இந்திய அஞ்சல் மூலம் ஏதேனும் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் அனுப்பினால், அது ஸ்பீட் போஸ்ட் டெலிவரியாக இருக்கும்.
4. எஸ்பிஐ கிரெடிட் கார்ட்டில் விதி மாற்றங்கள் (SBI Credit card new rule): எஸ்பிஐ வங்கியானது செப்டம்பர் 1, 2025 முதல் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவருகிறது . இதன்கீழ் சில கார்டுகளுக்கான ரிவார்ட் பாயிண்ட் திட்டம் திருத்தப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கியின் இந்த திருத்தத்தின் மூலம், அத்தகைய கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் கேமிங் தொடர்பான செலவுகளுக்கு (digital gaming transactions) மற்றும் அரசாங்க வலைத்தள பரிவர்த்தனைகள் தொடர்பான செலவுகளுக்கு (government website transactions) ரிவார்ட் பாயிண்ட்களை பெற முடியாது.
5. ஸ்பெஷல் பிக்ஸடு டெப்பாசிட் திட்டங்கள் (Special fixed deposit plans): இந்தியன் வங்கி (Indian Bank) மற்றும் ஐடிபிஐ வங்கி (IDBI Bank) போன்ற வங்கிகள் தற்போது சில ஸ்பெஷல் டெனர் எப்டி திட்டங்களை (Special tenor FD plans) செயல்படுத்தி வருகின்றன.
இந்தியன் வங்கியின் 444 நாள் மற்றும் 555 நாள் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30, 2025 ஆகும். அதேபோல், ஐடிபிஐ வங்கியின் 444 நாள், 555 நாள் மற்றும் 700 நாள் சிறப்பு நிலையான வைப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதியும் கூட 2205 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி ஆகும்.
6. ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க கடைசி தேதி (Aadhaar card free update last date): இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India - UIDAI) ஆனது ஆதார் ஆவண புதுப்பிப்புக்கான இலவச வசதியை மூன்று மாதங்களுக்கு நீட்டித்து இருந்தது. அதற்கான காலக்கெடு இப்போது நெருங்கியுள்ளது.
இப்போது மக்கள் தங்கள் ஆதார் விவரங்களை செப்டம்பர் 14, 2024 வரை இலவசமாக புதுப்பிக்கலாம். இதற்காக, அடையாளம் மற்றும் முகவரி தொடர்பான ஆவணங்களை யுஐடிஏஐ இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். மக்கள்தொகை தகவல்கள் சரியாக இருக்கும் வகையில் அவ்வப்போது ஆதாரை புதுப்பித்து வைத்திருப்பது அவசியம் என்று யுஐடிஏஐ கூறுவதால், அப்டேட் செய்ய வேண்டியிருந்தால் அதை செய்வது நல்லது!


Click it and Unblock the Notifications








